விடுதலைப் போருக்கு வித்திட்ட பூலித்தேவன் செப்பேடு

இந்தியாவிலேயே முதன் முதலில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் செய்தவர் பூலித்தேவன். வரி பெறுவதற்கு வந்த அலெக்சாந்தர் கெரான் என்பவனோடு 1755இல் பூலித்தேவன் செய்த போரே இந்தியாவில் கிழக்கிந்தியக் குழுமத்துக்கு எதிரான முதல் பேராகும்.

பூலித்தேவன் அளித்த கொடைச் செய்தி எழுதப்பட்ட செப்பேடு ஒன்று நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நாணயவியல் ஆய்வாளர் விஜயகுமாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அச்செப்பேடு 27 செ.மீ. நீளமும் 15 செ.மீ. அகலமும் உடையது. ஒரு கிலோ எடையுள்ள அச்செப்பேட்டில் ஒரு பக்கத்தில் மட்டும் 40 வரிகள் எழுதப்பட்டுள்ளன.

அச்செப்பேட்டை ஈரோடு கொங்கு ஆய்வு நடுவ ஆய்வாளர் புலவர் இராசு ஆய்வுசெய்து பின்வரும் செய்திகளைத் தெரிவித்துள்ளார்.அதாவது, சேரநாட்டின் ஒரு பகுதியான பூழிநாட்டை ஆண்ட பாண்டியனுக்கு உட்பட்டு ஆட்சி புரிந்ததால் பூழித்தேவன் என்ற பெயர் பூலித்தேவன் என அழைக்கப்பட்டதென்றும். அவர் முழுப்பெயர் காத்தப்ப பூலித்தேவன் என்றும் ஆய்வாளர் ந. இராசையா கூறியுள்ளார்.

1748ஆம் ஆண்டு இச்செப்பேடு எழுதப்பட்டுள்ளது. நெற்கட்டுச் செவ்வலில் கோட்டை கட்டி அவ்வூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர் பூலித்தேவன். நெற்கட்டுச் செவ்வலில் இராமகோவிந்தப்பேரி என்ற பெயரில் பெரிய குளம் இருந்தது. அக்குளம் உடைந்து சிதைந்து பல ஆண்டுகள் பாசனம் இல்லாமல் இருந்தது.

அதைச் சரி செய்யப் பூலித்தேவன் கேட்டுக் கொண்டதனால் நெற்கட்டுச் செவ்வலில் உள்ள பிறக்குடையாக் குடும்பன் என்பவர் தன் செலவில் இராமகோவிந்தபேரிக் குளத்தைப் புதுக்குளமாக அமைத்தார். அதற்குப் பதிலாக விபவ ஆண்டு ஆடி மாதம் 25ஆம் நாள் பூலித்தேவன் பிறக்குடையாக் குடும்பனுக்கு மானியபூமி நன்செய் நிலம் வழங்கியதோடு அவர் நிலங்களுக்குச் சில ஆண்டுகள் வரிச் சலுகையும் அளித்த விவரம் இந்தச் செப்பேட்டில் உள்ளது.

குளத்தில் உள்ள மீன்களைப் பிடிப்பதன் மூலம் வருகின்ற வருவாயில் இருந்து குளம் பேணிக்காப்பும், தூர் வாருதலும் நடைபெற வேண்டும் என்றும், இவற்றிற்குக் கணக்கெழுதி ஒப்புவிக்க வேண்டும் என்றும் செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலங்கள் அளக்கப்பட்டு அடையாளமாக அவற்றிற்கு எண்கள் இடப்பட்டுள்ளன.

85,86,87,88 ஆம் எண் நிலங்கள் செப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளன. பொதுவாக அக்காலச் செப்பேட்டில் வழக்கமாக இருக்கும் வடமொழிச் சொற்கள் இன்றித் தனித்தமிழில் செப்பேடு எழுதப்பட்டுள்ளது. விடுதலைப் போரை முதலில் தொடங்கிய பூலித்தேவனைப் பற்றி அரிய செய்திகளைக் கூறும் இச்செப்பேடு வரலாற்று முதன்மை வாய்ந்தது என்று புலவர் செ. இராசு கூறுகிறார்.

– நன்றி. தமிழோசை, 6-7-2008,

This entry was posted in பூலித்தேவன் and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *