“தேவர் தந்த தேவர்” -பி.கே.மூக்கையா தேவர்

தென் தமிழ் நாட்டில் பெரும்பான்மையாக வாழும் தேவர் இன மக்கள் அதிகம் இருப்பது ராமனாதபுரம், மதுரை மாவட்டங்களாகும். இதில் மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள பாப்பாப்பட்டி எனும் கிராமத்தில் 1923 ஏப்ரல் 4இல் கட்டமுத்து ஒச்ச தேவருக்கும் சேவனம்மாள் தம்பதியினருக்கு மகவாகப் பிறந்தவர் மூக்கையா தேவர்.

மாணவப் பருவத்திலேயே பொதுக் காரியங்களில் ஈடுபட்டு நியாயத்துக்காகப் போராடியவர் மூக்கையா தேவர். முக்குலத்தோர் எனப்படும் இப்பிரிவினரில் கள்ளர் இனத்தின் மேம்பாட்டுக்காக ஒரு அமைப்பினை ஏற்படுத்தி பிறமலைக் கள்ளிர் இனம் மேம்படுவதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டார். தேவர் இனத்தில் இந்த பிறமலைக் கள்ளர் இனம் பெரும்பான்மையானது. வீர பரம்பரையினரான இப்பிரிவினரை பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் குற்றப் பிரிவினராக அறிவித்து இழிவு படுத்தியிருந்தனர். சுதந்திரத்துக்குப் பிறகு இவர்களுடைய பாரம்பரிய பெருமைகளை வெளிக் கொணர்ந்து இவர்களுக்கு உரிய இடத்தைப் பெற தேசபக்தர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டனர். அந்த வகையில் மூக்கையா தேவரின் முயற்சியும் இந்த இன மக்களின் உயர்வுக்கு வழிவகுத்தது.

இளம் வயதில் இவர் பார்வார்டு பிளாக் கட்சியில் உறுப்பினரானார். காங்கிரஸ் கட்சியைப் போலவே இந்திய தேசியத்தை உயர்த்திப் பிடிக்கவும், ஆன்மிகமும் அரசியலும் கடவுளுக்கு நிகர் எனும் கோட்பாட்டை வலியுறுத்தவும் இந்தக் கட்சி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலும், தமிழகத்தில் உ.முத்துராமலிங்கத் தேவர் தலைமையிலும் வளர்ந்து வந்தது.

1952இல் நடந்த சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில் இவர் பெரியகுளம் தொகுதியிலிருந்து சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957இல் இவர் உசிலம்பட்டி தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடர்ந்து அடுத்தடுத்த தேர்தல்களிலும் 1962, 1967, 1971, 1977 ஆகிய தேர்தல்களிலும் நின்று வெற்றி பெற்றார்.

இவருடைய கட்சியின் பெருந்தலைவர் உ.முத்துராமலிங்கத் தேவர் ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனையை மூக்கையா தேவரும் சாதித்தார். ராமனாதபுரம் நாடாளுமன்றத் தொகுதில் இவர் 1971இல் வெற்றி பெற்றார். தேர்தல் முடிந்து சட்டசபை கூடி சபா நாயகரைத் தேர்ந்தெடுக்கும் முன்பு உறுப்பினர்கள் பதவி ஏற்புக்காக இடைக்கால சபா நாயகர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். அவர் சபையின் மூத்த உறுப்பினராக இருத்தல் வேண்டும். அப்படிப்பட்ட பெருமை மூக்கையா தேவருக்கும் கிடைத்தது.

1963இல் இவர் அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1971இல் இவர் அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் தலைவரானார். ஒரு அகில இந்தியக் கட்சியின் தலைமையை இவர் பெற்றது இவருக்கு மட்டுமல்ல, தென் தமிழ் நாட்டின் மக்கள் அனைவருக்குமே பெருமை சேர்த்த நிகழ்ச்சியாகும். 1971இல் இவர் நாடாளுமன்றத்தில் கச்சத்தீவு பற்றிய விவரங்களை எடுத்துக் கூறி பேசிய பேச்சு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்ப்பதை எதிர்த்து இவர் கொடுத்த குரல் என்றென்றும் மறக்க முடியாத ஒன்று. அவரது வலுவான வாதங்களையும் மீறி அந்தக் கச்சத்தீவு இலங்கைக்குக் கொடுக்கப்பட்டதன் விளைவாக இன்று வரை தமிழக மீனவர்கள் படும் இன்னல்களை நாடு அறியும்.

கல்விப் பணியிலும் இவர் அதிகம் நாட்டம் செலுத்தினார். உசிலம்பட்டி, நீலித்தினல்லூர், கமுதி ஆகிய இடங்களில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரிகளை நிறுவினார். இங்கெல்லாம் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி மட்டுமல்லாமல், தங்க இடம், உணவு ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்தார். இந்த சலுகை எல்லா இன, ஜாதி மக்களுக்கும் அளிக்கப்பட்டது என்பதுதான் குறிப்பிடத் தக்கது.

மதுரையில் கோரிப்பாளையத்தில் வைகைக் கரையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு ஒரு சிலை அமைக்க இவர் ஏற்பாடுகளைச் செய்து இன்றும் கம்பீரமாக அங்கு நாம் பார்க்கும் சிலையை நிறுவினார். இவர் “உறங்காப் புலி”, அதாவது தூங்காத புலி எனப் பெருமப் படுத்தி அழைக்கப்பட்டார்.

வீரம் மிகுந்த மண்ணின் மைந்தரான மூக்கையாத் தேவர் 1979 செப்டம்பர் 6இல் காலமானார். இவர் நினைவாக மதுரை அரசரடியில் 1990இல் ஒரு சிலை அமைத்துத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வாழ்க மூக்கையா தேவர் புகழ்!

This entry was posted in தேவர், தேவர்கள் and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *