சோழர்களின் பொருளாதாரப் போர்கள் :

ஆசியக் கண்டத்திலுள்ள இந்தியா, சீனா, இந்தோனேசியா, மலோசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் தான் தற்பொழுது உலகில் வேகமாக வளர்ச்சிப் பெற்று வரும் பொருளாதார நாடுகள். வரும் ஆண்டுகளில் ஆசிய நாடுகளின் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடையும் என்று பொருளாதார வல்லுனர்கள் கருதுகிறார்கள். இந்தியா, சீனா போன்ற நாடுகள் இன்னும் 20 முதல் 30 ஆண்டுகளில் பொருளாதார வல்லரசாக விஸ்ரூபமெடுக்கக்கூடும்.

சரி..அது கிடக்கட்டும். ஆனால பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம்முடைய பொருளாதாரம், வர்த்தகம் எப்படி இருந்தது என்பதை கொஞ்சம் அலசிப் பார்க்கும் பொழுது சுவரசியமான பல தகவல்கள் கிடைக்கின்றன.

அக் கால சோழ மன்னர்களான ராஜராஜ சோழன், ராஜேந்திரச் சோழன் போன்றோர் தன் ஆளுமையையும், அதிகாரத்தையும் நிலைநாட்ட மட்டுமில்லாமல் பொருளாதார காரணங்களுக்காகவுமே சேர, பாண்டிய, இலங்கை, சுமத்ரா, பர்மா, கடாரம் (தற்போதைய மலேசியா), மாலத் தீவுகள் போன்ற நாடுகளின் மீது படை எடுத்தனர். தன் நாட்டு வணிகர்களுக்கும், பொருளாதாரத்திற்கும் ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாகவே பலப் போர்களை சோழ மன்னர்கள் தொடுத்தார்கள். ஸ்ரீவிஜய நாட்டின் மீது போர் தொடுத்த ராஜேந்திரச் சோழன் தன் வணிகர்களுக்கு இடையுறு செய்த மன்னர்களுக்குப் பாடம் புகட்டியப் பிறகு, அவர்களிடமே ஆட்சியை ஓப்படைத்து விட்டான். தன் வணிகர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுத்தான்.

இந்த வர்த்தகச் சூழநிலையைக் கொஞ்சம் அலசுவோம்

சுமத்ரா தீவுகள், கடாரம், பர்மா போன்ற பகுதிகள் ஸ்ரீவிஜய நாடு என்று அழைக்கப்பட்டது. ராஜராஜ சோழன் காலத்தில், அந் நாட்டை ஆண்ட மன்னன் பெயர் சூடாமணிவர்மன். ஸ்ரீவிஜய நாட்டுக்கும், சோழ நாட்டுக்கும் இடைய நல்லுறவும் வர்த்தக தொடர்பும் இருந்தது. சோழ சம்ராஜ்யத்திற்கு வர்த்தகம் செய்ய ஏராளமான வர்த்த்கர்கள் ஸ்ரீவிஜய நாட்டில் இருந்து வருவார்கள். கடாரத்து இரும்பு, தேக்கு மரங்கள் போன்றவை ஸ்ரீவிஜய நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. அது போலவே சோழ நாட்டில் விவசாயம் செழித்தோங்கியதால் மிகுதியான தானியங்கள், ஏலம், மிளகு, நெசவுப் பொருட்கள் போன்றவை தெற்காசிய மற்றும் சீனா, அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. சுமத்ரா மட்டுமல்லாமல் சீனா மற்றும் அரபு நாடுகளில் இருந்தும் வர்த்தகர்கள் சோழ நாட்டில் வணிகம் செய்து கொண்டிருந்தனர். வர்த்தகத்தில் நாகப்பட்டினம் துறைமுகம் தான் முக்கிய இடம் வகித்தது. சோழ நாட்டில் பல வர்த்தக குழக்களையும் ஏற்படுத்தினார்கள் (Confederation of Indian Industries போல இருக்குமோ). பல பொருட்களில் வர்த்தகம் நடைப்பெற்றது (Commodity trading ?)

ஸ்ரீவிஜய நாட்டுடன் நல்லுறவாகச் சென்று கொண்டிருந்த வர்த்தகம், ராஜேந்திரச் சோழன் காலத்தில் பிரச்சனைகளை எதிர்கொண்டது. சூடாமணிவர்மன் காலத்திற்குப் பிறகு வந்த ஸ்ரீவிஜய மன்னர்கள் சோழர்களின் வர்த்தகத்திற்கு இடையூறுகளை ஏற்படுத்தினார்கள். குறிப்பாக சோழ நாட்டிற்கும், சீனாவிற்கும் இடைய இருந்த வர்த்தகத்தை சீர்குலைக்கும் முயற்ச்சியிலோ, அல்லது சீனாவுடன் தங்களுடைய வர்த்தகத்தை மேம்படுத்தி சோழ நாட்டு வர்த்தகத்தை பாதிப்படையச் செய்யும் செயலிலோ, ஸ்ரீவிஜய மன்னர்கள் ஈடுபட்டதாகக் கருதப்படுகிறது. தன் வர்த்தகத்திற்கு இடையூறு ஏற்ப்பட்டதால் ஆத்திரம் அடைந்த ராஜேந்திரச் சோழன் தனது கடற்ப்படையைக் கொண்டு ஸ்ரீவிஜயா நாட்டின் மீது 1025ம் ஆண்டு போர் தொடுத்தான் (உலக வர்த்தகத்தில் நிகழ்ந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளைக் குறிக்கும் இணையத் தளத்தில் இந்த நிகழ்வும் இடம் பெற்றுள்ளது)

போரில் வெற்றிப் பெற்ற ராஜேந்திரச் சோழன், அந் நாட்டை தானே ஆட்சி செய்யாமல், அம் மன்னர்களிடமே ஆட்சியை ஒப்படைத்து விட்டு, ஸ்ரீவிஜய நாட்டை, கப்பம் கட்டும் ஒரு குறிநில நாடாக, சோழ சாம்ராஜ்யத்தின் கீழ் கொண்டு வந்தான்.அது போலவே சோழ மன்னர்களின் வர்த்தகத்திற்கு பெரும் சவாலாக விளங்கியவர்கள் அரபு நாட்டைச் சேர்ந்தவர்கள். தெற்காசிய நாடுகளில் தங்களது வர்த்தகம் அரபு நாட்டை சேர்ந்தவர்களால் பாதிப்படையக் கூடும் என்று கருதிய சோழர்கள் அவர்களின் வர்த்தகத்தை தடுக்க முனைந்தார்கள். அரபு நாடுகள் மீது அவர்களால் படையெடுக்க இயலாத சூழ்நிலையில், அவர்களின் வர்த்தக மையங்களாக விளங்கிய மாலத்தீவுகள், மலபார் பகுதிகள் (சேர நாடு) மற்றும் இலங்கை போன்ற நாடுகளின் மீது படையெடுத்து, அந் நாடுகளைத் தங்களின் ஆளுமைக்கு கொண்டு வந்தார்கள். இதன் மூலம் தங்கள் வர்த்தகத்தை பாதுகாத்துக் கொண்டார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால், அரபு நாட்டுடனும் சோழர்கள் வர்த்தகம் செய்துள்ளார்கள். தங்கள் வர்த்தகம் செழிக்க வேண்டும், ஆனால் தங்களுடன் போட்டியிடுபவர்களின் வர்த்தக தளங்களை அழிக்க வேண்டும் என்ற எண்ணமே பலப் போர்களுக்கு காரணமாக இருந்திருக்கிறது. இவ்வாறு தான் இலங்கையின் தலைநகராக விளங்கிய அணுராதாபுரத்தை நிர்மூலமாக்கி, தங்களுக்கு வசதியான இடத்தில் புதிய தலைநகரை உருவாக்கினார்கள்.

சோழ நாட்டின் பொருளாதாரம் தற்பொழுது உள்ளது போலவே வரி விதிப்பு மூலமே நிர்வாகிக்கப்பட்டது. நில வரி மட்டுமல்லாமல், வர்த்தக வரியும் விதிக்கப்ப்ட்டது. வர்த்தகம் செழித்தோங்கினால் தான் தங்களுக்கு வரி கிடைக்கும், என்ற எண்ணமே, தங்கள் வர்த்தகத்திற்குப் பாதிப்பு ஏற்பட்ட பொழுதெல்லாம் அவர்களை போர் செய்யத் தூண்டியது.

பொருளாதாரம் மட்டுமில்லாமல் சோழ நாட்டைப் போன்ற மாபொரும் சாம்ராஜயத்தை நிர்வகிக்க கல்வி மிக முக்கியம் எனக் கருதிய சோழர்கள், கோயில்களில் கல்விச் சாலைகளை தோற்றுவித்தார்கள் (Human Resouce Development). சமய நூல்கள் மட்டுமல்லாது கணிதம், வானசாஸ்திரம் போன்றவையும் இந்தக் கல்விச் சாலைகளில் கற்றுத்தரப்பட்டது. அக் காலத்தில் சோழ நாட்டில் படிப்பறிவு அதிகமிருந்ததாக தெரிகிறது.

மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை நிர்வாகம் செய்ய கிரமங்களில் நிர்வாகக் குழுக்களை ஏற்படுத்தினார்கள். கிராம நிர்வாகங்களை கவனித்தல், வரி விதித்தல், சட்டம் ஒழுங்கு, உணவு சேமிப்பு போன்றவை இந்தக் கிராமக் குழுக்களிடமே இருந்தது (Decentralization). இந்தக் குழு ஓட்டெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் என்பது தான் ஹைலைட் (Democracy).

இவ்வாறு ஏற்றமுடன் இருந்த இந்தியப் பொருளாதாரம், பிரிட்டிஷாரின் வரவுக்குப் பிறகு நிர்மூலமாகி, ஏழை நாடாகி, இன்று மறுபடியும் எழுத்தொடங்கியிருக்கிறது

கிழக்காசிய நாடுகளில் இப்போது இந்தேனேசியா,மலேசியாவில் இஸ்லாமும், தாய்லாந்து, கம்போடியா, வியட்நாமில் பெளத்தமும், பர்மா இராணுவ ஆட்சி என்றாலும் பெளத்தசார்பு மக்களே அதிகமாக இருக்கின்றனர். இவ்வாறு சோழர் பேரரசின் காலத்தின் பின்னர் இந்து சமயம் அங்கிருந்து மறைந்து போய் விட்டாலும் கூட, அதன் எச்சங்கள் இன்னும் அங்கேயே இருக்கின்றன. இப்போதும் கூடக் குறித்தளவு மக்கள் சைவ வழிபாட்டை மேற்கொள்கின்றனர்.

சோழர் செய்த தவறு என்னவென்றால், அந்த நாடுகளைக் கைப்பற்றிய பின்னர், அந்தநாட்டு அரசாங்கத்தைத் திரும்ப அந்நாட்டவரிடம் ஒப்படைத்து விட்டு, அவர்களைக் குறுநில மன்னர்கள் போல வைத்திருந்தது தான். இதனால், தமிழரின் மொழி, பண்பாடு, கலாச்சரங்களை அவர்களுக்கு எங்களால் கொடுக்க முடியாமல் போய் விட்டது.

அக்காலத்தில் ஆசியாவில் எழுத்து வடிவமைப்பைக் கொண்ட ஒரு சிலமொழிகளில் தமிழும் இருந்ததால், நிச்சயம் தமிழ்மொழி வடிவத்தை அவர்களுக்குள் வழங்கி தமிழ்பேசும் மக்களாகவே உருவெடுக்க வைத்திருக்க முடிந்திருக்கும். மலாய் மொழி இப்போது, ஆங்கில எழுத்துக்களை வைத்துத் தான் உபயோகிப்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்காலம் பற்றிய தெளிவான சிந்தனைகள் அன்றும் சரி, இன்றும் சரி நம்மிடம் இருந்ததில்லை. அதனால் தான் சொற்பிழைகளாக எழுதினால் என்ன தப்பு என்று இவ் யாழ்களத்திலேயே கேள்வி கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால் அதனால் ஏற்படப்போகின்ற எதிர்கால சந்ததியினருக்கான தீங்கு பற்றி எள்ளவும் மனதில் வருத்தமில்லாமல் இருப்பது மிகமிக துர்அதிட்டமானது.

thanks :

yarl.com

……

This entry was posted in சோழன் and tagged . Bookmark the permalink.

One Response to சோழர்களின் பொருளாதாரப் போர்கள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *