ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா? – சில முக்கிய தரவுகள்

ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?

உலகம் முழுக்க நாம் ஒன்றை கவனிக்கலாம், எந்த மன்னன் ஒற்றை அதிகாரத்தை உருவாக்கி நீடித்த அமைதியைக் கொடுக்கிறானோ அவனே அந்த சமூகத்தை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசென்றவனாக இருந்தான். அவ்வாறு எங்கெல்லாம் மேம்பட்ட நிலவுடைமைச்சமூகம் உருவாகி உற்பத்திஉபரி திரட்டப்பட்டு நாகரீகமும் பண்பாடும் வளர்ந்தது என்று அறிகிறோமோ அங்கெல்லாம் மிகக்கொடுமையான வன்முறை மூலமே அது நிகழ்ந்திருப்பதைக் காணலாம். பத்தாம் நூற்றாண்டு சீனா அல்லது ஜப்பான் அல்லது ஐரோப்பா அல்லது அரேபியாவின் வரலாறு என்பது குருதியில் தோய்ந்த கதை. சும்மா விக்கியை தட்டிப்பாருங்கள் தெரியும்.

அங்குதான் இந்திய மன்னர்கள் வேறுபடுகிறார்கள். இந்திய மன்னர்களின் அடைமொழிகளீல் குலசேகரன் என்ற பெயர் பெரும்பாலும் காணப்படும். பல்வேறு குலங்களை தொகுத்தவன் என்று பொருள். குட்டி அரசுகளை அழித்தொழிக்காமல் சமரசம் மூலமே அவர்களை இணைத்து ஒரு மைய அதிகாரத்தை உருவாக்குவதாகவே இருந்தது இந்திய மன்னராட்சி முறை. அதனுடன் முரண்படும்போதே போர்கள் நிகழ்ந்தன.அதற்கு திருமண உறவு ஒரு முக்கியமான வழிமுறை. ஐதீகங்கள் மூலமும், குல ஆசாரங்கள்மூலமும், அதிகாரம் பங்குவைக்கப்பட்டும் அந்த பொது ஒப்புதல் உருவாக்கப்பட்டது

’பொன்னியின் செல்வனை’ மட்டுமே வாசித்துப்பாருங்கள். சோழர்களின் ஆட்சி என்பது சம்புவரையர்கள், பழுவேட்டரையர்கள், மலையமான்கள் என பல சிறு மன்னர்கள் சேர்ந்து செய்த ஆட்சி என்பதை அறிவீர்கள். ராஜராஜன் அவர்கள் அனைவரையும் திறம்பட இணைத்து உறுதியான அரசை உருவாக்கினான். அது கிட்டத்தட்ட இருநூறாண்டுக்காலம் நீடித்தது. அத்தனைகாலம் தமிழ் மண்ணில் உள்நாட்டு அமைதி நீடித்தது. தமிழ் வரலாற்றில் அது ஒருசாதனை. அதற்காகவே அவன் இன்றும் மாமன்னன் என கொண்டாடப்படுகிறான்.

உள்நாட்டு அமைதியை உருவாக்கிய சோழர்கள் சீரான வரிவசூல் முறைமையையும் உருவாக்கினார்கள். ஒரு மைய அரசு வந்ததுமே அதைத்தான் செய்யும். ஏனென்றால் அரசு என்பதே மக்களின் உற்பத்தியில் உள்ள உபரியை வசூல் செய்து மையநிதியை உருவாக்கிக்கொள்வதுதான். வரிவசூலுக்காகவும் நிர்வாகத்துக்காகவும் சோழநாடு மண்டலங்களாகவும், மண்டலங்கள், கோட்டம், கூற்றம் அல்லது வளநாடு எனப்பட்ட பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டு இருந்தன. கூற்றம், நாடுகள் என்ற சிறிய அலகுகளாகப் பிரிக்கப்பட்டன. இவற்றில் அந்த பகுதி மக்களாலேயே தேர்வு செய்யப்படும் நிர்வாக அமைப்புகள் செயல்பட்டன.

சோழர்களின் காலகட்டத்தின் முக்கியமான சாதனையே இந்த வட்டார நிர்வாக அமைப்புகள்தான். இவற்றைக்கொண்டு வட்டார அளவில் நீதி வழங்கப்பட்டது. அந்தந்த பகுதியின் பொதுநிதி மக்களுக்காகச் செலவிடப்பட்டது. ஆனால் சோழர் காலகட்டத்தின் உச்சகட்ட சாதனை என்றால் நீர்ப்பாசனத்துக்காக உருவாக்கப்பட்ட ஆயக்கட்டு சபைகள் போன்ற கிராமசபை அமைப்புகள்தான். நீரை சீராக பங்கிடவும் நீர்நிலைகளை உருவாக்கவும் அந்த சபைகள் பெரிதும் பயன்பட்டன

.
.
.
அன்று பிராமணர்களுக்கு சலுகைகள் காட்டப்பட்டனவா? ஆம். ஆனால் ஏன்? இப்படி ஒரு வரியை ஆவேசமாக பதிவுசெய்பவர்கள் ஏன் என்ற வினாவை நோக்கியல்லவா சென்றிருக்கவேண்டும்? அப்படிச் சென்றிருந்தால் அவர்கள் மார்க்ஸிய நோக்கு சார்ந்த வரலாற்றாய்வின் பிதாமகரான டி.டி.கோஸாம்பியைச் சென்று சேர்ந்திருப்பார்,. இந்தியா முழுக்க மன்னர்கள் கோயில்கள் கட்டி அங்கே பிராமணர்களுக்கு நிலமும் ஊர்களும் அளித்து குடியேற்றுவது ஒரு வழக்கமாகவே இருந்துள்ளது. அது ஒரு முக்கியமான அரசியல்-பொருளியல் நடவடிக்கை என்கிறார் கோஸாம்பி.
.
.
இந்தியா பல்வேறு இனங்களும் இனக்குழுக்களும் அரசுகளும் கொண்ட நிலவெளியாக இருந்தது. பரஸ்பர ஐயங்களும் போர்களும் நிகழ்ந்த மண். அவர்கள் நடுவே ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் உருவாக்கக்கூடிய இன்னொரு தரப்புக்கான தேவை இருந்தது. பேரரசுகளை உருவாக்கக்கூடிய மன்னர்களுக்கு அத்தேவை இருந்தது போலவே குட்டிக்குட்டி ஆட்சியாளர்களுக்கும் இனக்குழு தலைவர்களுக்கும்கூட அந்த தேவை இருந்தது. அதைச்செய்யக்கூடியவர்களாக வரலாற்றின் ஆரம்பத்திலேயே பிராமணர்கள் உருவாகி வந்தார்கள். தங்களை அவர்கள் வன்முறை அற்றவர்களாகவும் முழுக்கமுழுக்க கல்விசார்ந்தவர்களாகவும் உருவாக்கிக்கொண்டிருந்தது அதற்குக் காரணமாக அமைந்தது.

ஒன்றை நினைவில் வையுங்கள் ஒரு சமூகமே தங்களை கொண்டாடும்படிச் செய்து அச்சமூகத்தை பற்பல நூற்றாண்டுகளாக தங்களுக்கு அடிமையாக இருக்கச்செய்து சுரண்டிக்கொண்டே இருக்கும் அளவுக்கு பிராமணர்கள் இந்திரஜாலம் தெரிந்த மாயாவிகள் அல்ல. அப்படி அவர்கள் தலைமுறை தலைமுறையாகச் சுரண்டவும் அதை உணராமல் கும்பிட்டு காணிக்கை கொடுத்துக்கொண்டே இருக்கும் அளவுக்கு நம் முன்னோர்கள் மண்ணாந்தைகளும் அல்ல. கிட்டத்தட்ட பிராமணர்கள் ஆற்றிய அதே பணியை[சமரசம் தூது] பௌத்த சமண மதத்துறவிகளும் ஆற்றியிருக்கிறார்கள். அவர்களையும் மன்னர்கள் பேணியிருக்கிறார்கள். பெரும் நிதிகளும் சலுகைகளும் அளிக்கப்பட்டிருக்கின்றன. அந்த அகிம்சை மதங்கள் பேரரசுகளை உருவாக்க உதவாதபோது அவற்றுக்கான ஆதரவு குறைந்து பிராமணர்கள் மீண்டும் ஆதரவு பெற்றார்கள்.

அதாவது பிராமணர்கள் பேணப்பட்டது நம் முன்னோர்களின் ஏமாளித்தனத்தால் அல்ல, அவர்களுக்கு பிராமணர்களின் சேவை தேவையாக இருந்தமையால்தான். அந்த மனநிலையும் பிராமணார்களின் சேவையும் இன்றும்கூட அப்படியே நீடிக்கிறது. இத்தனை பிராமண எதிர்ப்பரசியல் வந்தும்கூட இன்றும் பெரும் வணிகர்களும் அரசியல்வாதிகளும் பிராமணர்களையே நம்பி தூதர்களாகவும் சமசரக்காரர்களாகவும் பயன்படுத்துகிறார்கள். இதி பிராமண எதிர்ப்பரசியல் நடத்தும் அரசியல்கட்சிகளும் தலைவர்களுமே முதலிடம் வகிக்கிறார்கள், விசாரித்துப்பாருங்கள். இந்த சமூகத்தேவை அன்று இன்னும் பெரிதாக இருந்திருக்கும். அன்று சைவ, வைணவ மதநம்பிக்கை இன்னும் வலுவானதாகவும் மக்களை கட்டுப்படுத்தி இணைக்கக் கூடியதாகவும் இருந்தது. ஆகவே ராஜராஜன் போன்றவர்கள் பிராமணர்களை போற்றினார்கள்.

ஆம், பிராமணர்களும் கோயில்களும் ஆதிக்கத்தின் கருவிகளே. ஆனால் இந்த ஆதிக்கம் தவிர்க்கமுடியாதது, நிகழ்ந்தேயாகவேண்டியது என்பதே கோஸாம்பி கூற்று.

உலகம் முழுக்க நிலவுடைமைச்சமூகத்தில் பூசகர்கள் பெரும் செல்வாக்குடன் இருந்திருக்கிறார்கள். நிலவுடைமைச் சமூகத்தை கட்டமைக்கும் கருத்தியல்களையும் நம்பிக்கைகளையும் சமூகத்தில் நிலைநாட்ட அவர்கள் இன்றியமையாதவர்கள். ஆனால் உலகிலேயே பூசகர்கள் குறைவான அதிகாரத்துடன் இருந்தது இந்தியாவில்தான். இங்கே பிராமணர்கள் நேரடி அதிகாரத்தைக் கையாளவில்லை. அவர்களுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டனவே ஒழிய நிலம் ,நிதி மீது அதிகாரம் அளிக்கப்படவில்லை. அது மன்னர்கள் மற்றும் வேளாளர் மற்றும் போர்ச்ச்சாதியினர் கைகளிலேயே இருந்தது. இதே காலகட்டத்தில் ஐரோப்பா மதகுருக்களின் நேரடி வன்முறை சார்ந்த அதிகாரத்தில் ஆழ்ந்து கிடந்தது என்பதை நினைவுகூர வேண்டும்.

பிராமணர்கள் சோழர் காலத்தில் அமைச்சுப்பதவிகளில் இருந்திருக்கிறார்கள். ஆனால் பரவலாக அவர்களுக்கு அதிகாரத்தில் பங்கிருக்கவில்லை. அவர்கள் அதிகாரத்தை ருசிக்க ஆரம்பித்தது உண்மையில் நாயக்கர் காலகட்டத்தில்தான். ஆனால் அதுகூட தெலுங்குபிராமணர்கள்தான். பிரிட்டிஷார் வந்தபின் ஆங்கிலக்கல்விமூலம் பிரிடிஷாருட்ன் ஒத்துழைத்தே பிராமணர் நேரடி அதிகாரத்தை அடைந்தார்கள். அதைக்கொண்டு அவர்கள் வேளாளர்களுக்கு எதிராகவும் செயல்பட்டார்கள். அந்தக் கசப்பே தமிழகத்திலும் கேரளத்திலும் பிராமண எதிர்ப்பரசியலுக்கு வித்திட்டது. அதை ஆரம்பித்தவர்கள் வேளாளர்களும் அவர்களின் கேரள வடிவமான நாயர்களும்தான்.

தமிழகத்தின் மிகப்பெரிய ஏரியான வீராணம் சோழர் காலத்தில், ராஜராஜனின் பாட்டாவான இராதித்த சோழனால் வெட்டப்பட்டதுதான். வீரநாராயண மங்கலம் ஏரி என்பது அதன் பெயர். இந்த ஏரி அக்காலத்தில் இருபது கி.மீ நீளமும் ஐந்து கீ.மீ அகலமும் கொண்டது. ஐம்பதாண்டுகளாக அதை தூர்வாரவே நம் ஜனநாயக அரசுகளிடம் நிதி இல்லை என்கிறார்கள். அதை நம்பியே இன்றும் சென்னைகூட வாழ்கிறது. அது எப்பேர்ப்பட்ட வைப்புநிதி என்பதை நாம் யோசிப்பதேயில்லை. இன்று அதன் மதிப்பு பல்லாயிரம்கோடி ரூபாய்! எத்தனைகோடி வரிப்பணம், எவ்வளவு உழைப்பு!

குமரிமாவட்டத்தில் மட்டும் சோழர்கள் வெட்டிய ஏரிகள் இருபதுக்கும் மேல். தமிழகத்தில் ஐந்தாயிரம் ஏரிகள் வெட்டப்பட்டிருக்கலாம். இன்றைய தமிழகத்தின் ஆகப்பெரிய பாரம்பரியச் சொத்தே இந்த ஏரிகள்தான். இவை இல்லையேல் நாம் பாலைவன மக்கள். ஆயிரம் வருடங்களாக நாம் குடிப்பது சோழன் அளித்த குடிநீரை. உண்பது அவர்கள் உருவாக்கிய விளைநிலங்களின் சோற்றை.அதை நாம் மறக்கக் கூடாது.

சாதி ஏற்றத்தாழ்வு இருந்ததா? ஆம் இருந்தது. அடிமைமுறைகூட இருந்தது என நாம் இன்று கல்வெட்டுகள் மூலம் அறிகிறோம். ஆனால் தமிழகத்தில் சங்க காலம் முதலே சாதிமுறையும், அடிமைமுறையும் இருந்தன. இழிசினர், தொழும்பர், உரிமைமாக்கள் என்றெல்லாம் நம் இலக்கியங்கள் சொல்கின்றன. ஆனால் அன்று உலகமெங்கும் அதே பிறப்பு அடிப்படையிலான சமூகப் பாகுபாடும், அடிமை முறையும், இருந்தன என்பதே வரலாறு. மக்களில் ஒருசாராரை அடிமைகொண்டு கட்டாய உழைப்புக்கு ஆளாக்கி அவர்களை சுரண்டி அவர்களின் உழைப்பு உருவாக்கிய உபரியால்தான் உலகத்தின் எல்லா நாடுகளும் தங்களை நாடுகளாக ஆக்கிக்கொண்டன. பண்பாட்டை வளர்த்துக்கொண்டன.

ஒருநாடுகூட விதிவிலக்கு கிடையாது. அதற்கான வாய்ப்புகளும் இல்லை. அன்றைய மக்களிடம் அதைப்பற்றிய அறவுணர்ச்சி இல்லை. நமக்கு இன்று மாடுகளை கட்டி வண்டியோட்டுவது பிழை என தோன்றவில்லை அல்லவா? நாளை நம் சந்ததிகள் அதற்காக நம்மை தூற்றுவார்கள். இன்றே உலகின் பல நாடுகளில் விலங்குகளை அடிமையாக வைத்து உழைப்பை சுரண்டுவது தடைசெய்யப்பட்டுள்லது. தத்துவமேதையான பிளேட்டோ கூட அடிமைமுறையை ஆதரிப்பதைக் காணலாம். உலக அளவில் பார்த்தால் இயந்திரங்கள் வந்துதான் அடிமையுழைப்பை மெல்லமெல்ல இல்லாமலாக்கின.

அதில்கூட சோழர்களின் காலகட்டம் அவர்கள் காலகட்டத்தில் ஐரோப்பாவிலும் அரேபியாவிலும் சீனாவிலும் ஜப்பானிலும் இருந்ததை விட மேலான நிலையில் இருந்தது என்பதைக் காணலாம்.

சோழர்காலகட்டத்தின் தேவரடியார் சமூகம் பற்றி இன்று பலவாறாகப் பேசப்படுகிறது. இதுவும் உண்மைநிலை உணராத பேச்சே. ராஜராஜசோழன் வடக்கே வெங்கி, கலிங்கநாடுகளில் இருந்து தேவரடியார்களைக் கொண்டுவந்து குடியேற்றினான். அன்று ஊர்கள் விரிந்துஆலயங்கள் பெருகியபடியே சென்றமையால் மேலும் மேலும் தேவரடியார் தேவைப்பட்டார்கள். அதற்காகவே பொட்டுகட்டும் வழக்கம் ஏற்பட்டது. ஆனால் இன்று நாம் உருவகிக்கும் சமூகக்கொடுமையாக அல்லது சுரண்டலாக அது இருக்கவில்லை. அந்த மனச்சித்திரமே பிழை. பொட்டுகட்டுதல் ஓரு சாதிய உயர்நிலையாக்கமாகவே இருந்தது. ஆகவேதான் அது நீடித்தது. வெறும் ஏமாற்று மூலமோ வன்முறை மூலமோ அந்த முறை தக்கவைக்கப்பட்டது என்பதற்கான ஆதாரமேதும் இல்லை.

தேவரடியாருக்கு அன்று சமூகத்தில் உயர்ந்த நிலை இருந்தது. நிதி, குலம் இரண்டிலுமே அவர்கள் பிராமணர்களுக்கும் மன்னர்களுக்கும் அடுத்த நிலையில் இருந்தார்கள். பல்லக்கில் ஏறும்தகுதிபடைத்த உயர்குடிகள் இவர்கள் மூவரே. தேவரடியார்கள் கோயில்களை கட்டியிருக்கிறார்கள். குளங்களை வெட்டியிருக்கிறார்கள். அவர்கள் விபச்சாரிகளாக இருக்கவில்லை. தமிழகத்தின் மாமன்னர்கள் தேவரடியார் பெண்களை மணந்து பட்டத்தரசிகளாக ஆக்கியிருக்கிறார்கள். ஜடாவர்மன் சுந்தரபாண்டியனின் பட்டத்தரசி தேவரடியார்தான். திருவிதாங்கூரின் மன்னர் ராஜா ராமவர்மாவின் பட்டத்தரசி அபிராமி தேவரடியார்தான்.

ஆக,சோழப்பேரரசைப்பற்றியும் ராஜராஜனைப்பற்றியும் நாம் கண்டிப்பாக பெருமைகொள்ளலாம். அன்றைய உலகச்சூழலில் வைத்துப்பார்த்தால் ஆக முற்போக்கான, அறம்சார்ந்த, மக்கள்நலம் நாடிய அரசுதான் அது. தன் குடிகள் மேல் விருப்பம் கொண்ட, பெருந்தன்மையும் நிதானமும் கொண்ட, கருணைமிக்க மன்னன்தான் ராஜராஜன். கலைகளிலும் இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவன். பண்பாட்டை பேணியவன். ஹானிபாலைப் போல, நெப்போலியனைப்போல,அலாவுதீன் கில்ஜியைப்போல,நாதிர்ஷாவைப்போல ராஜராஜன் பெருங்கொடுமைகள் எதையும் எந்த மனிதஇனத்துக்கும் இழைத்ததில்லை.

ராஜராஜன் மாபெரும் மானுடத்தலைவனே. நாம் நமது வரலாற்றின் மாபெரும் சக்ரவர்த்தியை கொண்டாடுவதில் பிழையே இல்லை. இறந்தகாலத்தை இறந்தகாலமாக எடுத்துக்கோண்டால் அதில் நம் சாதனைகளுக்காகவும் நம் முன்னோர்களுக்காகவும் பெருமைகொள்வது உகந்ததே

அன்றைய அற மதிப்பீடுகளையும் ஒழுக்க மதிப்பீடுகளையும் விட்டு நாம் வெகுதூரம் வந்துவிட்டோம். அது நிலவுடைமைகாலகட்டத்தின் ஒரு பகுதி. நாம் வாழ்வது அதில் இருந்து பலபடிகள் தாண்டிவந்த ஜனநாயகக் காலகட்டம். நாம் நம் பொற்காலங்களை எதிர்காலத்தில்தான் தேடவேண்டும், இறந்தகாலத்தில் அல்ல.

Ref: www.jeyamohan.in

thanks : Thaniyan………….

Share
This entry was posted in சோழன் and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>