ஊற்றுமலை ஜமீன் வரலாறு

எழுதியவர்:உ.வே.சாமிநாதய்யர்

ஊற்றுமலையென்பது திருநெல்வேலி ஜில்லாவில் இருந்து வரும் ஒரு பழைய ஜமீன். அதில் ஜமீன்தார்களாக இருந்தவர்கள் வீரத்திலும் கல்வியிலும் சிறந்தவர்கள். வடகரையென்னும் சொக்கம்பட்டியில் பெரியசாமிச் சின்னணைஞ்சாத் தேவர் தலைமை வகித்து வந்த காலத்தில் ஊற்றுமலையில் இருந்த ஜமீன்தார் தென்மலையென்னும் சிவகிரியிலிருந்து ஜமீன்தாருக்கு உதவி புரிந்து வந்தனர்.

வடகரையாருக்கு நண்பராகிய சேற்றூர் ஜமீன்தாருக்குப் பல இடையூறுகளை விளைவித்தனர் தென்மலையார். வடகரை ஸ்தானாதிபதியாக இருந்த பொன்னம்பலம் பிள்ளை பல படையுடன் சேற்றூராருக்கு உதவியாக நின்று தென்மலையாரை வென்றனர். அதன்பின் தென்மலையும் அதற்கு உதவியாக நின்ற ஊற்றுமலை ஜமீனும் தம்முடைய நிலையிற் குலைந்தன. ஊற்றுமலை ஜமீன்தார் அப்பகைவர் கையில் அகப்பட்டார்: அவர் தம்முடைய மனைவியாரையும் இரண்டு சிறு பிள்ளைகளையும் விட்டு இறந்தனர்.

அவர் மனைவியாரின் பெயர் பூசைத்தாயாரென்பது. அவர் தம் குழந்தைகளுக்காகவே உயிர் வைத்திருந்தனர். குழந்தைகளில் மூத்தவர் மருதப்பத் தேவர்; இளையவர் சீவலவ தேவர் என்பார். பூசைத்தாயார் தெய்வ பக்தியும் தைரியமும் தமிழிற் சிறந்த பயிற்சியும் உடையவர்.

ஊற்றுமலை ஜமீன் அரண்மனையில் அடிக்கடி வித்துவான்களுடைய பேச்சுக்கள் நடந்து வருகையில் அவ்வம்மையார் ஜமீன்தார் அருகிலிருந்து அவற்றைக் கவனிப்பது வழக்கம்; ஆதலின் செய்யுட்களின் சுவை தெரிந்து அனுபவிக்கவும் புதிய செய்யுட்களை இயற்றவும் ஆற்றலுடையவராக ஆனார்.

தம்முடைய கணவர் இறந்தபோது,”மிகவும் இளைஞர்களாக இருக்கும் குழந்தைகளை எப்படிக் காப்பாற்றுவது!” என்று அவர் மனம் ஏங்கினார். ஊற்றுமலையில் தனியே இருப்பின் தம் குலக்கொழுந்துகளாகிய அவ்விருவருக்கும் ஆபத்து வருமென்று பயந்து தென்காசிக்குச் சென்று அங்கே அடக்கமான வாழ்க்கையை நடத்தி வருவாராயினர்.

புலமை நிரம்பிய பெண்மணியாராதலின் கல்வியினால் உண்டாகும் பெருமையே பெருமை என்றுணர்ந்து எவ்வாறேனும் தம் மக்களுக்குக் கல்வியறிவூட்டவேண்டு மென்னும் ஊக்கமுடையவராக இருந்தார். தென்காசியில் இருந்த பள்ளிக்கூடமொன்றில் தம் குமாரர் இருவரையும் சேர்ப்பித்துப் படிக்கச் செய்தார்.

அவ்விருவருள் இளையவராகிய சீவலவ தேவர் நல்ல லக்ஷணமும், வசீகரமான தோற்றமும் உடையவர். தைரியமும், சோம்பலின்றி உழைக்கும் ஊக்கமும் அவருக்குப் பிறவியிலே அமைந்திருந்தன. பிறர் உள்ளக் கருத்தைக் குறிப்பாக அறியும் நுண்ணறிவும் அவர் பால் இருந்தது. அவருடைய முகத்தைப் பார்த்துப் பூசைத்தாயார், “இவனால் நாம் ஈடேறலாம்” என்று எண்ணி மகிழ்ந்து வந்தார்.

ஒரு நாள் சகோதரர் இருவரும் பள்ளிக்கூடம் செல்லும்போது அத்தலத்தில் உள்ள தேரடியில் சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களைக் கண்டபோது இளங்குழந்தையாகிய சீவலவதேவருக்குத் தாமும் விளையாடவேண்டுமென்னும் ஆசை உண்டாயிற்று. சிறிது நேரம் அவர்களோடு சேர்ந்து விளையாடத் தொடங்கினார்.

அவருடைய தமையனாராகிய மருதப்பத் தேவர் பள்ளிக்கூடத்துக்கு நேரமாகிவிட்டதென்று கூறினார். அதனைக் காதில் வாங்காமல் சீவலவதேவர் விளையாடிக் கொண்டே இருந்ததனால், மூத்தவருக்குக் கோபம் மூண்டது; உடனே தம்பியை அடித்துப் பள்ளிக்கூடத்துக்கு அழைத்துப் போனார்.

சீவலவதேவர் மானமுள்ளவராதலின் பள்ளிக்கூடத்திலிருந்து வந்து தாயாரைக்கண்டவுடன் கோவென்று அழத் தொடங்கினார். தம்முடைய கண்மணியைப் போன்ற குழந்தை அங்ஙனம் எதிர்பாராதவிதமாக அழுவதைக் கண்ட பூசைத்தாயாருக்கு ஒன்றும் விளங்கவில்லை. விசாரித்தபோது விஷயம் தெரிந்தது.

குற்றம் இருவரிடமும் இருப்பதாக அவர் எண்ணினார். கல்வியே செல்வமென்று எண்ணி அவர்களைப் படிக்கவைத்தவராதலின் இளையபிள்ளை விளையாட்டிற் போதைக் கழித்தது குற்றமென்பதும், இருப்பினும் நல்லுரை கூறாது இளங்குழந்தையை அடித்தது மூத்தவரது குற்றமென்பதும் அவர் கருத்து. யாரை நோவது?? “எல்லாம் நம்முடைய பழைய நிலையிலிருந்து மாறியதனால் உண்டாகியவையே” என்று எண்ணும்போது பூசைத்தாயாருக்குத் துக்கம் பொங்கி வந்தது. தம்முடைய உள்ளுணர்ச்சியை வெளிப்படையாக அந்தக் குழந்தைகளுக்கு உணர்த்தத் துணியவில்லை. ஆயினும் தமிழ்க் கல்வியறிவுடைய அப்பெண்மணியார் ஒரு செய்யுளால் அதை வெளியிட்டார். அது வருமாறு:

“தேரோடு நின்று தெருவோ டலைகிற செய்திதனை
ஆரோடு சொல்லி முறையிடு வோமிந்த அம்புவியில்
சீரோடு நாமும் நடந்துகொண் டாலிந்தத் தீவினைகள்
வாராவ டாதம்பி சீவல ராய மருதப்பனே.”

இச்செய்யுளைச் சொல்லும்போதே அவர் கண்களில் நீர் துளித்தது.

அடிபட்ட சீவலவ தேவர் தம்முடைய துக்கத்தை மறந்தார். தம் தாயார் அவ்வாறு வருந்துவதற்குக் காரணமென்ன என்பதில் அவர் மனம் சென்றது. தங்களை அன்போடு பாதுகாத்துவரும் அன்னையார் வருந்துவதைக் கண்டபோது அவர் மனம் உருகியது.

துணையற்ற நிலையில் இருந்தாலும் தம் உள்ளத்துள் இருந்த துயரத்தை அதுகாறும் அவ்வம்மையார் வெளியிட்டதேயில்லை; தைரியமாகவே இருந்து வந்தார். தம்முடைய பழைய நிலையையும் குழந்தைகளுக்குச் சொல்லவில்லை. அன்றைத்தினமோ வருத்தம் அடக்குவதற்கு அரிதாகிவிட்டமையால் அந்தச் செய்யுளைக் கூற நேர்ந்தது.

ஒருநாளும் வருந்தாத தாயார் அங்ஙனம் வருந்துவதைக் கண்டு பொறாத இளையவர், “நம்மால் அல்லவா இந்த வருத்தம் தாய்க்கு வந்தது!” என்று எண்ணி அதிகமாக அழுதார். ” நீ என்னம்மா இப்படி வருத்தமடைகிறாய்? இதற்குக் காரணம் என்ன? சொல்லத் தான்வேண்டும்” என்று பிடிவாதம் செய்தார். தாயார் வேறு வழியில்லாமல் எல்லாச் செய்திகளையும் குழந்தைகளிடம் சொல்லி வருந்தினார்.

“இனிமேல் எப்படி அம்மா நாம் பழைய நிலைக்கு வரமுடியும்?” என்று சீவலவதேவர் கேட்டார்.

“ஆண்டவன் அருள் செய்யவேண்டும். இப்போது வடகரையார் மிக்க பராக்கிரமம் கொண்டு விளங்குகிறார்கள். அவர்கள் மனம் வைத்தால் நம்மைப் பழையபடியே நிலைநாட்டலாம்.” என்றார் பூசைத்தாயார்.

“வடகரை யரசரை நான் போய்ப் பார்த்து வரட்டுமா, அம்மா?” என்று தைரியத்துடன் சீவலவ தேவர் கேட்டார்.

“உனக்கு அவ்வளவு தைரியம் இருக்கிறதா? வடகரை சமஸ்தானாதிபதியைப் பார்ப்பது அவ்வளவு சுலபமான காரியமல்லவே!”

“பின் என்ன செய்வதம்மா?”

“பார்க்க முடியாது. ஆனால் ……”

தாயார் சிறிது யோசித்தார். அவர் மனத்தில் ஏதோ ஒரு புதிய கருத்து உதித்தது.

“பொன்னம்பலம் பிள்ளையென்பவர் அந்த சமஸ்தானத்தில் ஸ்தானாதிபதியாக இருக்கிறார்; அவர் மிகவும் நல்லவர்: தமிழில் சிறந்த புலமையுடையவர். அவர் மனம் வைத்து நமக்கு உதவி செய்ய இசைந்தாரானால் ஸமஸ்தானாதிபதியும் இணங்குவார்.” என்று தயார் கூறினார்.

“அவரையே போய்ப் பார்த்து வருகிறேன், உன்னுடைய அன்பையும் ஆண்டவன் கிருபையையும் துணையாகக் கொண்டு நான் போய்வருகிறேன்.” என்று சீவலவதேவர் முன் வந்தார்.

வீரக்குடியிற் பிறந்த பெண்மணியாராகிய பூசைத்தாயாருக்குத் தம் மகனிடத்தில் அளவற்ற நம்பிக்கை இருந்தது. “போய் வா” என்று வாழ்த்தி அனுப்பினார்.

சீவலவதேவர் தென்காசியிலிருந்து புறப்பட்டுச் சொக்கம்பட்டிக்கு வந்து பொன்னம்பலம் பிள்ளையின் வீட்டை விசாரித்துக் கொண்டு சென்று அங்கே திண்ணையில் உட்கார்ந்திருந்தார். நடுப்பகலாதலின் உள்ளே பொன்னம்பலம் பிள்ளை நீராடிப் பூஜை பண்ணி விட்டு ஆகாரம் செய்து கொண்டிருந்தார்.

அந்தச் சமயத்தில் அரண்மனையிலிருந்து, “மகாராஜா உடனே வரச் சொன்னார்” என்று ஒரு சேவகன் வந்து அழைக்கவே விரைவாக ஆகாரம் அருந்தி எழுந்தார். கரசுத்தி செய்துகொண்டவுடன் அரண்மனைக்குச் செல்லும்பொருட்டு வெளியே வருகையில் அங்கே திண்ணையில் உட்கார்ந்திருந்த இளைஞராகிய சீவலவ தேவர்மேல் அவர் பார்வை சென்றது.அவருடைய அழகிய முகத்தின் வசீகர சக்தி பிள்ளையின் உள்ளத்திற் பதிந்தது.

“நீ யாரப்பா?” என்று ஸ்தானாதிபதி வினவினார்.

சீவலவ தேவர் தாம் இன்னாரென்பதை அறிவித்தார். ஊற்றுமலை ஜமீன்தாரிணி நன்றாகப் படித்தவரென்பதை முன்னரே பொன்னம்பலம் பிள்ளை அறிந்திருந்தார். அவ்வம்மையாருக்கு இரண்டு இளங்குழந்தைகள் இருப்பதையும் கேள்வியுற்றிருந்தார்.

ஆதலின் சீவலவதேவர் இன்னரென்று தெரிந்தவுடன் அவருக்குத் திடுக்கிட்டது. அவர், “இங்கே யாரேனும் உம்மை இன்னாரென்று தெரிந்து கொண்டால் உம்முடைய தலை தப்பாதே!” என்று அஞ்சினார்.

“ஆண்டவன் திருவருளின்படியே எல்லாம் நடைபெறும்” என்றார் இளைஞர்.

அவ்விளைஞர் காட்டிய பணிவு பொன்னம்பலம் பிள்ளைக்கு மனக்கசிவை உண்டாக்கியது. அப்பொழுதே, “இவர்களைப் பழைய நிலையில் வைத்துப் பார்க்கவேண்டும்,” என்ற சங்கற்பத்தைச் செய்து கொண்டார். பிறகு மிக்க களைப்புடன் இருந்த சீவலவதேவரை வீட்டுக்குள் அழைத்துச் சென்று உணவு செய்யச் சொல்லிவிட்டு, “இங்கே படுத்து இளைப்பாறிக்கொண்டிரு; நான் அரசரிடம் சென்று வருகிறேன். ஒருவரிடமும் தாம் இன்னாரென்று தெரிவிக்கவேண்டாம்” என்று சொல்லி அரண்மனைக்குச் சென்றார்.

பொன்னம்பலம் பிள்ளை தம்முடைய தலைவராகிய சின்னணைஞ்சாத்தேவரிடம் அவர் அழைத்த விஷயமாகப் பேசிக்கொண்டிருக்கையில், “நம்மால் அழிக்கப்பட்ட ஊற்றுமலையார் வேறு சிலருடைய உதவியை நாடிக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இப்போது அந்த ஜமீன் பரம்பரையில் இரண்டு இளைஞர்களே இருக்கிறார்கள். நமக்கும் அவர்களுக்கும் நேரே பகைமையில்லை.

சமூகத்துக்குப் பரம்பரையாக அவர்கள் உறவினர்களல்லவா? சேற்றூராருக்கும் தென்மலையாருக்குமே பகை. சேற்றூராருக்கு நாம் உதவி செய்தோம்; தென்மலையாருக்கு அவர்கள் உதவி செய்தார்கள். அங்ஙனம் உதவி செய்த ஜமீன்தாரும் இப்போது இல்லை.

ஊற்றுமலை ஜமீன் தமிழ்ப்புலவர்களை ஆதரித்துக் காப்பாற்றும் புகழையுடையது. அதன் அழிவுக்கு நாமே காரணமாக இருந்தோம். இப்போது மீட்டும் அந்த ஜமீனை நாமே நிலை நிறுத்தினால் நமக்கு அளவற்ற புகழ் உண்டாகும்; அநாவசியமான பகையுணர்ச்சியும் இல்லாமற்போம்! என்றார்.

‘நீர் எப்படி செய்தாலும் நமக்குச் சம்மதமே! என்று கூறினார் ஸமஸ்தானாதிபதி.

பொன்னம்பலம் பிள்ளை உடனே தென்காசிக்குப் பல்லக்கு அனுப்பிப் பூசைத்தாரையும் மருதப்பத் தேவரையும் வருவித்தார். அவர் பூசைத்தாயாரைப் பற்றி முன்பே கேள்விப்பட்டிருந்தார். தமிழ்ப்புலமையையுடைய அவரைச் சந்தித்தபோது பொன்னம்பலம் பிள்ளைக்கு அளவற்ற வருத்தம் உண்டாயிற்று; “இவ்வளவு சிறந்த அறிவுடைய இவரை இந்நிலைக்கு உள்ளாக்கியதற்கு நாமல்லவோ காரணம்!’ என்று இரங்கினார்.

அப்பால் பூசைத்தாயாருக்கும் அவர் குமாரர்களுக்கும் தக்க வசதி அமைக்கப் பட்டது.

பொன்னம்பலம்பிள்ளை ஏவலாளர்களுடன் ஊற்றுமலை சென்று அங்கே பழுதுபட்டிருந்த கோட்டை, அரண்மனை முதலியவற்றைச் செப்பஞ் செய்வித்தார். பிறகு நல்ல லக்கினத்தில் கிருகப்பிரவேசம் நடத்த ஏற்பாடு செய்து, வடகரையிலிருந்து பல்லக்கில் ஊற்றுமலை ஜமீன்தாரிணியையும் இரண்டு குமாரர்களையும் வருவித்தார். கிரகப்பிரவேசம் மிகவும் விமரிசையாக நடந்தது. நல்லவேளையில் தமக்குரிய நிலையைப் பெற்று அவர்கள் மகிழ்ந்தார்கள்.

ஊற்றுமலையில் மீட்டும் வாழ்வோமென்று நம்பிக்கையை முழுதும் இழந்திருந்த பூசைத்தாயாருக்கு அந்நிகழ்ச்சி அளவிறந்த விம்மிதத்தை உண்டாக்கியது. பொன்னம்பலம்  அதற்குக் காரணமென்பதை அவர் அறிந்தார். தம்முடைய நன்றியறிவை அவர் ஒரு பாடலால் தெரிவித்துக் கொண்டார். அது வருமாறு:

“கூட்டினான் மிகுந்த பா ளையக்காரர் சேகரத்தைக் குறைவ ராமல்
சூட்டினான் மணிமகுடந் துரைபெரிய சாமிசெய்யுஞ் சுகிர்தத்தாலே
*தீட்டினா னம்பலம்பொன் னம்பலத்தான் றிரிகூடவரையிற் கீர்த்தி
நாட்டினா னூற்றுமலை நாட்டரசு தழைக்கநி லை நாட்டினானே.”

பூசைத்தாயாரின் பொறுமையும் புலமையும் அவர்களுடைய நன்மைக்குக் காரணமாயின; தம்முடைய அரசை நிலைநாட்டித் தழைக்கவைத்த அமைச்சர் பிரானாகிய பொன்னம்பலம் பிள்ளையை போற்றிவந்தனர்.

……

This entry was posted in ஊற்றுமலை ஜமீன் and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *