ஜமீன் சிங்கம்பட்டி-2

திருநெல்வேலிப் பகுதியில் தவறு செய்தவர்களைப் பார்த்து “முதுகுத் தோலை உரிச்சிப் போடுவேன் படுவா’ என்பார்கள். முதுகுத் தோலை உரிக்க முடியுமா என்ன? இன்றைக்கு “சும்மாக்காச்சும்’ இப்படி வெத்து மிரட்டல் விட்டாலும் தவறு செய்தவரின் முதுகுத் தோலை நிஜமாகவே உரிக்கும் தண்டனையும் ஒரு காலத்தில் வழக்கத்தில் இருந்திருக்கிறது என்றால் நம்புவீர்களா? திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிங்கம்பட்டி ஜமீனில்தான் இக்கொடிய தண்டனை முறை இருந்திருக்கிறது.

முருகதாஸ் தீர்த்தபதி

ஆயிரம் ஆண்டுகள் வரலாறு உடையது சிங்கம்பட்டி ஜமீன். இதன் 32-வது பட்டத்துக்காரர் தென்னாட்டுப்புலி நல்லகுட்டி சிவசுப்பிரமணிய கோமதிசங்கர ஜெய தியாகமுத்து சண்முகசுந்தர முருகதாஸ் தீர்த்தபதி (72). என்ன தலைசுற்றுகிறதா? இதுதான் அவரது முழுப் பெயர். சுருக்கமாக, டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி. இவர் சற்று வித்தியாசமானவர்.

இன்றும் “சிங்கம்பட்டி குறுநில மன்னர்’ என அழைக்கப்படும் இவர், ஜமீன் பட்டத்தைத் துறந்தவர். இலங்கை கண்டியில் உள்ள ஆங்கிலேயக் கல்வி நிறுவனத்தில் பயின்றவர் என்பதால் நல்ல ஆங்கிலப் புலமை பெற்றவர். 1953-க்குப் பின்பு ஜமீன்கள் மறைந்துவிட்டாலும், அதன் பாரம்பரியங்களை அறிந்து கொள்ளும் வகையில் சில பொருள்களைப் பாதுகாத்து வருகிறார் முருகதாஸ் தீர்த்தபதி.

சிங்கம்பட்டி ஜமீன் அரண்மனை.

சிங்கம்பட்டி ஊரின் மூன்றில் ஒரு பங்கு நிலத்தில் (சுமார் 5 ஏக்கர்) கட்டப்பட்டுள்ள அரண்மனையின் ஒரு பகுதியில் இந்த கலைப் பொருள்கள் காப்பகம் உள்ளது. இக் காப்பகத்தில் உள்ள ஓலைச் சுவடிகளில் ஒன்றில்தான் தோலை உரிக்கும் தண்டனை குறித்தும் கூறப்பட்டுள்ளது. இப்போது இருக்கிற குண்டர் சட்டம், என்.எஸ்.ஏ. மாதிரி அப்போது சட்டம் எதுவும் கிடையாதே! எனவே, திரும்பத் திரும்ப தவறு செய்பவர்கள், இனிமேல் இவனைத் திருத்தவே முடியாது என்ற நிலைக்குப் போய்விட்டவர்களுக்கு ஜமீனில் கொடுக்கும் தண்டனைதான் “தோலுரித்தல்’.

தவறு செய்தவரைப் பிடித்து நையப் புடைத்து, ரத்தம் கசியும் வரை போட்டுத் துவைத்து, உப்புத் தடவப்பட்ட ஆட்டுத் தோலை அவன்மேல் சுற்றிக்கட்டி ஊர் பொது இடத்தில் உள்ள கல்தூணில் கட்டிவிடுவார்களாம். இரண்டொரு நாள்கள் வெயிலில் காய்ந்து, காற்றில் உலர்ந்த பின்னர், அவர் மேல் சுற்றப்பட்ட ஆட்டுத் தோலை அவிழ்த்து எடுக்குபோது, அது மனிதத் தோலையும் பிய்த்துக் கொண்டுதான் வருமாம். கற்பனைக்கு எட்டாத கொடூரம்தான்!

குதிரைக் குளம்பு ஆஷ்ட்ரே.

இந்த சிங்கம்பட்டி ஜமீனில் முக்கியமான வரலாற்றுச் சின்னம் ஒன்று உள்ளது. சிகாகோ சென்று திரும்பிய சுவாமி விவேகானந்தர், ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதிக்கு பரிசளித்த மரத்தாலான யானைச் சிற்பம் அது. பாஸ்கர சேதுபதி மகாராஜா, முருகதாஸ் தீர்த்தபதியின் தாய்வழிப் பூட்டன் ஆவார். விவேகானந்தரின் அன்புப் பரிசை பெற்ற அவர், அதைத் தனது பேத்தி வள்ளிமயில் நாச்சியாருக்கு வழங்கினார்.

வள்ளிமயில் நாச்சியார் சிங்கம்பட்டி ஜமீனுக்கு மணமகளாக வந்தபோது, தாத்தா அளித்த பரிசையும் பிறந்த வீட்டுச் சீதனமாகக் கொண்டு வந்தார். அதை இன்றும் பாதுகாப்பாக வைத்துள்ளார் முருகதாஸ் தீர்த்தபதி. இந்த ஜமீன்தாரர்களில் ஒருவர் ஆசையோடு வளர்த்த குதிரை ஒன்று திடீரென இறந்துவிட்டதாம். குதிரை இறந்துவிட்டாலும் அதன் நினைவைப் பாதுகாக்க விரும்பிய அந்த ஜமீன்தார், அதன் காலில் ஒன்றை வெட்டி, அதில் குளம்புக்கு அடியிலும், மேலேயும் வெள்ளிப் பூண் போட்டு அதை “ஆஷ் டிரே’ யாக பயன்படுத்தி வந்துள்ளார். (புகைவிடும் நேரமெல்லாம் புரவியின் நினைவு வந்து போகும் போலும்!)

அதுவும் இந்தக் கலைக் கூடத்தில் உள்ளது. சிங்கம்பட்டி ஜமீனுக்குச் சொந்தமான நிலங்களில் இருந்து ஆண்டுதோறும் 10 ஆயிரம் மூட்டை நெல் வருமாம். அதைச் சாதாரணமாக அளந்தால் எப்போது அளந்து, எப்போது முடிப்பது? எனவே நெல்லை அளக்க ஒரு பெரிய மரக்காலைப் பயன்படுத்தியுள்ளனர்.

தேக்கு மரத்தாலான இந்த மரக்காலை 2 பேர் சேர்ந்தால்தான் தூக்க முடியும். இப்போது நாம் பயன்படுத்தும் மரக்கால் அளவுப்படி 14 மரக்கால் நெல்லை அதில் ஒரு மரக்காலாக அளந்து போட்டுவிடுவார்கள். அதுவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஜமீனில் பயன்படுத்திய பூட்டு ஒன்று உள்ளது. மூன்று கிலோ எடை இருக்கும் அந்தப் பூட்டை பயன்படுத்த இரண்டு பேர் வேண்டும். பூட்டின் மேலே உள்ள மூடி போன்ற பகுதியை ஒருவர் இழுத்து பிடித்துக் கொண்டால்தான் அதை பூட்டவோ, திறக்கவோ முடியும்.

அந்தக் காலத்திலேயே அப்படி ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உள்ளனர். அந்தப் பூட்டு இன்றும் நல்ல நிலையில் உள்ளது. ஜமீன் பரம்பரை என்றால் தர்பார் வேண்டுமே! அதற்கென பயன்படுத்திய அலங்கார நாற்காலி ஒன்றும் உள்ளது. உயர்ந்த வகை மரத்தாலான அந்த நாற்காலி விலை மதிப்புள்ளதாம். தர்பார் கூடத்தில் 7 அடி நீளம், 7 அடி அகலம் கொண்ட கல் மேடை ஒன்று உள்ளது.

இந்த கல் மேடை, அதன் நான்கு கால்கள் அனைத்தும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. ஜமீன்தாரர்களுக்கு பட்டம் சூட்டும்போது அவர்கள் இந்தக் கல் மேடையில்தான் அமர்ந்திருப்பார்களாம். பழைய தமிழ் சினிமாக்களில் அரண்மனைச் சுவர்களில் சிங்கம், புலி, தலைகளை தொங்கவிடப்பட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.

ஜமீன் பரம்பரையினர் வேட்டையாடிக் கொன்ற யானையின் தலை எலும்புக் கூடு ஒன்று காப்பகச் சுவரில் மாட்டப்பட்டுள்ளது. ஜமீனில் வளர்ந்த 2 நாய்கள் இறந்தபோது அவற்றுக்கு சமாதி கட்டப்பட்டுள்ளது. அந்தச் சமாதியில் இருந்த நினைவுத் தூண்களும் காப்பகத்தில் உள்ளன. ஜமீனில் வளர்ந்த நாய்க்குக் கூட எவ்வளவு மரியாதை!

இங்கிலாந்து நாட்டில் தயாரிக்கப்பட்ட சிங்கம்பட்டி ஜமீனின் சிங்கக் கொடி பொறிக்கப்பட்ட பீங்கான் கோப்பைகள், “சோடா மேக்கர்’ போன்றவையும் உள்ளன. இவையெல்லாம் ஆங்கிலேயர்களால் ஜமீன்தார்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டவை. ஜமீன் அரண்மனையில் வளர்க்கப்பட்ட செல்லப் பிராணிகளின் நினைவாக அவற்றின் தோல் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

கடிகாரம், வாள், கடிதங்கள், திருமண அழைப்பிதழ்கள் ஆகியவையும் பாதுகாப்பாக உள்ளன. திருநெல்வேலியில் இருந்து 47 கி.மீ. தூரத்தில் உள்ள சிங்கம்பட்டி அரண்மனைக்குச் செல்வோர் விரும்பினால் இவற்றைப் பார்வையிடலாம். அதன் பொறுப்பாளர் பொ. கிட்டு, இந்தப் பழம் பொருள்கள் குறித்த விளக்கங்களை பொறுமையாக எடுத்துக்கூறுகிறார்.

ராஜ தர்பார்!

சிங்கம்பட்டி மன்னர் 32-வது பட்டம் மேதகு தென்னாட்டுப் புலி, நல்லகுட்டி, சிவசுப்பிரமணிய கோமதிசங்கர ஜெய தியாகமுத்து சண்முக சுந்தர முருகதாஸ் தீர்த்தபதி மகாராஜா பட்டத்துக்கு வந்ததில் இருந்து இன்று வரை ஆண்டுதோறும் அரசவை தர்பார் கொலுவில் வீற்றிருந்து ராஜ தரிசனம் தருகிறார்.

காரையாறு சொரிமுத்து அய்யனார் தேவஸ்தான அறங்காவலர் என்ற முறையில் ஆண்டுதோறும் கோயில் பெருவிழா நடைபெறும் ஆடி அமாவாசை தினத்தன்று ராஜ தர்பார் நடத்துகிறார். இதைக் காண திரளான கூட்டம் வருகிறது.

சிங்கம்பட்டி அரசு கி.பி. 1100-ல் உதயமானது. பாண்டியப் பேரரசின் கீழ் சிற்றரசாக இருந்தது. விஜயநகர மன்னர் காலத்தில் கி.பி. 1433-ல் பாளையமாகத் திகழ்ந்தது. ஆங்கிலேயர் ஆட்சியில் 1802-ல் ஜமீன்தாரியாக மாறியது. 900 ஆண்டுகளுக்கு மேல் பழைமைவாய்ந்தது சிங்கம்பட்டி ஜமீன் சமஸ்தானம். 1948-ல் ஜமீன் ஆட்சி முறை முடிவுக்கு வந்தது. சிங்கம்பட்டி சமஸ்தானத்தை 31 மன்னர்கள் பட்டம் தரித்து ஆட்சிபுரிந்து வந்தனர். தற்போது உள்ளவர் 32-வது “மன்னர்’.

தற்போதைய “மன்னர்’ எஸ். முருகதாஸ் தீர்த்தபதி ஆன்மிகத் திருப்பணிகளைச் செய்து வருகிறார். இதுவரை 23 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தியிருக்கிறார்.

அரச பதவியைத் துறந்தாலும் ஆன்மிகப் பணிகளில் ஈடுபட்டு 50 ஆண்டுகள் முடிவடைந்ததால் அன்பர்கள் அவருக்கு கடந்த செப். 29-ல் பொன்விழா கொண்டாடினார். அப்போது “மன்னரை’ தர்பார் கோலத்தில் மக்கள் தரிசித்தனர்.

…..

Share
This entry was posted in சிங்கம்பட்டி ஜமீன் and tagged . Bookmark the permalink.

3 Responses to ஜமீன் சிங்கம்பட்டி-2

  1. Kettle says:

    An intelligent point of view, well expresesd! Thanks!

  2. rajkumar says:

    1500 varudangalaga thirunelveli mavattathil ulla urkadu ennum oorai thalaimai idamaga kondu sumar 25 gramangalai aatchi seithu vantha zamindargalai patriya vibarangal ingu illathathu varuthamalikirathu

  3. rajkumar says:

    1500 varudangalaga thirunelveli mavattathil ulla urkadu ennum oorai thalaimai idamaga kondu sumar 25 gramangalai aatchi seithu vantha zamindargalai patriya vibarangal ingu illathathu varuthamalikirathu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *