வெள்ளைச்சாமித் தேவர் என்ற மதுரகவி பாஸ்கரதாஸ்

ச.முருகபூபதி தொகுத்த “மதுரகவி பாஸ்கர தாஸின் நாட்குறிப்புகள்”

தாத்தா தாஸின் நாட்குறிப்புகளை அவரது பேரன் முருகபூபதி பல ஆண்டுகள் தேடித் தேடி அவற்றைக் கோர்த்து அற்புதமாய் இந்நூலை நமக்குத் தந்துள்ளார். இந்த நாட்குறிப்பு 1.1.1917 லிருந்து துவங்குகிறது. 92 ஆண்டுகளுக்கு முன்பிருந்த தமிழக மக்களையும், அவர்களது கலைவாழ்வையும் முழுமையாக 20.9.1951 வரை 34 ஆண்டுகள் பதிவு செய்துள்ளார். இது ஒரு கடிதம், தகவல் இலக்கியமாய், கலைக்களஞ்சியமாய் 719 பெரிய பக்கங்களாக பாரதி புத்தகாலயம் வெளியிட்டு சாதனை படைத்துள்ளது. தமிழகத்தின் சமூக, அரசியல், கலை வரலாற்றை, நூறாண்டுகளுக்கு முன்பிருந்த வாழ்க்கையை நாம் நேரில் தரிசிக்க முடிகிறது. அந்த வகையில் இப்பெருநூல் ஒருகலைஞனின் காலப்பெட்டகமாய்த்திகழ்கிறது.


தாஸ் 1892ம் ஆண்டு ஜூன் 6ம்நாள் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் என்ற ஊரில் பிறந்தார். இளவதிலேயே மதுரையில் தனது பாட்டி வீடு சென்று நாடகக் கலைஞராய் மலர்ந்தார். கதரை உடலிலும் காந்தியை உள்ளத்திலும் ஏந்தி கடைசி வரை பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பில் உறுதியாய் நின்றுள்ளார். ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாடல்களை எழுத மேடையில் பாடியதற்காக 29 முறை கைது செய்யப்பட்டுள்ளார். இவரது பாடல்களைப் பாடிய விஸ்வநாததாஸ், காதர்பாட்சா போன்ற கலைஞர்களும் அக்காலத்தில் போலீசாரால் மேடையில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒருமேடை நாடக நடிகராக, பெருங்கவிஞராக, நடன, நாட்டிய, பாடல், ஆடல், நாடக நடிப்புப் பயிற்சியாளராக, திரைக்கதை மற்றும் உடையாடல் எழுதுபவராக, கிராமிய நாட்டுப்புறப் பாடல்களைச் சேகரிப்பவராக இவர் பன்முகப் பரிமாணங்களைக் கொண்ட கலைஞராக வாழ்ந்ததை இந்நாட்குறிப்புகளிலிருந்து அறிய முடிகிறது. தனக்கு மேடையிலும், தனிப்பட்ட முறையிலும் கிடைக்கும் பணம் மற்றும் பரிசுகள் சககலைஞர்களுக்கு வாரி வழங்கும் வள்ளலாக வாழ்ந்துள்ளார். சாதி வேறுபாடுகளைப் பாராமல் சக கலைஞர்கள், தலித்துக்கள் வீடுகளில் சாப்பிட்டு, அவர்களுக்கும் தனது வீட்டில் விருந்தளித்திருக்கிறார். தீண்டாமையை எதிர்த்தவராக இருந்துள்ளார்.

வெள்ளைச்சாமி என்ற இவரது இயற்பெயரை ராமனாதபுரம் சேதுபதி இவரைத் தனது அரசவையில் பாடவைத்து “முத்தமிழ் சேத்திர மதுரகவி பாஸ்கரதாஸ்” என்ற பெயரைச் சூட்டினார். இதில் பாஸ்கரன் என்பது பஸ்கர சேதுபதி மன்னரைக் குறிக்கும். இவரது பாடல்கள் பெரும்பாலும் விடுதலைப் போராட்ட வீரர்கள், அவர்களது தியாகங்கள், குறிப்பிடத்தகுந்த நிகழ்ச்சிகள் பற்றியதாகவே எழுதியுள்ளார். பிரிட்டிஷாருக்கு அஞ்சாமல் ஒவ்வொரு பாடலிலும் தனது பெயரையும் பதிவு செய்துள்ளார். மதுரை காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வைத்தியநாதய்யருடன் பேசி மதுரையில் நடிகர்களைத் திரட்டி கள்ளுக்கடை மறியல் போராட்டம் நடத்தியுள்ளார் தாஸ். புதுச்சேரி சென்று மூன்று மாத காலம் தலைமறைவு வாழ்க்கையும் நடத்தியுள்ளார்.

தாஸ் தனது காலத்தில் வாழ்ந்த விடுதலைப் போராளிகள் மகாத்மா காந்தி முதல் அனைத்துத் தலைவர்களோடும் தொடர்புடன் இருந்துள்ளார். காந்தியைப் பற்றிப்பாடல் எழுதி அவரிடமே கொடுத்துள்ளார். நாமக்கல் கவிஞர் போன்ற அவர் காலத்திய கவிஞர்களோடும் நெருக்கமாக இருந்துள்ளார். அக்கால நாடகக் கலைஞர்கள் அனைவரோடும் குருபீடத்தில் மதிக்கப்பட்டுள்ளார். எம்.எஸ்.சுப்புலெட்சுமி, கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் போன்ற கலைஞர்கள் இவர் இயற்றிய பாடல்களைப் பாடியுள்ளனர். நடிகர்களுக்கு மனக் குவிப்பு, நடுங்காத தேகம், ஞாபக சக்தி, குரல் வலிமை, உடை பற்றிய ஞானம் பற்றி வகுப்புகள் நடத்தியுள்ளார். அவரது மனக் குவிப்பு இதுவரை கேள்விப்படாத ஒரு சொல்லாகும்.

“ஜட்கா ஓட்டி சின்னுத்தேவன் பீட்டர் குடும்பனின் மகள் ஜெபமேரியைத் திருமணம் பண்ணிவைக்குமாறு அழுது வேண்டினான். அவனுடன் சென்று பீட்டர் குடுமபனின் குடும்பத்தாருடன் பேசி முடித்தேன். பீட்டர் குடும்பனின் பூட்டி என்னை ஆசீர்வசித்து அனுப்பினாள்” என்று தாஸ் தனது நாட்குறிப்பில் எழுதியுள்ளார். சாதிக்குரோதங்கள் மலிந்த அன்றைய சமூகத்தில் இதையெல்லாம் செய்து முடிக்கிற அளவுக்கு செல்வாக்குமிக்கவராய் திகழ்ந்துள்ளார். அதுமட்டுமல்ல, மணப் பெண் ஜெபமேரிக்கு ஒரு தங்கச் சங்கிலியும் பட்டுச்சேலையும் வாங்கிக் கொடுத்துள்ளார். தனக்குக் கிடைக்கும் பணத்தை எல்லாம் வாரி இறைத்திருக்கிறார். பணமில்லாத போது நோட்டு எழுதியும், சொத்தை அடமானம் வைத்தும் கடன் வாங்கிக் கூட பலருக்கு உதவியுள்ளார். நாடகத் துறைப் பணிகளோடு அவர் விவசாயமும் தொடர்ந்து செய்து வந்தது வியப்பாயிருக்கிறது.

தமிழகம் முழுவதும் சுற்றிய இவர் கொழும்பு யாழ்ப்பாணம் முதல் ஆலப்புழை வரை சென்று நாடகங்கள் நடத்தியுள்ளார். பின்னாளில் கம்யூனிஸ்ட்டுத் தலைவரான கே.பி.ஜானகியம்மாள் ஸ்திரீபார்ட் நடிகையாக ஏராளமான நாடகங்களில் நடத்துள்ளார். அவரது இளவயது புகைப்படமும் இந்நூலில் வந்துள்ளது. 1929ம் ஆண்டில் தங்கம் பவுன் ரூ.13க்கு கிடைத்துள்ளது. தாஸ் மதுரை அமெரிக்கன்கல்லூரி மாணவர்கள், மற்றும் பள்ளி மாணவர்களுக்கு தனித்தனியே நாடகப் பயிற்சியளித்துள்ளார். அவர் எழுதிய பாடல்களில் பனங்காட்டுப் பாடல்கள், சேவல் கட்டுப்பாடல், வன்னிமரப்பாடல்கள் வரை உள்ளன. 1931ல் ஒரு சந்தன சோப் விலை 4 அணா தான். அவர் தனது நாட்குறிப்பில் அன்றாட வரவு – செலவுகளையும் தவறாது எழுதியிருப்பதால் அக்கால விலைவாசி நிலைமைகளை நம்மால் புரிய முடிகிறது.

1938ல் மதுரையில் பேய் பொம்மை என்ற ஆங்கிலப்படத்தை தாஸ் பார்த்துள்ளார். சினிமா காட்சியின் போது பயந்து ஓடியசிலருக்கு தியேட்டர்காரர்கள் பாலும் பழமும் கொடுத்தனர் என்று குறிப்பிட்டுள்ளார். வயக்காட்டில் நின்ற மயில் கூட்டத்தில் காலில் காயம் ஏற்பட்ட ஆண் மயிலுக்கு மருந்திடச் சொல்லியிருக்கிறார் தாஸ். அவரது இறுதி நாட்களில் நாட்குறிப்பு பெரும்பாலும் நாகலாபுரத்திலேயே நிலைத்து விடுகிறது. நோயும் ஊசி மருந்துகளுமாய் குறிப்புகள் உள்ளன. ஆனால், பாடல்கள் எழுதுவது, பாடுவது மட்டும் குறையவே இல்லை. பலவிதமான மனிதர்கள், வினோதங்களைப் படித்தறிய முடிகிறது. கொடுத்தவன் ஏகாலியானாலும் அவனளித்த கொக்குக் கறியும் குதிரை வாலிச் சோறும் தாஸுக்கு இனிக்கிறது.

சினிமா சகாப்தம் தமிழகத்தில் 1931ல் துவங்குகிறது. தாஸ் திரைப்படங்களுக்கு வசனம் பாடல்களை எழுதியுள்ளார். காளிதாஸ், வள்ளிதிருமணம், பிரகலாதா, சுலோசனாசதி, திரௌபதி, வஸ்திராசுரன், ராதாகிருஷ்ணன், சதி அகல்யா, சாரங்கதாரா, ராஜா தேசிங், ராஜசேகரன், போஜராஜன், உஷா கல்யாணம், சித்திரஹாசன், ராதாகல்யாணம் போன்ற படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார்.

விடுதலைப் போராளிகள் போராட்டங்களை நடத்திச் சிறை சென்ற காலத்தில் தாஸ் தனது நாடகங்கள், பாடல்கள் மூலம் மக்களுக்குத் தேசபக்தியூட்டியுள்ளார். விடுதலைப் போரில் மக்கள் உற்சாகமுடன் பங்கேற்க அவரது பாடல்கள் உதவியுள்ளன. 75 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழக மக்களின் வாழ்க்கை, வளமைகள், நாடக மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள், நாதஸ்வரக் கலைஞர்கள், தலைவர்கள் என அனைவரையும் இந்த நாட்குறிப்பில் ஒரு சேர தரிசிக்கலாம். ஒப்பற்ற கலைஞனாக இருந்தும் எளிய மனிதர்களை நேசிக்கும் எளிய மனிதராகவே வாழ்ந்திருக்கிறார். இதை ஊன்றிப் படித்தால் ருசிகரமான தகவல்களும், ஆய்வாளர்களுக்கான விபரங்களும் கிடைக்கும். இம்மாபெரும் கலைஞர் 20.12.1952ல் நாகலாபுரத்தில் காலமானார்.

மதுரகவி பாஸ்கரதாஸின் மகள் சரஸ்வதியை மணந்த மருமகன் திரு.சண்முகம், ஒரு நாவல் எழுதியிருக்கிறார். அவரது புதல்வர்கள் தமிழ்ச்செல்வன், கோணங்கி, முருகபூபதி மூவருமே படைப்பாளிகள். மற்றொரு சகோதரர் பாலசுப்பிரமணியன் இவர்களுக்கு எல்லா வகையிலும் துணை நின்று வருகிறார். மதுரகவியின் பாரம்பரியத்தையும் சாதனைகளையும் இந்த நாட்குறிப்புகளில் நயம்படக் காண்கிறோம். மிகுந்த சிரமப்பட்டு இந்த நாட்குறிப்புகளை அவரது பேரன் ச.முருகபூபதி தொகுத்துள்ளார். இதே போன்று அவரது பாடல்களையும் தொகுப்பதோடு அவற்றை விசிடிகளில் பதிவு செய்து வெளியிட்டால் பெரும் சாதனையாய் நிலைத்து நிற்கும். இந்நூலை பாரதி புத்தகாலயம் சிறந்த முறையில் அச்சிட்டு வெளியிட்டுள்ளது.

அப்போது தேவர்கள் மாநாடு ஒன்று கூட்டியிருக்கிறார்கள். அந்த மாநாட்டிற்கு மதுரகவி பாஸ்கரதாஸ் அவர்களையும் முதுகுளத்தூர் முத்துராமலிங்கத் தேவர் அவர்களை-யும் கூப்பிட்டார்களாம். இருவருமே ஒரு ஜாதியின் பெயரால் கூட்டப்படும் மாநாட்டிற்கு வரமாட்டோம் என்று சொல்லிவிட்டார்களாம். மதுரகவி பாஸ்கரதாஸ் அவர்கள் மிகப் பெரிய இந்துஅபிமானி என்பது தெரிய வருகிறது. ஆனால், அவர் எல்லா ஜாதிக்காரர்-களோடும் மதத்தினரோடும் நல்லுறவு கொண்டு அற்புத மனிதராகத் தெரியவருகின்றார் அவருடைய நாட்குறிப்பின் மூலம்….

நாடகத்தில் தீவிர ஈடுபாடுகொண்ட வெள்ளைச்சாமித் தேவரென்ற பாஸ்கரதாஸ் 1925இல் இந்து தேசாபிமானிகள் செந்தமிழ் திலகம் என்னும் பாடல் நூலை வெளியிட்டார். இவரது பாடல்கள் சாதாரண வர்ண மெட்டுகளுடன் எளிதாகப் பாடக்கூடியவையாயிருந்ததால் மக்களிடையே பெரும் வரவேற்புப் பெற்றன. இவரது பல நாடக மேடைப் பாட்டுகளும் தனிப் பாடல்களும் பிராட்காஸ்ட் கம்பெனியின் கிராம்ஃபோன் தட்டுகளாக வெளிவந்தன. அதிலும் ‘வந்தே மாதரமே, நம் வாழ்விற்கோர் ஆதாரமே’ என்னும் பாட்டு மக்களிடையே மிகப் பிரபலமடைந்தது. இவரது பாடல்களைப் பாடாத கலைஞரே இல்லை….

மதுரையில் நாற்பதுகளில் இயங்கிய சித்ரகலா என்ற ஸ்டுடியோவுடன் பாஸ்கரதாஸ் கொண்டிருந்த தொடர்பு பதிவுசெய்யப்பட்டிருக்கின்றது. நடிகர்களின் அமைப்பிற்கெல்லாம் முன்னோடியாய் அமைந்த மதுரை நடிகர் சங்கத்தை 1926இல் தோற்றுவித்தவர் பாஸ்கரதாஸ்….

ஈ. வே. ரா, இ. மா. பாலகிருஷ்ண கோன், அரியக்குடி ராமானுஜம் அய்யங்கார், எம். எஸ். விஜயாள், முத்துராமலிங்கத் தேவர், தண்டபாணி தேசிகர் எனப் பல தமிழ்நாட்டு வரலாற்று நாயகர்களுடன் தொடர்புகொண்டிருந்தார். எம். எஸ். சுப்புலட்சுமிக்கு பாஸ்கரதாஸ் பாட்டுகள் எழுதித் தந்திருக்கின்றார்….

நன்றி :மதுரகவி பாஸ்கரதாஸின் நாட்குறிப்புகள்.

புத்தக விலை ரூ.400
வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை,
சென்னை – 18.

© தேவர் தளம்

This entry was posted in மதுரகவி பாஸ்கரதாஸ் and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *