வெள்ளையத்தேவன் வரலாறு.

கலெக்டர் ஜாக்ஸன்துரை கடுங்கோபத்தில் இருந்தான். தன் படைபலம், ஆயுதபலம், அதிகார பலம் எல்லாம் தெரிந்தும்கூட வீரபாண்டியகட்டபொம்மன் “”வரி கொடுக்க முடியாது” என்று சொல்லிவிட்டு வெளியேறுவதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எதிரியின் கோட்டைக்கே வந்து கர்ஜித்துவிட்டுப் போகும் சிங்கத்தைச் சுட்டு வீழ்த்த ஆணையிட்டான்.
ஆனால், எதிர்த்தவர்களின் தலைகள் வெட்டுப்பட்டன.
துப்பாக்கி தூக்கி வந்த வீரர்கள் பலர் கட்டபொம்மனின் வாளுக்கு இரையானார்கள். தடைகளைத்தாண்டி கோட்டைக்கு வெளியே வந்தான் கட்டபொம்மன். லெப்டினட் கிளார்க் என்ற வெள்ளைக்காரன் கட்டபொம்மனின் மார்புக்கு நேராக துப்பாக்கியைப் பிடித்தபடி தடுத்தான்.


ஒரு நொடி தாமதித்திருந்தாலும் கட்டபொம்மனின் மார்பில் க்ளாக்கின் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்திருக்கும். அந்த நொடியைக்கூட தாமதிக்க விடாமல், கட்டபொம்மனின் போர்படைத் தளபதி மாவீரன் வெள்ளையத்தேவன் க்ளார்க்கின் தலையை வெட்டினான். க்ளார்க்கின் தலையை கட்டபொம்மனின் காலுக்குக் கீழே விழச் செய்தான். சுற்றி நின்ற படைவீரர்கள் நடுங்கிப்போய்விட்டார்கள். வெள்ளையத்தேவனின் துணிச்சலைக் கண்டு “”என் உயிர் காத்த வெள்ளையத் தேவா?” என்ற கட்டபொம்மன் அவனை ஆரத் தழுவிக் கொண்டான். வீரன் வெள்ளையத் தேவன் மட்டும் அன்று அந்த துணிச்சலான முடிவை எடுக்காமல் இருந்திருந்தால், கட்டபொம்மன் உயிர் அன்றே போயிருக்கும். கட்டபொம்மனின் வரலாறு வேறுவிதமாக எழுதப்பட்டிருக்கும்.
சேது நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க இராமலிங்க விலாசம்கோட்டை வாயிலில்தான் இந்த வீரப்போர் நிகழ்ந்தது. இந்த சண்டையைத்தான் வீரத்தளபதி வெள்ளையத் தேவனின் வீரகாவியம் பேசும் சண்டையாகப் போற்றினார். நாட்டார் வரலாற்று அறிஞர்கள். “தலவாசல் சண்டை’ என்று கும்மிபாடினார்கள் நாட்டுப்புறமக்கள்
அந்த நன்றியை கட்டபொம்மன் மறக்கவில்லை. பாஞ்சாலங்குறிச்சியையே விழாக்கோலம் ஆக்கினான்.
வெள்ளையத்தேவனுக்காக மாபெரும் விழா ஒன்றை நடத்திக்காட்டினான். தனக்கு உயிர்ப்பிச்சை அளித்த வெள்ளையத்தேவனுக்கு “மை ஃபாதர்’ என்ற பட்டத்தைக் கொடுத்தான். “என் தந்தை வெள்ளையத்தேவன்’ என்று அழைத்தான். ஃபாதர் என்ற பட்டம்தான் பிற்காலத்தில் “பாதர் வெள்ளை’ என்று அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், “பகதூர்’ என்ற பட்டம்தான் கொடுக்கப்பட்டது என்று சொல்வோரும் உண்டு.

யார் இந்த வெள்ளையத்தேவன்?

சேதுபதி சமஸ்தானத்திற்கு உட்பட்டது சாயல்குடி என்ற கிராமம். இதன் தலைவர் மங்களத்தேவர். சிற்றரசர்களுக்குரிய அத்தனை சிறப்பகளையும் வீரத்தையும் கொண்டவர். இவருடைய மகன்தான் வெள்ளையத்தேவன் என்கிறார்கள்.
எட்டயபுரம் மன்னர் தனக்கு அளித்து வந்த இன்னல்களைக் எடுத்துக் கூறி, கட்டபொம்மன் மங்களத்தேவரிடம் உதவி கேட்டு வந்தான். “உதவி கேட்டு வந்தவர்களுக்கு இல்லை என்னாமல் உதவுவது நம் பண்பாடு’ என்ற நெறியில், அவருக்கு உதவ தன் மகன் வெள்ளையத்தேவனை அனுப்பியதாக ஒரு செய்தி கூறுகிறது. தந்தையின் ஆணைப்படி தனயன் வெள்ளையத் தேவன் கட்டபொம்மனுக்கு உதவ வந்ததாகவும், வந்த இடத்தில் வெள்ளையத்தேவனின் வீரம் கண்டு, அவனையே தன் படையில் தலைமைத் தளபதியாக நியமித்துக்கொண்டதாகவும் சிலர் கூறுகிறார்கள்.
இன்னொரு கட்டுக் கதையும் உண்டு. சிறுவயதில் கட்டபொம்மன் தன் தந்தையுடன் காட்டுக்கு வேட்டையாடப் போனதாகவும் அங்கு கண்டெடுக்கப்பட்ட குழந்தையை அரண்மனையில் வைத்து வளர்த்ததாகவும், அக்குழந்தைதான் பிற்காலத்தில் வெள்ளையத்தேவனாக வளர்ந்து, படைத் தளபதி அளவிற்கு உயர்ந்ததாகவும் ஒரு கதை வழக்கில் உண்டு. அந்த செஞ்சோற்றுக் கடனுக்காகத்தான் இறுதிவரை கட்டபொம்மனோடு இருந்து வெள்ளையர்களை எதிர்த்துப் போரிட்டு பல வெற்றிகளைப் பெற்றுத் தந்ததாகவும் செவி வழிச்செய்திகள் கூறுகின்றன.
வெள்ளையத்தேவன் பிறப்பிலேயே வீரம் கொண்டவன். இளம் வயது முதல் வேல் சண்டையில் அதிக ஈடுபாடு கொண்டவன். அவன் போருக்குப் போகும் முன்சேவல்போர் நடத்துவானாம். அதில் அவன் சேவல் வெற்றி பெற்றால் போரில் வெள்ளையத்தேவனை யாராலும் வெல்ல முடியாது. எந்த போரிலும் தோற்காத அவனது சேவல் அன்று நடந்த சண்டையில் தோற்றதால்தான் வெள்ளையருக்கு எதிராக நடந்த போருக்குப் போகாவிடாமல் அவன் மனைவி வெள்ளையம்மாள் தடுத்திருக்கிறாள். “”போகாதே போகாதே என் கணவா…. பொல்லாத சொப்பனம் தானும் கண்டேன்” என்ற ஒப்பாரிப்பாடல் இடம் பெற்றுள்ள நாட்டார் பாடலில் இச்செய்தியுள்ளது. “பகதூர் வெள்ளை’ என்ற பெயரில் உள்ள நாட்டுப்பாடலிலும் இந்த ஒப்பாரிப்பாடல் உள்ளது.
தேசிங்கு ராஜனின் பஞ்சக் கல்யாணி குதிரை போன்றதுதான் வெள்ளையத்தேவனின் குதிரையும்.
“ஒட்டப்பிடாரம் வழிதனிலே, ஓடி வருதாம் பேயக்குதிரை…” என்று அந்தக் குதிரையின் வீரத்தைப் பேசாதவர்களே இல்லையாம்.
1799செப்டம்பர் 1-ஆம் தேதி. திருச்செந்தூரில் நடந்த ஆவணி மாதத் திருவிழாவிற்கு கட்டபொம்மனும் ஊமைத்துரையும் சென்ற சமயம். ஒற்றர்கள் மூலம் இதை அறிந்த கர்னல் பானர்மேன், பாஞ்சாலங்குறிச்சியை முற்றுகையிட்டனர்.
பரங்கியர் படையோ பெரும்படை பீரங்கிகள், துப்பாக்கிப் படைகள், குதிரைப் படைகள் என்று ஆயிரக்கணக்கில் கொண்டு வந்து குவித்திருந்தான் ஆங்கிலேயன். பாஞ்சாலங்குறிச்சியில் இருந்ததோ மரபு ரீதியான ஆயுதம் தாங்கிய ஆயிரம் வீரர்கள்.என்றாலும் அஞ்சவில்லை தமிழ்ச்சிங்கங்கள். காரணம் அதற்குத் தலைமை தாங்கியது தலைமைத் தளபதி வெள்ளையத் தேவன். எதிரிகள் படையை அவன் தாக்கியதைக் கண்டு பரங்கியர் பயந்துபின்வாங்கினார்கள். பீரங்கிக்குண்டுகளிடமிருந்து கோட்டையைக் காக்க வெள்ளையத்தேவன் பட்ட பாட்டை எழுத்தில் எழுதமுடியாதாம். நூற்றுக்கணக்கான துப்பாக்கி வீரர்கள் அவன் மார்பை குறிவைத்தார்கள்.
ஆனால், எதிரிகளின் குண்டுகள் அவன் மார்பில் பாய்ந்தபோதும் விடாமல் தொடர்ந்து எதிரிகளை அவன் வாளுக்கு இரையாக்கிக்கொண்டே வந்தான்.
செய்தி கேள்விப்பட்டு கட்டபொம்மனும் ஊமைத்துரையும் திருச்செந்தூரில் இருந்து பாஞ்சாலங்குறிச்சி வந்ததை அறிந்தான். அதுவரை மார்பிலே குண்டுகளைத் தாங்கி, குத்தப்பட்ட வேலையும் பொருட்படுத்தாது பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைப் பத்திரமாக ஒப்படைத்தான். அடுத்தநொடி அந்தப் போர்க்களத்திலேயே வீரமரணம் எய்தினான் வெள்ளையத்தேவன்.
துப்பாக்கிக் குண்டுகளை முத்தமிட்டபோதும் இறுதிவரை மானத்தை இழக்காமல் மரணம் தொட்ட மாவீரன் வெள்ளையத்தேவன் பற்றிய வரலாறு அதிகம் எழுதாமல் போனது ஏனோ?

thanks -இரா.மணிகண்டன்
dinamalar
..
….
This entry was posted in வெள்ளையத்தேவன் and tagged , . Bookmark the permalink.

3 Responses to வெள்ளையத்தேவன் வரலாறு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *