விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு


இராமநாதபுரம் மன்னராக இருந்தவர் பாஸ்கர சேதுபதி. இவர் ஆன்மீகத்தில் அறிவாற்றல் மிக்கவராகவும் சொறபொழிவு நிகழ்த்துவதில் வல்லவராகவும் திகழ்ந்தார். அதனால் அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் நடக்க இருந்த உலக ஆன்மீக மாநாட்டில், இந்து மதத்தின் பிரதிநிதியாகக் கலந்து கொள்ள மன்னருக்கு அழைப்பு வந்தது.
இந்த அழைப்பு மன்னருக்கு வந்த வேலையில்தான் விவேகானந்தர் இராமநாதபுரம் வந்திருந்தார். விவேகானந்தருக்கும் மன்னருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. அறிமுகம் நட்பாக மாறியது. நட்பு விவேகானந்தரிடம் மன்னரை பக்தி செலுத்த வைத்தது.
விவேகானந்தர் அறிவாற்றலும், ஆன்மீகச் சிந்தனையும் தெளிந்த பார்வையும், தேர்ந்த ஞானமும் மன்னரை வியக்க வைத்தது. அதனால் தம்மைவிடச் சிறந்தவரான விவேகானந்தர் சிகோகோ செல்வதே சிறந்தது என்று மன்னர் முடிவு செய்தார். முடிவை விவேகானந்தரிடம் தெரிவித்தார். யோசித்துச் சொல்வதாகச் சொல்லிவிட்டு விவேகானந்தர் மன்னரிடம் விடைபெற்றார்.
அதன்பின் தாம் அமெரிக்கா செல்வதாக விவேகானந்தர் சென்னையிலிருந்து அறிவித்தார். அதையறிந்த இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி, விவேகானந்தர் அமெரிக்கா செல்வதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்தார்.
1893 மே 31 அன்று அமெரிக்கா புறப்பட்ட விவேகானந்தர், ஜூலை மாதத்தில் அமெரிக்காவில் உள்ள சிகாகோவை அடைந்தார்.
உலக ஆன்மீக மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன் ‘மெட்காப்’ என்ற நகரில் மகளிர் மன்றக் கூட்டத்தில் ‘இந்தியப் பெண்கள்’ என்ற தலைப்பில் விவேகானந்தருக்குப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. இதுதான் அமெரிக்க மண்ணில் ஒலித்த விவேகானந்தரின் முதல் முழக்கமாகும்.
பெண்கள் நிறைந்த அந்த மாநாட்டில் விவேகானந்தரின் முழக்கம் எழுச்சியோடு வரவேற்கப்பட்டது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஒரு இளம் பெண் விவேகானந்தரின் மீது அளவற்ற அன்பு கொண்டாள். அதனால் அமெரிக்காவில் விவேகானந்தரின் ஒவ்வொரு காலடியையும் இந்த இளம் பெண் உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கினாள்.
இந்த மாநாட்டிற்குப் பின் உலக ஆன்மீக மாநாட்டில் கலந்து கொண்ட விவேகானந்தர், அனைத்துச் சமயத்தைச் சார்ந்தவர்கள் பேசுவதையும் கவனித்தார். அங்கு பேசிய மேலைநாட்டு மத போதகர் அனைவரும் “ஜென்டில்மேன்” என்று தங்களின் பேச்சைத் தொடங்கினர். இந்த வார்த்தை கூடியிருப்போருக்கும், சொற்பொழிவாளருக்கும் இடைவெளி ஏற்படுத்துவதாக விவேகானந்தர் எண்ணினார்.
செப்டம்பர் 1-ம்தேதி விவேகானந்தர் பேச வேண்டிய முறை வந்தது. அவர் மேடை ஏறியதும், வேடிக்கைப் பொருளைப் பார்ப்பதுபோல் அனைவரும் விவேகானந்தரைப் பார்த்தனர். அவருடைய காவி உடையும், தலைப்பாகையும் மேலை நாட்டவர்களுக்குச் சிரிப்பை உருவாக்கியது.
பேண்ட், கோர்ட், டை என் மேடையில் பேசியவர்கள் மத்தியில் இப்படியொரு கோலத்தில் விவேகானந்தர் மேடையில் தோன்றியதும், கூடியிருந்தோரில் பலர் முகம் சுளித்தனர். இதுபற்றி அவர் கவலை கொள்ளவில்லை; கண்டு கொள்ளவும் இல்லை.
‘சகோதர சகோதரிகளே!’ என்று தமது சொற்பொழிவைக் கம்பீரமாக விவேகானந்தர் தொடங்கினார். ஏளனம் செய்தவர்கள் வாய் மூடினர். ஆடையைக் கண்டு அறுவறுப்டைந்தவர்கள் ஆச்சரியப்பட்டனர்.
சிறிது இடைவெளிவிட்டு மீண்டும் விவேகானந்தர் தமது பேச்சைத் தொடங்கினார். அரங்கம் முழுவதம் அவரையே பார்த்தது; அவர் பேச்சை மட்டுமே கேட்டது; அவர் சொல்வதைத் தங்கள் மனதில் பதிந்து கொண்டது. இந்தக் கூட்டத்தில ஆடையிலும், தோற்றத்திலும் அவர் தனித்து நின்றார் மேடை முழக்கத்திலும் அவரே தனித்து வென்றார். பேசி முடித்த பின் அவரைத் தொடர்ந்து ஒரு கூட்டமே வந்தது.
அந்தக் கூட்டத்தில் ‘மெட்காப்’ நகர் மகளிர் மன்றத்தில் விவேகானந்தர் பேசிய போது மனதைப் பறிகொடுத்த அந்த இளம் பெண்ணும் இருந்தாள்.
இந்த மாநாட்டில் மீண்டும் செப்டம்பர் 15, 19, 20 ஆகிய மூன்று நாட்கள் விவேகானந்தர் முழங்கினார். அப்போது,
“அளவுக்கு மீறிய மதப்பற்று, மூடபக்தி இவற்றிலிருந்து தோன்றிய மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாகப் இறுகப் பற்றியுள்ளன; வன்முறையை நிரப்பியுள்ளன; அடுத்தடுத்து உலகை உதிரப் பெருக்கில் மூழ்கடித்து, நாகரீகத்தை அழித்து, எத்தனையோ சமுதாயங்களை நம்பிக்கை இழக்கச் செய்து விட்டன. அந்தப் பயங்கரப் பைசாக் கொடூரச் செயல்கள் தோன்றாதிருப்பின், மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பன்மடங்கு உயர் நிலை எய்திருக்கும்” என்று விவேகானந்தர் முழங்கினார்.
விவேகானந்தர் பேசிவிட்டு வெளியில் வந்ததும் ஒரு பெரும் கூட்டம், அவரிடம் கையெழுத்துப் பெறுவதற்காகக் காத்திருந்தது
அதன்பின் விவேகானந்தரின் மந்திரச் சொற்பொழிவைக் கேட்டு மயங்கிய அமெரிக்கர்கள், அயோவா, செயிண்ட் லூயிஸ், கேம்பிரிட்ஜ், வாஷிங்டன், நியூயார்க் ஆகிய இடங்களில் எல்லாம் விவேகானந்தரைப் பேச வைத்து மகிழ்ந்தனர்.
விவேகானந்தர் அமெரிக்காவில் இருந்தபோதே அவருடைய சொற்பொழிவுகள் நூல்வடிவம் பெற்று அமெரிக்க மக்களிடத்தில் மகத்தான வரவேற்பைப் பெற்றன.
….
This entry was posted in சேதுபதிகள் and tagged . Bookmark the permalink.

One Response to விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *