முக்குலத்து வீரன் அழகு முத்துக்கோன் சேர்வை

(இந்த பதிவு நீண்ட பெரிய பதிவாக இருக்கலாம்.ஆனால், இங்கே சொல்லப்பட்டு இருக்கிற அனைத்து கருத்துகளும் மிக அரிய தகவல்கள்,அதனால்தான் எங்களால் எதையும் சுருக்கி பதிவேற்ற முடியவில்லை.காலம் கருதாமல் பொறுமையாக படித்து உணரவும் மறைக்கப்படும் வரலாற்று உண்மைகளை.
கோயில் = கோ+இல்; கோ – அரசு , இல் – இல்லம். அதுபோல, கோன் என்பது அரசன் என்ற பதத்தை குறிக்கும் சொல்.அழகு முத்து கோன் என்ற முக்குலத்து மாவீரனை கோனாராக்கி வேடிக்கை பார்ப்பதை உங்களுக்கு அறிய தரவே இந்த பதிவு. )

தாய் மண்ணின் உரிமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடிய முக்குலத்து மாவீரன் அழகுமுத்துக்கோனை நேருக்கு நேர் சந்திக்க பயந்த கும்பினியப்படை, அவனது கைகளிலும் கால்களிலும் விலங்குகளைப் பூட்டி, பீரங்கிக்கு முன்னால் நிறுத்தியது.

அவனைப் போலவே கைகளில் பூட்டப்பட்ட விலங்குகளோடு அவனது ஆறு துணைத் தளபதிகளும் 248 வீரர்களும் நிறுத்தப்பட்டார்கள்.

எங்களை எதிர்ப்போர்க்கு இதுதான் கதி என்று கும்பினிப்படை எக்காளமிட்டபடி அவர்களை சுற்றிச்சுற்றி வந்தது. `ம்’ என்றால் பீரங்கிகள் முழங்கும். வீரன் அழகு முத்துக்கோனும் அவனது வீரர்களும் உடல் சிதறிப் போவார்கள். அதைப் பொறுக்கமாட்டாமல்தான் அன்றைய நடுக்காட்டுச் சீமை பாளம்பாளமாய் வெடித்து சுட்டு எரித்துக்கொண்டிருந்தது.

“மன்னிப்புக் கேட்டால் இக்கணமே விடுதலை; வரி கொடுக்க சம்மதித்தால் உயிர் மிஞ்சும்” என்று கும்பினிப்படை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், “தாய் நாட்டின் மானத்துக்காக மரணத்தை முத்தமிடவும் நாங்கள் தயார் ” என்ற வீரன் அழகுமுத்துக் கோனின் கர்ஜனையைக் கேட்டு கும்பினிப்படை அதிர்ந்தது.

ஆத்திரம் கொண்டது.இருநூற்று நாற்பத்தெட்டு வீரர்களின் தோள்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. நிறுத்தி வைக்கப்பட்ட ஏழு பீரங்கிகளின் வாயில் இடப்பக்கம் மூன்று தளபதிகளையும் வலப்பக்கம் மூன்று தளபதிகளையும் நடுவில் வீரன் அழகுமுத்துக்கோனையும் நிறுத்தினார்கள்.

பீரங்கிகள் வெடித்துச் சிதறின. வீர மைந்தர்களின் ரத்தத்தால் நனைந்தது நடுக்காட்டுச் சீமை.இந்தியாவின் விடுதலைக்காக தன் இன்னுயிரை முதல் காணிக்கையாக்கி இந்திய விடுதலை வரலாற்றின் பக்கத்தில் இடம்பிடித்துக் கொண்டார் வீரன் அழகுமுத்துக்கோன்.தாய்மண்ணை அடிமைப்படுத்த நினைத்த ஆதிக்க சக்திகளுக்கு எதிராக சுதந்திர முழக்கமிட்ட மற்றுமொரு வீரனைத்  தேவர் சமூகம் தந்தது என்பது மறுக்கவும், மறைக்கவும் முடியாத வரலாறு.

ஆனால், அப்படிப்பட்ட முக்குலத்தை சேர்ந்த மாவீரனை வேறு யாரெல்லாமோ இன்று உரிமை கொண்டாடுவதை எண்ணி, உண்மையை உலகறிய செய்ய வெளிவந்த நூலை இங்கே தேவர் முக்குலத்தோர் தளத்தின் மூலமாக அறிய தருகிறோம்.படித்து தெளிவுறுக.
வீரன் அழகுமுத்து சேர்வை


நூல்             :  மறவர் குல மன்னன் வீரன் அழகுமுத்து சேர்வை
ஆசிரியர்    :  சேவாரத்னா நெல்லை மா. சேதுராமபாண்டியன்
வெளியீடு  :  அகில இந்திய தேவர் முன்னேற்றக் கழகம்,
44-A, மேல ரத வீதி, சி.என்.கிராம,
திருநெல்வேலி – 627 001

நுழைவாயில்:
எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டுமே அல்லாது வேறொன்றும் அறியேன் பராபரமே.
அன்புடையீர்! வணக்கம்! நலம் வாழ்க!

ஒரு பொருளை உரிமை கொண்டாடும் பொது, அது தனக்கு உரியது தான் என்பதற்கான சான்று அல்லது சாட்சி அல்லது மனசாட்சி வேண்டும். தனக்கு பொருள் ஏதும் இல்லை என்பதற்காக இன்னொருவர் வைத்திருக்கும் பல பொருள்களில் ஒன்றை தெரிந்தோ, தெரியாமலோ எடுத்து வைத்துக் கொண்டு அதற்கு சொந்தம் கொண்டாடுவது, எந்த வகையில் நியாயம்? எந்த வகையிலும் சொந்தம் கொண்டாடத் தகுதி இல்லாத போது, தவறாக சொந்தங் கொண்டாடி போலி பெருமை தேடுவது, சொந்தம் கொண்டாடுவோரின் தன்மானத்தின் மீது சந்தேகம் உருவாக வழி வகுக்காதா? இந்த சிந்தனையோடு, எழுதப்பட்டது தான் “வீரன் அழகுமுத்து சேர்வை மறவர் குல மன்னன்” என்ற இந்தச் சிறு நூலாகும்.

மற்றவர் பெருமையை அபகரித்து, போலி பெருமை தேடும் அளவுக்கு எங்கள்(முக்குலத்தோர்) சமூகம் இல்லை. ஏனெனில் எங்களுக்குள்ள வரலாற்றுப் பெருமைகள் வேறு எவருக்கும் இல்லை என்பது உலகறிந்த உண்மை. அதற்காக எங்கள் பெருமைகளில் ஒன்று திருடப்பட்டால் நமக்குத்தான் வேறு பல பெருமைகள் உள்ளனவே, இது ஒன்று போனால் போகட்டும் என்று விட்டு விட முடியாது. கூடாது. விட்டு விடுவது அல்லது விட்டுக் கொடுப்பது எங்களுக்குப் பெருமை தாராது. எங்கள் புகழ் அனைத்தையும் பேணிக்காக்கும் கடமையும், உரிமையும் எங்களுக்கு உண்டு.

இந்த நல்லெண்ணத்துடன் தான், மாவீரன் அழகுமுத்து சேர்வையை, அழகுமுத்து கோனாராக்கிப் பெருமைப் படுத்துவது சரியல்ல என்பதை எடுத்துக் கூறத்தான் இப்படைப்பு.நூலை மிக அடக்கத்துடன் எழுதியுள்ளேன்(ஆசிரியர்). எங்கள் வரலாற்றில் திரிபு திணிக்கப்படுவதை வரலாற்றுக்கு சொந்தக்காரர்களாகிய நாங்கள் வேடிக்கை பார்ப்பது நல்லதல்ல என்பது பொதுவான கருத்தாகும்.

வீரன் அழகுமுத்து சேர்வை என்ற பெயருடைய எங்கள் வீட்டில் பிறந்த வீரமகனை யாவரும் மரியாதையுடன் உறவாடலாம்! ஆனால் களவாடக் கூடாதல்லவா! களவாடுவதை தடுப்பது, அந்த வீரப் பிள்ளை பிறந்த தேவர்குலத்தாரின் தார்மீகக் கடமை அல்லவா! அந்தக் கடமையை இந்த சிறுநூல் மூலம் ஓரளவு செய்துள்ளதாக நம்புகிறேன்.

இதனை நடுநிலைமையுடன் சிந்திப்பவர்கள் அனைவரும், வீரன் அழகுமுத்து சேர்வை தேவர்குலத்து சிங்கம் என்பதை ஒப்புக் கொள்வார்கள்! வீரன் அழகுமுத்துக் கோன்(அரசன்) கோனார் அல்ல என்பதை புரிந்து அவருக்கு ரத்த வழி சொந்தம் கொண்டாட எங்களுக்கு மட்டுமே உரிமை உண்டு என்பதை ஒப்புக் கொள்வதுதான், அவர்கள் தங்கள் மனசாட்சியை மதிப்பதற்கு அழகாகும்.

போலிப் பெருமைக்கு தங்களை ஆளாக்கிக் கொண்டிருப்பவர்களில் பலருக்கு மாவீரன் அழகுமுத்து தேவர் குலத்தவர் என்பது தெரியும். ஆனாலும் இயன்றமட்டும் சாதித்துப் பார்ப்போம் என்ற உள்ளுணர்வுடன் செயல்படுகிறார்கள். வீண் முயற்சியில் அவர்கள் இன்னமும் ஈடுபடுவது, அவர்களுக்கு நல்லது அல்ல.

நான் எல்லோரையும் மதிப்பவன்(ஆசிரியர்). மனித நேயத்துடன் பழகுபவன். ஆனால் எங்கள் உரிமையிலோ, பெருமையிலோ வீணாகக் குறுக்கிடுவோரை எண்ணி வருத்துப்படுகிறவன். எங்களது விலை மதிப்பற்ற பொருளை கவர்ந்து கொண்டதாக எண்ணி, உள்ளுக்குள் மகிழ்ச்சி கொள்ளாதீர்கள். அது நீடிக்காது.

இந்தச் சிறுநூல் ஒரு மாவீரன் பிறந்த குலத்தின் பெருமையை பாதுகாக்கப் புறப்பட்ட படைக்கலன்களில் ஒன்று தான். நான் சமூக நல்லிணக்கத்தை உருவாக்கிட உழைப்பவன். யாரையும் புண்படுத்திடக்கூடாது; மனித நேயமே அமைதிக்கும், நல்வாழ்வுக்கும் துணை புரியும் என்ற நம்பிக்கை கொண்டவன். இந்த மனநிலையில் இருந்துதான் இச்சிறு நூலை, உண்மையை வெளிச்சமிட்டுக் காட்டிடும் வரலாற்று உணர்வுடன் எழுதினேன்.

எனை ஈன்ற தந்தைக்கும் தாய்க்கும் – மக்கள்
தனை ஈன்ற தமிழ்நாடு தனக்கும் – என்னால்
திணை அளவு நலமேனும் கிடைக்குமாயின், நான்
செத்தொழியும் நாள் எனக்கு திருநாளாகும்.
உன்னை ஒன்று வேண்டுகிறேன் – என்னால்
ஆவதொன்று உண்டாயின் அதற்கெந்தன்
உயிர் உண்டு!
(- பாவேந்தர் பாரதிதாசன்.)

அன்புள்ள சேவாரத்னா நெல்லை மா. சேதுராமபாண்டியன்.

வரலாறைத் தேடி


வரப் புயர நீர் உயரும்!
நீர் உயர நெல் உயரும்!
நெல் உயர கோன் உயரும்!
கோன் உயரக் குடி உயரும்! – அவ்வையார்.

இந்த வாழ்த்துப் பாடலில் “கோன்” என்ற சொல், அரசன், மன்னன் என்ற பொருளைக் கொண்டதாகும்! அவ்வையார் ஒரு மன்னனை வரப்புயர வாழ்க என்று வாழ்த்தினார். அதன் விரிந்த பொருளை பாடிக்காட்டினார். அது தான் மேற்கண்ட பாடல்.இந்தப் பாடலில் இடம் பெற்ற கோன் என்ற சொல்லை வைத்துக் கொண்டு எங்கள் சமுதாயத்தை தான் அவ்வையார் கோனார் என்று குறிப்பிட்டுள்ளார் என்று எவரும் கூறிடார்! வாதிடார்!

கோன்” என்ற சொல்லை கோனார் என்று நினைத்துக் கொண்டு, மாவீரன் அழகுமுத்துக் கோன் (அரசன்) என்ற அழகுமுத்து சேர்வையை தனது சமூகத்தைச் சேர்ந்தவர் என்று சொந்தம் கொண்டாடுவது வேடிக்கையானது.சேர்வைக்காரன் அல்லது சேர்வை என்ற சொல், சேர்த்து வைத்தவன் அல்லது சேர்ந்திருப்போர்க்குத் தலைவன் என்ற பொருளைக் குறிக்கும் சொல்லாகும்.

முக்குலத்தோர் என்று அழைக்கப்படும் கள்ளர், மறவர், அகம்படியர் என்ற முக்கிய 3 பிரிவுகளும் தேவர் என்ற ஒரு சமுதாயத்திற்குள் உள்ள உட்பிரிவுகளாகும்.இந்த முக்கிய 3 பிரிவுகளுக்குள்ளே சேர்வை, அம்பலம், தொண்டைமான், வாண்டையார் உள்ளிட்ட 34 கிளைப் பிரிவினர் உள்ளனர்.
அனைவரும் மறவர். நெல்லை மாவட்ட முன்னாள் ஆட்சித் தலைவர் பாஸ்கரத் தொண்டைமான் ஐ.ஏ.எஸ்., அவர்கள் “மறவர் சரித்திரம்” என்ற ஆய்வு நூலை விரிவாக எழுதி வெளியிட்டார். அதன் விளக்கம் காணலாம்.

சேர்வை என்ற பிரிவில்தான், மாவீரர்களான சிவகங்கை மன்னர்கள் – மருதுபாண்டியர்கள் வருகிறார்கள். அந்த மாமன்னர்களின் மானமிகு வீரமிகு தியாகத்தால் மேலும் பெருமை பெற்றது தேவர் சமுதாயம்.

வீரர்கள் வாழும் திராவிட நாட்டை வென்றவர் கிடையாது!

வேலும் வாழும் தங்கிய மறவர் வீழ்ந்ததும் கிடையாது!
எக்குலத் தோரும் ஏற்றிப்புகழ்வது எங்கள் பெருமையடா!
எம் முக்குலத்தோர்க்கே உலகில் உவமை காண்பது அருமையடா!
– என்று முகவை மண்ணின் மைந்தன் கவியரசு கண்ணதாசன் ‘சிவகங்கை சீமை’ திரைப்படத்தில் மருதுபாண்டியர்களை மனதில் நிறுத்தி எழுதிய பாடல் வரிகள் இவை.

தேவர் இன வரலாற்றை சங்க இலக்கியங்களை ஆய்வு செய்தும், தமிழக கிராமங்களில் ஆய்வு செய்தும் எழுதி, எக்காலமும் போற்றப்படும் எழில்மிக்க ஏற்றமிக்க நூலாக வெளியிடுமாறு, முனைவர் நாவுக்கரசு கா.காளிமுத்து அவர்களை கேட்டு, 29.06.2003ல் மதுரையில் நடந்த அகில இந்திய தேவர் முன்னேற்றக் கழகப் பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். காரணம், தேவர் சமுதாய மன்னர்களை, மாவீரர்களை, மாபெரும் தியாகிகளை, வேறு சமுதாயத்தினர் சொந்தம் கொண்டாடி, வரலாற்றுப் பிழை செய்ய முற்படுகின்றனர்.

தேவர் சமுதாயத்திற்கே உரிய பாண்டியர் என்ற சீர்மிகு அடைமொழியை யார் யாரெல்லாம் தங்கள் பெயருக்கு பின்னால் சேர்த்துப் போலி பெருமை தேடுகிறார்கள்! வரிப்புலியை போல் உடலில் சூடு பதித்துக் கொள்கிற காட்டுப் பூனைகளை வரிப்புலிகள் என்று வரலாறு அறிந்தோர் ஒத்துக் கொள்ளமாட்டார்கள்.

தேவர் வீட்டில் ஆண் மகவு பிறந்தால் “என்ன பாண்டியன் பிறந்திருக்கிறாராமே” என்றும், பெண் மகவு பிறந்தால் “என்ன நாச்சியார் பிறந்துள்ளாரா? நல்லா இருக்கிறாரா?”

என்றும் விசாரிக்கும் வழக்கம் இன்றளவும் தமிழ்நாட்டுக் கிராமங்களில் வழங்கி வருகிறது. ஆகவே, பிறவிப் பாண்டியர்களாக தேவர் இனம் பண்டைப் புகழ் தாங்கி விளங்குவதை காழ்ப்புணர்வுகளால் பொறுக்க இயலாமல் போவது இயல்புதான். சிலர் நன்றிக்காக தனது பெயரோடு அல்லது தங்கள் மகன்கள் பெயரோடு பாண்டியன் என்ற சாதிப் பெருமைக் குறியை சேர்த்து வைத்துக் கொள்வதையும் காணலாம்.

இறைவனுக்கு நிகராக ஆம்! அந்த தேவாதி தேவனுக்கு நிகராக விளங்கி நாட்டை ஆண்டவர்கள் தேவர் எனப்பட்டனர். அவர்கள் வீரமிகுந்தவர்களாக விளங்கி, போரிட்டு நாட்டைக் காத்தமையால் மறவர் ஆயினர். விவேகத்துடன் சங்கம் வைத்துத் தமிழ் வளர்க்கும் அளவுக்கு அவர்கள் பாண்டித்துவம் பெற்றிருந்ததால், அவர்கள் பாண்டியர் எனப் போற்றப்பட்டனர்.

தேவர், மறவன், பாண்டியன் என்று 3 சொற்களால் குறிப்பிடப்படுபவர்களும் தேவர் சமுதாயத்தினர் தான். இவையும் செய்த தொழிலை வைத்து வைக்கப்பட்ட பெயர்கள் தான் என்பதை நாங்கள் மறைப்பதற்கு இல்லை. பொதுவாக சாதிப் பெயர்கள் பலவும் அவர்கள் செய்த தொழிலை குறிக்கும்படியாக குறிக்கப்பட்டது.

செப்பேடு:

“எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப் பொருள் காண்பதறிவு”
என்ற வான்புகழ் வள்ளுவனின் தேமதுர அறிவுரையே இந்தக் குறள்பா. யார் என்ன சொன்னாலும், அதன் உண்மைப் பொருளை உணர்வது தான் அறிவு. ஆனால் அதற்கேற்ற மூளைப் பலம், ஆய்வுத் திறன், நடுநிலை சிந்தனை, பொறுமை, நிதானம், சாதிமத உணர்ச்சி வசப்படாமை தேவை.
இவை இல்லாதார்தான் எடுப்பார் கைப்பிள்ளைகளாக மாறி, உண்மை எது எனத் தெரியாமல் நுனிப்புல் மேய்ந்து, நுண்ணறிவை பயன்படுத்தாமல் சுயநலவாதிகளின் சூழ்ச்சி வலையில் விழுந்து வீண் வம்புகளை விதைக்க துணை நிற்கின்றனர்.

வீரன் அழகுமுத்து சேர்வைக்காரனை அவனது வீரம், ஆளுமைத் திறன் எண்ணி “கோன்” அதாவது மன்னன் என்ற அடைமொழி கூட்டி அழகுமுத்துக் கோன் என்று வழங்கினர். அழகுமுத்து பிறப்பால் சேர்வை (மறவர்) சிறப்பால் கோன்(அரசன், மன்னன்,ராஜா).

வீரன் அழகுமுத்து சேர்வையின் வாரிசுகள் சிலர் ,கட்டாலங்குளத்தில் தற்போதும் வாழ்கிறார்கள். சிலர், பிழைப்பு-தொழில் நாடி வேறு ஊர்களுக்கு சென்று வாழ்கின்றனர்.பத்திரங்கள் நடைமுறைக்கு வராத காலத்தில், தாள் உருவாகாத நிலையில் பத்திரங்களை செப்புத் தகடுகளில் எழுதிக் கொடுப்பது வழக்கமாக இருந்துள்ளது. வரலாற்றுக் குறிப்புகளை கற்களில் பொரித்து வைத்தனர்.
சிலைகள் வடிவில் செதுக்கி வைத்தனர்.செப்புத் தகடுகளில் எழுதித் தரப்பட்டவை பட்டயம் என வழங்கப்படுகிறது.

வீரன் அழகுமுத்து சேர்வைக்காரனுக்கு, காசி கோத்திரம் விஸ்வநாத நாயக்கரவர்கள் புத்திரன் பெரிய வீரப்ப நாயக்கன் அவர்கள் கிருஷ்ணா கோத்திரம் கோபால வம்சம் அழகுமுத்து சேர்வைக்காரன் புத்திரன் அழகுமுத்து சேர்வைக்காரனுக்கு எழுதிக் கொடுத்த செப்புப் பட்டயத்தின் ஒரு பகுதி நகல் இங்கே அப்படியே தரப்பட்டுள்ளது.


செப்புப்பட்டயம்:



மேற்கண்ட செப்புப்பட்டயத்தில் எழுதப்பட்டிருப்பதவாது:
இன்னான் கொல்கைக் குட்பட்ட நிலமும் மாத்தானம்பட்டி கிழக்கு மால் வைப்பாற்று எல்கைக்கு மேற்கு, தேற்குமால் குளத்தூர் எல்கைக்கு வடக்கு மேற்கு மால் செங்கப்படை எல்கைக்கு கிழக்கு, வடக்குமால் மந்திக்குலம் எல்கைக்கும் பெருமாள் கோவிலுக்கும் தெற்கு, இந்த நான்கு எல்கைக் குள்பட்ட நிலமும், இதில் கட்டாலங்குளம் சோழபுரம் வாலனம்பட்டி மாக்காலம்பட்டி ஆகக் கிராமம் நாளும் தனக்கு அமரமாகவும் தீத்தான்பட்டி குருவி நத்தம் கிராமம் இரண்டும் அழகப்பன் சேர்வைக்காரன் பாட்டாத்தார்க்கு தந்த மானியமாகவும் விட்டுக் குடுத்த படியினாலே ஆகக் கிராமம் ஆறு மதில்சேர்ந்த பட்டியும் இதிலுள்ள நஞ்சை புஞ்சை நிகி நிட்சேபமும் சிவதரு பாசானம் அச்சானிய ஆகாமியம் சித்த சாத்தியம் களெங்கிர அட்ட யோகா தேசாக்காரியங்களும் உன்னுடைய புத்திர பவுதிய பாரம்பரியமாக நயந்திரார்க்கு மாகக் தனாதி வினியவிக்கிரம யோக்கியமாகவும் ஆண்டனுபவித்துக் கொண்டு சுகமயிருக்கவும் இந்தப் படிக்குக் காசிப கோத்திரம் விசுவநாத நாயக்கரவர்கள் புத்திரன் கிருஷ்ணப்ப நாயக்கரவர்கள் புத்திரன் பெரிய வீரப்ப நாயக்கரவர்கள் கிருஷ்டினக் கோத்திரம் கோபால வம்சம் அழகுமுத்து சேர்வைக்காரனுக்கு எழுதிக் கொடுத்த பட்டையம் உ.மீனாட்சியம்மாள் துணை.

இதிலுருந்து அழகுமுத்து சேர்வைக்காரன் மகன் அழகுமுத்து சேர்வைக்காரன் என்பது விளங்கும். அதாவது, அழகுமுத்து செர்வைக்காரனின் தந்தையார் பெயரும் அழகுமுத்து சேர்வைக்காரன் என்பது தெரிகிறது. வீரன் அழகுமுத்து சேர்வைக்காரன் என்பதில் மட்டுமல்ல அவனது தந்தையின் பெயரில் கோனார் என்ற சாதிச் சொல் இடம் பெறவில்லை என்பதை சற்று ஊன்றிக் கவனித்தால் புரியும்.

இப்போது திரைப்படத் துறையில் கிராமிய இசையால் புகழ் பெற்று வருகிறவர் பரவை முனியம்மாள். “தூள்” படத்தின் மூலம் வெளி உலகுக்கு அறிமுகமாகி இப்போது “என புருஷன்”, “எதிர் வீட்டுக்காரன்” உள்ளிட்ட பல படங்களில் பாடி நடித்து வருவதோடு, சின்னத்திரையிலும் மின்னி வருகிறார் இவர்.

இவரது தந்தை வாடிப்பட்டி பக்கம் உள்ள செல்வகுலம் பெருமாள்பட்டியை சேர்ந்த கருப்பயா சேர்வை என்பது குறிப்பிடத்தக்கது. மதுரையில் படுகொலை செய்யப்பட்டாரே தா.கிருட்டிணன் இவரும் சேர்வை. சேர்வைக்காரன் என்ற சொல், சேர்வை சாதியில் பிரபலமானவரைக் குறிக்கும் சொல்லாகும்.

மேற்கண்ட பட்டயத்தில் இடம்பெற்றுள்ள கோபால வம்சம், கிருஷ்ண கோத்திரம் என்ற சொற்களைப் பற்றிக்கொண்டு தான், வீரன் அழகுமுத்து சேர்வையை கோனார் என்று கூறி சாதிசாயம் பூசி சிலை எடுத்தார்கள், விழா நடத்தினார்கள்.கோபால வம்சம் என்பது பிராமணர்களின் ஒரு பிரிவினரையும், வேறு மேல்சாதியரில் சில பிரிவுகளையும் குறிப்பிடும் சொல்லாக உள்ளது.

கோபாலன் என்ற பெருமாளை-நாராயணனை தலைமுறை தலைமுறையாக வழிபாடும் சமூகத்தின் சில பிரிவினர் கோபாலவம்சமாகத் தங்களை கூறி வருவது எல்லோரும் அறிந்ததே. கிருஷ்ண கோத்திரம் என்பது, கிருஷ்ணனாகிய கோபாலனை குல தெய்வமாக நீண்ட காலமாக வழிபடுவோரை குறிக்கும் சொல்லாக உள்ளது. இவ்வாறு வழிபடுவோர் விபூதியை நெற்றியின் மேல் நோக்கி நாமம் போல் பூசுகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள தேவர் சமூகத்தினர் நாராயணனை குல தெய்வமாக வழிபடுகின்றனர். இவர்கள் எல்லாம் தங்களை “கிருஷ்ணகோத்திரம்” என்று கூறிகிறார்கள். குலம் என்பது சாதியை குறிக்கிறது. முக்குலத்தோர், கோனார் குலத்தோர், பிராமணகுலத்தோர் என, என்ன சதியோ அந்த சாதியை ஒருங்கிணைத்துக் கூறும் சொல் ‘குலம்’ என்பதாக உள்ளது.

அனைத்து தமிழ் நாட்டையும் சேர்த்துக் குறிப்பிடும் போது ‘தமிழ்க்குலம்’ என்கிறோம். ஆகவே, கோபால வம்சம், கிருஷ்ண கோத்திரம் என்பது பரம்பரை வழிபாடு முறையை வைத்து பல சமூகத்தார்களின் உட்பிரிவினர் பலரை குறிக்கும் சொல்லாகும்.
சாதிகளில் நடுசாதியாகிய கோனார் என்ற இடையர் குலம் விளங்குகிறது. நெல்லை மாவட்டத்திலுள்ள கிராமங்கள் பலவற்றிலும் மறவனும்-இடையனும் ஒன்று. கொண்டை வைத்தவன் ‘மறவன்’. ‘கோ” வைத்தவன் இடையன் என்று கூறுவது வழக்கு மொழியாக உள்ளது.

இதிலிருந்து கோபாலவம்சம் கிருஷன் கோத்திரம் என்பது பல சாதிப் பிரிவுகள் பயன்படுத்தும் சொற்களே தவிர குறிப்பிட்ட ஒரு சாதியை அடையாளம் காட்டும் சொற்கள் அல்ல என்பது தெளிவாகிறது.அதுமட்டுமல்ல, இதே பட்டயத்தில் ‘காசிப கோத்திரம் விஸ்வநாத நாயக்கர் அவர்கள் புத்திரன் கிருஷ்ணப்ப நாயக்கர் அவர்கள் புத்திரன் வீரப்ப நாயக்கர் அவர்கள்’ என்ற வாக்கியமும் இடம் பெற்றுள்ளது.

காசிப கோத்திரம் என்றால், காசி விஸ்வநாதக் கடவுளாகிய சிவபெருமானை வழிபாடும் வழக்கம் கொண்டவர் என்பது பொருள். நாயக்கர்கள் எல்லாம் காசிப கோத்திரம் அல்லர். வீரபாண்டிய கட்டபொம்மன் ஜக்கம்மாள் என்ற பராசக்தியை வழிபட்டு வந்த சக்தி கோத்திரத்தை சார்ந்த நாயக்கர்.
ஆகவே காசிப கோத்திரம் காசி விஸ்வநாதக் கடவுளைக் குலதெய்வமாக பரம்பரையாக வழிபாடும் குலத்தாரை அல்லது குலத்தின் உட்பிரிவாளரைக் குறிக்கும் என்பதையும் தெளிதல் நன்று.

பொதுவில் தனது சாதிக்குக் ஒரு அடையாளம் தேவையென விரும்புவது, ஆசைப்படுவது சாதியத்தை வளர்த்து அதன் மூலம் சுயலாபவேட்டையில் ஈடுபடுவோரின் செயலாக மாறியது ஏன்? ஓட்டுக்காகப் பூசப்படும் போலிப் பூச்சுக்களும், பொய் விளம்பரங்களும் அடிப்படையை தகர்க்க முடியுமா? நீருக்குள் விடும் காற்று வெளியே வந்து தானே தீரும்!

இந்த சுதந்திரப் போருக்கு முதல் முழக்கமிட்ட மான மறவன் – மாவீரன் மன்னன் பூலித்தேவனுக்கு நெற்கட்டான் செவ்வல், வாசுதேவ நல்லூர், ராஜபாளையம் ஆகிய 3 இடங்களில் கோட்டைகள் இருந்தன! அவனது படை வரிசைகள் பல. அவற்றுக்குத் தளபதிகள் பலர். அவர்களுள் ஒருவன் ஒண்டி வீரன். இவன் பகடை சமுதாயத்தைச் சேர்ந்தவன்!

துப்புரவுத் தொழிலார்கள் தங்கள் குலத்தின் அடையாளமாக ஒண்டி வீரனை எண்ணிப் போற்றி புகழ்வதில் பொருள் உண்டு! நியாயம் உள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மனின் தலைமகனாக தலைமைத் தளபதியாக விளங்கி, போர்க்களத்தில் வெள்ளையரின் துப்பாக்கி குண்டுக்கு மார்புகாட்டி மடிந்த மாவீரன் பகதூர் வெள்ளையத்தேவன்.

அவனுக்கு அடுத்த நிலையில் இருந்த தளபதிகளில் வீரன் சுந்தரலிங்கம் ஒருவன். அவன் தாழ்த்தப்பட்ட சமூத்தின் அடையாள புருஷனாக போற்றப்படுவதில் பொருள் உண்டு. நியாயம் உள்ளது.

ஆனால் மன்னர் பாஸ்கர சேதுபதியையோ, வீரமங்கை வேலுநாச்சியாரையோ, மாமன்னர் பூலித்தேவனையோ, கட்டாலங்குளம் அழகுமுத்து சேர்வைக்காரனையோ தேவர் குலத்தில் இருந்து, ஆம் வீரமறவர் குலத்தில் இருந்து பிரித்துக் கொண்டு போய் யாரும் சொந்தம் கொண்டாட நினைப்பது அல்லது சொந்தங் கொண்டாடுவது வரலாற்றை பிழை படுத்துவதாக அமையாதா? அன்றைய கால கட்டத்தில் ஆளும் பொறுப்பில் பரவலாக தேவர்களும் இருந்ததற்கு, மனித லட்சன ஆராய்ச்சி அறிஞர்கள் செய்து வைத்த கபடமற்ற ஏற்பாடே காரணம்.

இன்ன லட்சணம் உடையவன் இன்ன தொழிலையே செய்வதற்கு ஏற்றவன் என ஆய்ந்தறிந்து தொழில் ரீதியில் சாதி பிரிவு ஏற்படுத்தப்பட்ட போது, மறவர் குலம் என்ற பாண்டியர் குலம் ஆட்சிப் பொறுப்புக்கு – காவல் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டது. அதன் படியே ஆட்சி அமைப்புகள், காவல் அமைப்புகள் உருவாயின.

மறவர் குலத்தில் 34 பிரிவுகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் சேர்வை. இந்த சேர்வை குலத்தவன் தான் கட்டாலங்குளம் ஜாமீன் அழகுமுத்து சேர்வைக்காரன் என்பதை உறுதிப்படுத்த எத்தனையோ சான்றுகள் உள்ளன.

அவற்றில் ஒன்று நாயக்க மன்னர் அழகுமுத்து சேர்வைக்காரனுக்கு பட்டியம் எழுதிக் கொடுத்ததைக் குறிப்பிடும் பழங்கால கல்வெட்டு ஒன்று. இது பாண்டிய மன்னர் வைத்த கல்வெட்டாகும். இந்தக் கல்வெட்டிலும் சேர்வை என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதும் சரியான சான்று.

இதோ அந்தக் கல்வெட்டு.

ஆவணங்கள் இன்றியமையாதன என்பதை நாம் அறிவோம். ஆனால் அது பற்றி நாம் அடிக்கடி சிந்திப்பதில்லை. ஆவணங்கள் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் இடம் பெறுகின்றன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இரயிலிலோ, பேருந்துகளிலோ, விமானத்திலோ பயணம் செய்யும் ஒரு நபர் அந்தப் பயணத்தை அவர் தொடர்ந்து நீடிக்கவும், தாம் போய்ச் சேரவேண்டிய இடத்தை அடையவும், அவரால் பெறப்பட்ட பயணச்சீட்டை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்.

வழக்குகளும் ஆவணங்களும்:

நீதி மன்றங்களில் வழக்குகள் உருவாகின்றன என்றால், அவைகளுக்கு போது மக்களோ அல்லது அதிகாரிகளோ காரணமாவர். அவர்கள் தொடுக்கும் வழக்குகளுக்கும், போலிஸ் தொடரும் பொதுநலம் சார்ந்த வழக்குகளுக்கும் அடிப்படை தேவை ஆவணங்களே.

பல்வேறு வழக்குளுக்கு முதல் தகவல் அறிக்கை (FIR) என்பது எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அறிவோம். அதுவே வழக்கின் அடிப்படை ஆவணமாகிறது. சில வழக்குகள் தொடர ஆவணங்கள் கிடைக்காமல், நீதியை பெறமுடியாமல் வழக்கறிஞர்களும், பொதுமக்களும், ஏன் நீதிபதிகளும் ஆதங்கப்படும் நிலைகளும் உண்டு.

ஒரு சில நேரங்களில் நீதிபதிகள் அதிர்ச்சி அடையும் வகையில் முக்கிய வழக்குகளில் திடீரென ஆவணங்கள் கிடைத்து, வழக்கின் உச்சகட்டத்தை ஏற்படுத்துகின்றன அல்லது யாராவது ஒருவர் வந்து தன்னிடம் ஆதாரம் இருப்பதாக கூறி ஆவணங்கள் சிலவற்றை நேரிலோ, வழக்கறிஞர்கள் மூலமாகவோ அளித்து வழக்கை திசை திருப்பி எல்லோரையும் பிரமிக்கச் செய்து விடுவதும் உண்டு.

சில நேரங்களில் நீதிபதிகளுக்கு அஞ்சலில் ஒரு தகவல் வந்ததாக தெரிவித்து, அதை ஒரு ஆவணமாகக் கருதி அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு அதன் மூலம் தீர்ப்புகள் உருவாவதும் உண்டு. இப்படி உருவாகும் பல்வேறு நீதிமன்ற ஆவணங்கள் அந்தந்த கால கட்டங்களில் உள்ள மக்களின் சமூக வாழ்க்கையினை பிரதிபலிக்கின்றன.

ஆவணங்களில் இந்திய கலாசார அடிப்படைகள்:
இந்தியக் கலாச்சாரத் தொன்மை பற்றிய ஆய்வுகள் யாவும் இன்னும் நடந்து கொண்டே இருக்கின்றன. அதற்கான ஆவணங்கள்/தகவல்கள் யாவும் புதை பொருட்களிலிருந்தும், கல்வெட்டுக்களிலிருந்தும், பழங்கால குகை ஓவியங்கள், நாணயங்கள் போன்றவற்றிலிருந்தும் ஆதாரங்களைச் சேகரித்த வண்ணமாகவே இருக்கிறோம். இது முடிவடையாத ஒன்று.
வீரன் அழகுமுத்து ‘சேர்வை’ (மறவர்) குலத்தவன் என்பதற்கு மேலே கண்ட பட்டய நகலும், கல்வெட்டு நகலும் வரலாற்று ஆவணங்கள்-அடிப்படை ஆதாரங்கள் அல்லவே? இன்னமுள்ள ஆதாரங்களை அடுத்து பார்ப்போம்.

சூடேற்றிக் கொள்வோம்:


அத்தோடு நமது குலகொழுந்தை சொந்தம் கொண்டாட வருவோரை வரவேற்போம். வீரர்களையும் தியாகிகளையும், யார் போற்றினாலும், துதித்தாலும் நாமும் அவர்களோடு இணைந்து செயல்படுவோம். ஆனால், நமது உறவை தனது உறவாக்க விபரம் தெரியாமல் யார் முற்பட்டாலும் அவருக்கு புரிய வைத்திடவும், நமது உறவை பாதுகாத்திடவும் நமக்கு உரிமை உண்டு. ஆகவே தான் இந்த சிறுநூல் உருவானது.

சங்கரதாஸ் சுவாமிகள நாடகக்கலையின் தந்தை என போற்றப்படுகிறார். அவர் மறவர் இனத்தின் ஒப்பற்ற கலை மைந்தர் ஆவார். அவரது பெயரில் ‘தாஸ்’ இருப்பதால் அவரை கோனார் என்று எண்ணி சொந்தம் கொண்டாட யாரும் முற்பட்டு விடக்கூடாது என்பது நமது கவலை. தியாகி விஸ்வநாத தாஸ் அவர்கள் நாவிதர் (மருத்துவர்) குலத்தை சேர்ந்த மாமனிதர்.

அவருடைய பெயரில் தாஸ் இருப்பதால் அவரையும் எதிகாலத்தில் கோனார் என்று கூறி யாரும் சொந்தம் கொண்டாட வந்துவிடக் கூடாது என்பதும் நமது கவலை. ஆனால் அப்படி நடக்காது என்று நம்புகிறோம். நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே வன்னிக்கோனேந்தல் என்ற கிராமம் உள்ளது.
அதாவது வன்னிக்கோன் ஏந்தல் என்பது அந்த ஊரின் பெயர். அந்தப் பகுதியை ஆண்ட மன்னனின் பெயர் வன்மையன். வன்மையன் என்றால் வன்மை மிக்கவன் என்பது பொருள். மன்னன் என்றால் கோன் என்பது பொருள்.

ஆகவே மன்னன் வன்மையன், வன்மையக்கொன் என்று அழைக்கப்பட்டான். அவன் சீர்மிகுந்த ஆற்றலும், சிந்தனையும் கொண்டிருந்ததால் ‘ஏந்தல்’ என்று போற்றப்பட்டான். ஆகவே அவன் ஆண்ட பகுதி வன்மையகோன் ஏந்தல் என்று வழங்கலாயிற்று.

அதுவே பிற்காலத்தில் மருவி வன்னிக்கோனேந்தல் என்று மாறியது. ஆகவே, இந்த ஊர் பெயரில் கோன் என்று இருப்பதை வைத்துக்கொண்டு வன்மையக்கோன், கோனார் குலத்தைச் சேர்ந்தவர் என்று இதுவரை யாரும் சொந்தம் கொண்டாடவில்லை.
அவ்வாறு சொந்தம் கொண்டாடி இருந்தால் வீரன் அழகுமுத்து மறவர் குலத்தை சேர்ந்தவன் என்று இன்று நாம் சான்றாவணங்கலோடு நிரூபிப்பது போன்ற மற்றொரு நிலை எழுந்திருக்கும். பிற்காலத்தில் இந்தப் பகுதி ஊத்துமலை மன்னரின் ஆளுகைக்கு வந்தது. ஊத்துமலை மன்னரும் மறவர் குல மாணிக்கமே என்பது உலகறிந்த உண்மை.

பரம்பரை ரத்தம் உடம்பிலே முறுக்கேறி

ஓடும் அறம் காத்த சமுதாயமே!
ஆன்மிகம் வளர – நிலைக்க ஆலயங்கள்
பல அமைத்த அரசகுலத் தோன்றல்களே!
வரிப்புலிகளை கண்டு தறிகெட்டு ஓடிய பூனைகள்
தங்கள் உடலிலே சூடு போட்டுக் கொள்வதாலேயே
பூனைகள் புலிகள் என்று எவரும் கருதிடார்!
ஆனால் தேவைப்படும் நேரத்தில் கூட பாயாமல் பதுங்கும் குணம் கொண்டோரின் பிறவியிலேயே சந்தேகம் வரும்! ஆகவே சந்தேகத்திற்கு என்றும் இடமளிக்காமல் உள்ளத்துள் உத்வேகம் கொண்ட முத்தமிழ் வளர்த்த முக்குலத்துச் சிங்கங்களே – முக்குலம் எனில் கள்ளர், மறவர், அகமுடையார் என மூன்று பிரிவுகளைக் கொண்ட நாம்!

நமது மூதாதையராம் சேர,சோழ,பாண்டிய மன்னர்களின் நீதி வலுவா ஆட்சியில், “கள்ளர்” என்பது மறைந்திருந்து பகை மூலத்தையும், நாடு நடப்புகளையும், உள்ளூர் துரோகிகளையும் அறிந்து அரசர்களுக்கு ரகசியமாகக் கூறும் ஒற்றர் படையைக் குறிக்கும் சொல்லாகும்.

“மறவர்” என்பது களத்தில் எதிரிகளை நேருக்கு நேர் சந்தித்து புறமுதுகு காட்டாமல், வீரப் போர் புரிந்து, நாட்டை காத்தோரைக் குறிக்கும் சொல்லாகும்.

“அகமுடையார்” என்பது கோட்டைக்குள் (அகத்தில்) இருந்த படைப்பிரிவினர். இவர்கள் கோட்டையை உள்ளேயும், வெளியேயும் காத்து நின்றோர். கோட்டைக்குள் புகுந்த எதிரிப்படைகளுடன் மோதி, அவர்களை அழிக்கும் வல்லமை வாய்ந்தவர்கள். இது அகமுடையார் பணியாக இருந்தது.

நமது மன்னர்கள் இந்த முக்குலத்தின் ஏக பிரதிநிதிகளாக, முக்குலத்தின் ஒப்பற்ற வீரமும் விவேகமும் கூடிய ஏந்தல்களாக இருந்தனர். மூன்று பிரிவுகளும் சமநிலை உடைய ஆட்சிப்பிரிவுகள். இந்த வரலாற்று உண்மையை நெஞ்சில் பதிய வைப்போம். யாவருக்கும் புரிய வைப்போம்.

இந்திய விடுதலைப் போரில் முதல் பலியானவர்கள் நாம்! ஆங்கில ஏகாதிபத்தியதிற்கு பேராபத்தை விளைவித்தவர்கள் நாம்! ஆட்சியை இழந்தோம்! உறவினர்களை பலி கொடுத்தோம்! உடமைகளை இழந்தோம்! ஆனால் தூக்குக் கையிற்றை முத்தமிட்ட போதும் மானத்தை இழக்காமல், மரணத்தை அணைத்தோம். இந்த வரலாறுகளை நினைவு கூர்ந்து நெஞ்சில் சூடேற்றிக் கொள்வோம்.

வெள்ளை ஏகாதிபத்திய ஏஜென்ட் கமாண்ட்டெண்ட் கான்சாகிப் பீரங்கிப் படைக்கு தன்னையும், தனது படை வீரகளையும் இந்த மண்ணின் விடுதலைக்காக பலி கொடுத்தவர் கட்டாலங்குளம் மன்னன் மாவீரன் மானமறவன் அழகுமுத்து சேர்வைக்காரன். அந்த மாவீரனின் நேரடி வழித் தோன்றல்களான லெஷ்மிராஜவிடம் இருந்து பல்வேறு தகவல்கள், வீரன் அழகுமுத்து சேர்வைக்காரர் பற்றி கிடைத்தது.

அழகுமுத்து சேர்வைக்காரனின் தந்தை அழகுமுத்து சேர்வைக்காரர் கட்டாலங்குளம் பகுதியை அரசாலும் உரிமையை, மதுரையை ஆண்ட மன்னர் கிருஷ்ணப்ப நாயக்கர் குமாரர் பெரிய வீரப்ப நாயக்கர் அவர்களிடம் ஒரு செப்பேட்டின் மூலம் பட்டயம் பெற்று அரசாண்டார். அந்தப் பட்டயத்தில் அழகுமுத்து சேர்வைக்காரன் புத்திரன் அழகுமுத்து சேர்வைக்காரன் எனக் குறிப்பிடப் பட்டுள்ளதை அறிந்தோம்.

அழகுமுத்து சேர்வைக்காரன் கான்சாகிப்பை எதிர்த்து பெத்தநாயக்கனூர் கோட்டையில் போரிட்டதாகக் கிடைத்திருக்கும் ஆதார நூல் வம்சமணி தீபிகை. இது எட்டையாபுரம் சமஸ்தானத்தில் வேலை செய்த சுவாமி தீட்சிதர் என்பவரால் எழுதப் பட்டது. அதில் அழகுமுத்து சேர்வைக்காரன் மற்றும் 5 படைத்தளபதிகளும் பீரங்கி வாயில் வைத்து சுடப்பட்டதாக குறிப்பிடப் பட்டுள்ளது.

எட்டயாபுரம் “ஃபாஸ்ட் அண்ட் பிரசண்ட்” என்ற ஆங்கில நூலை டபிள்யு. இ. கணபதிப்பிள்ளை என்பவர் எழுதியுள்ளார். அதிலும் வம்சமணி தீபிகையில் கூறியுள்ளபடியே சொல்லப்பட்டுள்ளது.

இந்த நூல் தான் தற்பொழுது அழகுமுத்து சேர்வைக்காரர் கான்சாகிப்பை எதிர்த்து போர் புரிந்தார் என்று சான்று காட்டுவதற்கு சிறந்த அடிப்படை நூலாக தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் உள்ளது. அந்த நூலில் அரசர் கொடுத்த பட்டயம் பற்றியும் தகவல் உள்ளது. அதிலும் அழகுமுத்து சேர்வைக்காரன் என்று தான் உள்ளது.

1932 ம் ஆண்டு அழகுமுத்து சேர்வைக்காரரின் வாரிசுதாரர்கள், அவர்களின் கார்டியன் பாக்கியத்தாய் அம்மாள் மூலம் தனது ஜாமீன் சொத்துக்களைப் பாகவிஸ்தி மூலம் பெறுகிறார்கள். சொத்தைப் பெற்றவர்கள் விபரம் கீழ்க்கண்டபடி குறிப்பிடப்பட்டுள்ளது.

1) அழகுமுத்து என்ற துரைச்சாமி சேர்வைக்காரர் இந்து ராயர்.
2) சின்னச்சாமி என்ற குமாரெட்டு சேர்வைக்காரர்
3) இவர்கள் இருவரின் மூத்த மகன்களுக்கு தனது இரண்டு மகள்களை பெண் கொடுத்த அப்பாவு அய்யா சேர்வைக்காரர் என்றே உள்ளது.

அவர் பத்திரத்தில் சாட்சியாகவும் ஜாமீன் மேனேஜராகவும் வருகிறார்.அந்த இரண்டு வாரிசுகள் தான் அழகுமுத்து சேர்வைக்காரரின் நேரடி வாரிசுகள், தற்போதும் வாழ்கிறார்கள்.

மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை, இராமநாதபுரம் ஆட்சித் தலைவர்களுக்கும் ஆதரங்களோடு பலரால் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜமீன் ஒழிப்பின் போது இந்திய அரசால் (எஸ்டேட் அபாலிசன் ஆக்ட் படி) நஷ்ட ஈடு பெற்றவர்களின் சான்று ஆவணம் இன்றும் தமிழ்நாடு அரசு செட்டில்மென்ட் டிபார்ட்மெண்டில் உள்ளது.
அதில்
1) அழகுமுத்து என்ற துரைச்சாமி
சேர்வைக்காரனின் புத்திரர்
காசிச்சாமி சேர்வைக்காரர் (சிவத்தசாமி அவர்களின் தந்தை)
2) சின்னச்சாமி என்ற குமாரெட்டு சேர்வைக்காரர் மற்றும் அவர்களின் புதல்வர்கள்:-

அ ) சின்னச்சாமி என்ற குமாரெட்டு சேர்வைக்காரர்
ஆ) சுந்தரராஜ சேர்வைக்காரர் வாரிசுதாரர் லக்ஷ்மிராஜா
இ) துரைராஜா சேர்வைக்காரர்
ஈ) பால்துரை சேர்வைக்காரர்
உ) செல்லச்சாமி சேர்வைக்காரர் என்றே உள்ளது.

இது 1955 க்குப் பின்னர் உள்ள ஆவணமாகும்.
இந்த உண்மையை நாட்டு மக்கள் அனைவருக்கும், குறிப்பாக தேவர் குல மக்களுக்கும், கோனார் குல மக்களுக்கும் தெரியப்படுத்துகின்ற நோக்கத்தில் இச்சிறுநூல் எழுதப்பட்டது.

கட்டாலங்குளத்திற்கான வருவாய்த்துறை ஆவணங்கள், ஊராட்சி ஆவணங்கள், வாக்களர் பட்டியல் இவற்றைப் பார்வையிட்டால், இப்பொழுது கூட ஒரு கோனார் வீடு கூட அங்கு இல்லை என்பதை அறியலாம்.

தற்போது, கட்டாலங்குளம் ஊராட்சித் தலைவராக இருப்பவர் திரு. இரா.கருப்பசாமி பாண்டியன் அவர்கள் என்பது குறிப்படத் தக்கது.
ஆகவே காயங்களை நியாயப்படுத்தக் கூடாது. நியாயங்களை காயப்படுத்தவும் கூடாது. வரலாற்றினைப் பேணுவோம்! மாவீரன் அழகுமுத்து சேர்வையைப் போற்றுவோரை போற்றுவோம். பொதுவில் தியாகிகள் அனைவரையும் போற்றுவோம்.அவர்களது வரலாற்றை நமது வாரிசுகளுக்கு பாடம் சொல்லுவோம்.

“சீறி வந்த புலியதனை முறத்தினாலே சிங்காரத் தமிழ் மறத்தி துரத்தினாளே”

இது நமது அன்னையின் பெருமை. இந்தப் பெருமையை காப்போம்.
இச்சிறுநூல் யாரையும் எள்ளளவும் மனநோகச் செய்யாது. யார் மீதும் நமக்கு வெறுப்போ, காழ்ப்போ இல்லை.

சமுதாய நல்லிணக்கம் பேணுவோம், நமது சரித்திரத்தை காப்போம்.
வாழ்க தமிழ்! வெல்க வீரத்தமிழர்!

சிறப்பு நன்றி : வரலாற்று உண்மைகளை உலகிற்கு அறிய தந்த சேவாரத்னா நெல்லை திரு. மா. சேதுராமபாண்டியன் அய்யா அவர்களுக்கும்,இந்த பெரிய பதிவை எங்களுக்கு வழங்கிய உறவினர் திரு. தனியன் அவர்களுக்கும் எங்களது நன்றிகளை காணிக்கையாக்குகிறோம்.

……
This entry was posted in அழகு முத்துக்கோன் சேர்வை and tagged . Bookmark the permalink.

14 Responses to முக்குலத்து வீரன் அழகு முத்துக்கோன் சேர்வை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *