முக்குலத்து இளைஞர்கள் செய்ய வேண்டியது என்ன?

தேவர் புகழ்
தற்போது முகநூலில் இளைஞர்கள் தங்கள் ஆர்வமிகுதியால், பசும்பொன் திருமகனின் தலையை மட்டும் தங்கள் அபிமான நடிகர்களின் படங்களில்  ஒட்டி வெளியிடுகின்றனர். அவரின் கையில் அரிவாளை கொடுக்கின்றனர். உண்மையில் தேவரின் புகழை பரப்ப வேண்டும் என்றால் இளைஞர்கள் அனைவரும் தேவரின் வாழ்க்கை வரலாறை படிக்க வேண்டும். அவரது பேச்சுக்களை வாசித்து அறிய வேண்டும். அதன் பின்னர் அவரது கருத்துக்களை பின்பற்ற வேண்டும், பரப்ப வேண்டும். அதுவே அவரது புகழை பரப்புவதற்கான சரியான முறையாகும்.
சுயசாதிப் பெருமையை தவிர்த்தல்
தேவர்கள் வீரம் நிறைந்தவர்கள். பண்டைக் காலத்தில் படை வீரர்களாகவும், ஆட்சியாளர்களாகவும் இருந்தவர்கள். நமக்கு ஒரு பெருமை மிக்க வரலாறு உள்ளது என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது. அதேவேளையில், இந்த பெருமைகளை நாம் இன்னும் எத்தனைகாலம் சொல்லி அதை வைத்தே நாம் நம் தினசரி வாழ்க்கையை ஓட்டுவது என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும். அதாவது நாம் நமது பெருமையை விட்டுக் கொடுக்காமல் அதேவேளையில் பொது சமுதாயத்தில் நமது நியாயத்தை பேசி நமது உரிமைகளை எப்படி நிலைநாட்டுவது என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

தமிழகம் பல்வேறு சாதிகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது என்ற நிலையில் நாம் பொது சமுதாயத்திலிருந்து பிரிக்கப்படுபவர்களாக ஆகக் கூடாது. நாம் பேசும் பெருமையே மற்றவர்கள் நம்மை வெறுக்க காரணமாக ஆகக் கூடாது. நாம் மாற்றுச் சாதிகளாலும் விரும்பப் படுபவர்களாக ஆக வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் நாம் நமது நடவடிக்கைகளை பொதுமக்கள் விரும்பும் வண்ணம் மாற்றிக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக, நாம் ஆண்ட பரம்பரை என்று சொல்வதை விட நாம் போர்ப் பரம்பரை என்பதை யாராலும் மறுக்க முடியாது. எக்குலமும் வாழணும் முக்குலம்தான் ஆளணும் என்பதற்கு பதிலாக எக்குலமும் ஆளட்டும் எங்கள் அரசியல் பங்கை கொடுக்கட்டும் என்பது போன்ற வாதங்களை நாம் முன் வைக்கலாம்.
ரசிகர் மன்றங்கள்
திரைத்துறையில் தேவர் சமுதாயத்தியனருக்கு குறைவில்லை. கார்த்திக், கருணாஸ் போன்றோர் நம் இனத்தை சேர்ந்த முன்னணி நடிகர்களாக உள்ளனர். அவர்கள் அரசியல் கட்சிகளையும் துவக்கி நம் சமுதாயத்திற்காக செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு ரசிகர் மன்றங்கள் வைத்திருப்பதில் தவறில்லை. அதேபோல மற்ற முன்னணி நடிகர்களான விஜய், அஜீத், சூர்யா போன்றோருக்கும் நமது சமுதாயத்தினர் ரசிகர் மன்றங்களை வைத்துள்ளனர்.
நடிகர்களைப் பொறுத்த வரையில் அவர்கள் பொழுதுபோக்குத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான பெயரும் பணமும் அவர்களுக்கு கிடைக்கிறது. நாம் அவர்கள் நடித்த படங்களை கண்டு ரசிக்கிறோம். ஆனால் சமுதாயம் என்று வரும்போது யாரால் நமக்கு நன்மை ஏற்படும். அவர்களுக்கு நாம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும். திரைப்படங்களை ரசிக்கும்போது ரசிகர்களாக இருக்கலாம். மற்ற நேரம் சமுதாய உணர்வுடன் செயல்பட வேண்டும்.
வாசிப்பை அதிகரித்தல்
முகநூல் மற்றும் ஏனைய இணையங்களில் வாக்குவாதத்தில் ஈடுபடும் சொந்தங்கள், யாராவது தேவரைப் பற்றி தவறாக பேசும்போது உடனே ஆத்திரப்பட்டு வசைமொழிகளை கூறுகின்றனர். அது தவறு. இதுவே நமது குணாதிசயத்தை நிர்ணயிப்பதாக உள்ளது. மற்றவர்கள் தேவரைப் பற்றி தவறாக பேசும்போது அவர்களிடம் சரியாக வாக்குவாதம் செய்ய வேண்டும். அவர்கள் அப்படிச் செய்வதற்கான காரணம் என்னவென்று கேட்க வேண்டும். ஆத்திரப்படாமல் நிதானமாக நமது கருத்தை ஆணித்தரமாக பதிய வேண்டும்.
விவேகம் இல்லாத வீரம் முட்டாள்த்தனம் என்ற தேவரின் கூற்றுக் கேற்ப நமது வீரத்தை விவேகத்தின் பாதையில் திருப்ப வேண்டும். ஜனநாயக அரசியலில் சிறந்த வாக்குவாதங்களே நமது கருத்தை வலியுறுத்தும் ஆயுமாக அமையும். அதற்காக நாம் புத்தகங்கள், பத்திரிகைகள், இணையங்களில் வாசிப்பை அதிகரிக்க வேண்டும். அவ்வாறு சேகரிக்கும் தகவல்களைக் கொண்டு நாம் நமது வாதங்களை ஆணித்தரமாக வைத்து வெல்ல வேண்டும்.
கற்றோரின் சமுதாயப் பணி
பொதுவாகவே நம் சமுதாயத்தை சேர்ந்த படித்தவர்கள் சமுதாயப் பணிகளில் ஈடுபடுவதில்லை. ஏனெனில் அவர்கள் அவ்வாறு இறங்கினால் படிக்காதவர்கள் செய்யும் செயல்களை தாமும் செய்ய வேண்டும், சண்டைச் சச்சரவுகளில் ஈடுபட வேண்டும் என்று எண்ணுகின்றனர். இவர்கள் வன்முறை, காலித்தனத்தை வெறுக்கின்றனர். இதனால் சமுதாயப் பணியிலிருந்து ஒதுங்கி நிற்கும் இவர்கள் தாங்கள் முக்குலத்தோர் என்பதை காட்டிக் கொள்ளவும் தயங்குகின்றனர். ஆனால் மற்ற சமுதாயங்களில் அப்படி இல்லை.
முக்குலத்தோர் உயர கற்றறிந்த அனைவரும் தங்களால் இயன்றவரை சமுதாயப் பணியில் ஈடுபடவேண்டும். அவர்கள் தைரியமாக தங்கள் கருத்துக்களை தங்கள் பகுதிகளில் உள்ள சமுதாயப் பெரியவர்களிடம் எடுத்துக் கூற வேண்டும். நமது சமுதாய முன்னேற்றத்திற்கு கற்றோரின் பங்கு அவசியம்.
பொதுக் கருத்துக்களில் தெளிவடைதல்
நாம் தமிழர்கள் மத்தியில் பேசப்படும் விஷயங்களில் ஒரு தெளிவை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். தொடரும்  பிரச்சனைகளான, காவிரி நதிநீர் பங்கீடு, முல்லைப் பெரியாறு நீர் மட்டத்தை உயர்த்துதல், கச்சத் தீவை மீட்டல், மீனவர் தாக்கப்படுதல், ஈழத்தமிழர் உரிமை, மின் வெட்டு, அணுமின் எதிர்ப்பு போன்ற விஷயங்களில் நாம் நமது கருத்து என்னவாக இருக்க வேண்டும், இந்த பிரச்சனைகளில் எந்த நிலை நமக்கு பயன் அளிப்பதாக இருக்கும் என்பதில் ஒரு தெளிவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
சமுதாய நிலை
நாம் நம்மை தமிழகத்தில் உள்ள மற்ற சாதிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அரசியல் – பொருளாதார நிலைகளில் நாம் பின்தங்கியே உள்ளோம் என்பதை கண்டுகொள்ளலாம். தமிழகத்தில் நாம் நமக்கான அரசியல் – பொருளாதார நிலையை அடையவில்லை. இதை எவ்வாறு அடைவது என்பதைப் பற்றி கற்றறிந்தோரும் மற்றவர்களும் சிந்தித்து அதன்படி ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
பொது அரசியலில் நாம் ஒதுக்கப்படுபவர்களாகவும் மற்றவர்களின் அரசியலுக்கு பயன்படுபவர்களாகவும் இருந்து வருகிறோம். இதற்கான காரணங்களை ஆராய்ந்து நாம் நம்மிடையே கருத்தொற்றுமையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
மாற்றுச் சாதிகளுடன் உறவு
நாம் முக்குலமாக இருக்கின்ற காரணத்தால் மற்றவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என்று பொருளில்லை. அதேபோல மற்ற எந்த சாதியும் நமக்கு எதிரியும் அல்ல. மற்ற எல்லாச் சாதியினரும் தமிழர்கள் என்ற முறையில் நமக்கு சகோதரர்களே என்ற கண்ணோட்டத்தில் நாம் மற்றவர்களுடன் பழக வேண்டும். சிலர் அறியாத காரணங்களால் தேவையில்லாமல் நம்மீது வெறுப்புடன் நடந்துகொள்ளலாம். இது அவர்கள் மீது திணிக்கப்பட்ட கற்பிதங்களால் ஏற்பட்டுள்ளது.
அப்படி உள்ளவர்களை நாம் வெறுக்க வேண்டும் என்று பொருளில்லை. அவர்கள் நம்மை வெறுப்பதற்கான காரணங்கள் என்னவென்று அறிந்து அவற்றை போக்குவதே சிறந்தது. நாம் நமது அன்பால், விவேகத்தல் அனைவரையும் வெல்வோம். தேவர் புகழ் வாழ்க.
அ. பெருமாள் தேவன், மும்பை
(தேவர் மலர் குருபூஜை சிறப்பிதழுக்காக எழுதப்பட்டது)
This entry was posted in தேவர். Bookmark the permalink.

5 Responses to முக்குலத்து இளைஞர்கள் செய்ய வேண்டியது என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *