ராமநாதபுரம் சேதுபதி மாமன்னர்களின் கொடைகள் :

1) குமாரமுத்து விசய ரகுநாத சேதுபதி, பிற மதத்தினரையும் மதித்து 1734ல் ராமநாதபுரம் ஈசா பள்ளிவாசலுக்கு ‘கிழவனேரி ‘ எனும் ஊரைத் தானம் செய்தார்.

2) 1742ல் முத்துக்குமார விசய ரகுநாத சேதுபதி ஏர்வாடி பள்ளிவாசலுக்கும், ராமேஸ்வரத்தில் உள்ள ஆபில்,காபில் தர்காவுக்கும் நிலக்கொடைகள் அளித்துள்ளார்.

3) கடைசி சேதுபதியான முத்துராமலிங்கம், முத்துப்பேட்டை கிறிஸ்தவ தேவாலயத்திற்கு 1781ல் ‘தெஞ்சியேந்தல் ‘ எனும் ஊரைக் கொடையாகத்தந்துள்ளார்.
மடங்கள் பெற்ற கொடை:

சேதுபதி மன்னர்கள் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு கொடையளித்த ஊர்களும், நிலங்களும் எக்கச்சக்கம்.
1) கிபி 1661 ஆம் ஆண்டில் திருமலை சேதுபதி ரகுநாதத்தேவர், ‘மதுரை திருமலை நாயக்கரின் புண்ணியத்திற்கும், தம் தந்தை தளவாய் சேதுபதி காத்த தேவரின் புண்ணியத்திற்கும், தமது பெற்றோர்களின் பற்றகத்திற்குப் புண்ணியம் ஏற்படவும், திருவாவடுதுறை சைவ மடத்தின் கீழுள்ள திருப்பெருந்துறைக்கோவிலின் உஷாக்கால பூஜைக்காக, ஆதீனத்திற்கு வெள்ளாம்பற்றுச் சீமையிலிருந்து, முத்து நாட்டுச்சிமை வரை ஏராளமான ஊர்களைக் கொடையளித்தார். இதே ஆதீனத்திற்கு 1668ல் பெருங்காடு எனும் ஊரையும், 1673ல் உச்சிக்கால பூஜைக்கு ‘தச்ச மல்லி ‘ எனும் ஊரையும் இறையிலி ஆக்கி உள்ளார்.


2) கிழவன் சேதுபதி 1678ல் ஆதீனத்திற்கு உச்சிக்கால பூஜைக்காக ‘புல்லுக்குடி ஏந்தல் ‘ ஊரைத்தானமாக அளித்தார்.
3) 1680ல் சேதுபதி ரகு நாதத்தேவர் அவர்கள், திருமலை சேதுபதி காத்ததேவர் புண்ணியத்திற்காகவும், சாத்தக்காள் ஆயி, தம்பியாயி ஆகியோர் புண்ணியத்திற்காகவும், ‘நரிக்குடி ‘ உள்ளிட்ட ஐந்து கிராமங்களை வரியின்றி அனுபவிக்கச் செய்தார்.
4) பொசுக்குடி செப்பேடு (காலம்: 1731) குமாரமுத்து விசய ரகுநாத சேதுபதியால் வெட்டப்பட்டது. இது திருவாவடுதுறை ஆதீனத்திற்கு பொசுக்குடி எனும் ஊரை ஈந்த செயலை ‘மடப்புறம் ‘ என்றது. (இதன்மூலம் மடப்புறம் என்பது சைவ மடத்திற்கு அளிக்கப்பட்ட தானம் எனலாம். மதுரையை அடுத்த மடப்புரம் எனும் ஊரும் இத்தகைய சிறப்பைப் பெற்றிருக்கலாம்). இதே சேதுபதி 1733ல் வணிகர்கள் இவ்வாதீனத்திற்கு ‘மகமை ‘ தரச்சொல்லி திருப்பொற்கோட்டை செப்பேட்டில் சொல்லி உள்ளார்.

5) முத்துராமலிங்க சேதுபதி 1782ல் ஆதீனத்தின் ஆவுடையார் கோவில் உச்சிக்காலபூஜைக்கு சில நிலங்களையும் (ரெவ்விரண்டு குறுக்கம் நன்செய் உட்பட), தோப்புகளையும் ஆண்டனுபவிக்கச் செய்தார். வள்ளைக்குளம் எனும் ஊரினை திருவாவடுதுறை மகேசுவர பூசைக்குக் கொடையாகத் தந்தார்.
மேலும் 1706ல் சேதுபதி காத்த தேவர் கால செப்பேட்டில், அரசு ஊழியரின் ஒரு நாள் சம்பளம், மாதாமாதம், திருப்பூந்துறைக்கோவிலுக்குப் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

ஆதீன நிலங்களில் உழவர் நிலை:

சேதுபதி மன்னர்கள் மாதிரியான குறுநில மன்னர்களின் ‘புண்ணியம் / சொர்க்கம் ‘ ஆசையாலேயே இத்தானங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதனால் வளம் பெற்ற ஆதீனங்கள் அந்நிலங்களை வைத்துக்கொண்டு என்ன செய்தனர் ?
குவிந்து கிடந்த நன்செய்களில் வேலை செய்த விவசாயிகளின் ரத்தத்தை உறிஞ்சிக்கொண்டிருந்தார்கள். சூரியன் எழுமுன் வயலில் இறங்கி, மறைந்தபிறகே வயலைவிட்டு வெளியேறும்படி மக்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருந்தது. ஆதினங்களின் காறுபார்கள், அம்மக்களுக்குக் கள்ள மரக்காலில் கூலி அளந்தார்கள். எதிர்ப்பேச்சுப் பேசின தலித்களுக்கு சவுக்கடியும், சாணிப்பாலும் இருந்தன.
பருவ மழை பொய்த்தாலும் மேல்வாரம், கீழ்வாரம் என்று கடுமையான வரிகளைப்போட்டு, குத்தகை பாக்கி அளக்காத கூலி விவசாயிகளைக் கொன்று, புதைத்த இடத்தில் தென்னங்கன்றை நட்டு வைத்த மடங்களின் ‘சிவத்தொண்டை ‘ இன்றும் தஞ்சை, புதுக்கோட்டை மக்கள் வாய்வழிக்கதைகளாகப் பேசிவருவது கண்கூடு.
திருவாவடுதுறை ஆதீன மடத்து நிலங்களில் விதைத்துப் பயிரிட்டு விளைவித்துக் கொடுப்பது சாதாரண மக்கள். அவர்களுக்கு ஏதோ ஒரு பகுதிதான் நெல் கிடைக்கும். மடத்து நிலங்களில்தான் சிறுவிவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் குடியிருப்பார்கள். பயிரிடும் நிலத்தை எந்த சமயத்தில் வேண்டுமானாலும் திரும்பப் பெற்றுக்கொள்வார்கள் ‘ என இம்மடத்தின் சுரண்டலை நல்லகண்ணு தனது பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கிறார்.
1930, 40 களில் பொது உடைமை இயக்கம் எழுந்து நின்று இம்மடாதிபதிகளின் உழைப்புச் சுரண்டலை எதிர்த்துப்போராட வேண்டி இருந்தது.

ஏராளமாய்ப் பெருகிய சொத்தை அனுபவிக்க எப்போதுமே பெரிய மடாதிபதியும், சின்ன மடாதிபதியும் ஒருவரை ஒருவர் அழிக்கத்திட்டமிட்டு (உதாரணமாக, சமீபத்தில் திருவாவடுதுறை சின்ன ஆதீனம், பெரிய ஆதீனத்தைக் கொல்ல முயன்ற விச ஊசி வழக்கு) சைவத்திற்குப் புறம்பான பல வேலைகளை செய்தார்கள்.
அந்தணருக்கு செய்த தானங்கள்:
நிலங்களைப் பெருவாரியாகத் தானம் தர மறவர் சீமை ஒன்றும் முகலாய சாம்ராஜ்யம் மாதிரிப் பரந்த நாடும் அன்று. பொன் விளையும் பூமியும் அல்லதான். பெரும்பாலும் வானம் பார்த்த மானாவரி நிலங்களையே மறவர் சீமை கொண்டிருந்தது.

அந்தணர்களுக்கு இச்சேதுபதிகள் அளித்த கொடைகள் பின்வருமாறு:
1)கெளண்டின்ய கோத்திரத்து ஆபஸ்தம்ப ஸூத்ரத்து செவிய்யம் ராமய்யன் புத்ரன் அஹோபாலய்யனுக்கு, திருமலை தளவாய் சேதுபதி காத்த தேவர் 25/1/1658ல் காளையார் கோவில் சீமையில் ஆனையேறி வயல், சூரநேம்பல், கீளைச்சூரநேம்பல், மாவூரணி, திருப்பராதியான் வூரணி, பெரிய நேந்தல் ஆகிய ஊர்களை புத்ர, பெளத்ர பாரம்பரியமாக சந்திராதித்திய சந்திரப்பிரவேசமாக சறுவ மான்னியமாக ஆண்டு அனுபவித்துக் கொள்ளச் செய்தார்.
2)1684ல் சுந்தரபாண்டியன் பட்டணத்துக்குள் உள்ள அக்ரகாரம், மடம், ஏகாம்பர நாதர் கோவில் பூசைக்காக எட்டு கிராமங்கள் – புல்லூரும், மருதூரும் உள்ளிட்ட- அக்ரகாரத்துக்காக வழங்கப்பட்டன.

3)ரகுநாத சேதுபதியால், 13-1-1682ல் முருகப்பன் மட தர்மத்துக்கும், அக்ரகாரத்துக்கும் கொடையாகத் திருப்பொற்கோட்டை, பகையனி, பிராந்தனி ஆகிய ஊர்கள் கொடையளிக்கப்பட்டன.
4) 1709ல் கிழவன் சேதுபதியின் 47 மனைவியரில் அரசியான காதலி நாச்சியார், குமரண்டூர் வீரமநல்லூரில் இருந்த வெங்கடேசுவரய்யன் மகன் சங்கர நாராயணய்யனுக்கு தேர்போகி நாட்டு களத்தூரின் 55 சதவீத நிலத்தை இறையிலியாகத் தந்தார்.
5) விசய ரகுநாத சேதுபதி, 1719ல் காக்குடி, கணபதியேந்தல் எனும் 2 ஊர்களை கற்றறிந்த அந்தணருக்குத் தானம் செய்தார்.
6) முத்து விசய ரகுநாத சேதுபதி 1722ல் காஸ்யப கோத்திரம் ஆபஸ்தம்ப சூத்திரத்தைச் சேர்ந்த யசுர்வேதம் தாதாசிவன் என்பார் மகன் ரகுநாதக்குருக்கள் எனும் அந்தணருக்கு ‘பால்குளம் ‘ எனும் ஊரைக் கொடையளித்தார்.
7)சிவகங்கை பிரதானி தாண்டவராயன் தனது தர்மத்தின்பொருட்டு, 1727ல் சங்கரய்யர் பேரன் வேங்கிட கிருட்டிண அய்யரிடத்தில், சேதுமூலத்தில் ஆதிசேது நவ பாஷாணத்தின் கிழக்கே தோணித்துறை சத்திரக்கிராமம் தேர்போகித்துறையில் நிலதானம் அளித்து, அக்கிரகாரம் கட்டிக்கொள்ள அனுமதி தந்தார்.
8)1731ல் குமாரமுத்து விசய ரகுநாத சேதுபதி, கற்றறிந்த அந்தணர்கள் 24 பேருக்கு ராமநாதபுரம், பாலசுப்பிரமணியர் சந்நிதியில் அக்கிரகாரம் அளித்துள்ளார்.
9) 1737ல் காசியப கோத்ரம், ஆசிவிலயன சூத்திரம் ரிக்வேதம் பயின்ற கலாநிதி கோனய்யர் மகன் ராமனய்யருக்கு கோவிந்த ராச சமுத்திரம் எனும் முதலூரை, ரகுநாத சேதுபதியின் மருமகன் தானம் செய்தார்.
10) முத்து விசய ரகுநாத சேதுபதி 1760ல் உத்திரகோச மங்கை மங்களேஸ்வர சுவாமி கோவில் ஸ்தானிகரான ராமலிங்க குருக்கள் மகன் மங்களேஸ்வரக் குருக்களுக்கு கருக்காத்தி கிராமம் கொடையளிக்கப்பட்டது.
செப்பேடுகளை வாசிக்க, வாசிக்க, தானமாய்த் தந்த ஊர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
முத்து விசய ரகுநாத சேதுபதி சூரிய கிரகணத்துக்காக, 1762ல் சின்ன நாட்டான், பெரிய நாட்டான் ஊர்களைக் கற்றறிந்த அந்தணருக்குத் தந்தார்.
பரத்வாஜ கோத்திரம் ஆவஸ்தம்ப சூத்திரம் யஜூர் வேதம் வல்ல அவதானம் செய்ய வல்ல சேஷ அவதானியின் மகன் சந்திரசேகர அவதானிக்கு 1763ல் அரியக்குடியை தானம் செய்தார்.
தண்ணீர்ப்பந்தல், அன்னதானமடம், அக்ரகாரம் ஆகியன வேதாளை கிராமத்தில் இருந்தன. இத்தர்மங்கள் தொடர, ரெங்கநாதபுரம் வெங்கிட நாராயண அய்யங்காருக்கு ‘அனிச்சகுடி ‘ 1768ல் முத்துராமலிங்க சேதுபதியால் வழங்கப்பட்டது. இச்சேதுபதிதாம் 1772ல் கப்பம் கட்ட முடியாத காரணத்தால் நவாப் வாலாஜா முகம்மது அலியால் திருச்சியில் சிறை வைக்கப்பட்டு இருந்தார்,கிட்டத்தட்ட 10 ஆண்டுகள். வரிகட்ட முடியாமைக்கு கம்பெனி எதிர்ப்பு ஒரு காரணமானாலும், தான தருமங்களால், அரசின் வருவாயும் குறுகிக்கொண்டே போனதும் முக்கியக் காரணமாய் இருந்தது.
1781ல் சிறை மீண்டு வந்து, அமாவாசை புண்ணிய நாளில், அனுமனேரிக்கிராமத்தை கற்றறிந்த அந்தணர் 10 பேருக்கு அளித்தார். 1782ல் அய்யாசாமிக்குருக்களுக்கு சொக்கானை, மத்திவயல் ஊர்களையும், திருப்புல்லாணியில் உள்ள புருசோத்தம பண்டிதர் சத்திரத்தில் பிராமணருக்கு அன்னமிட கழுநீர் மங்கலம் ஊரையும்,1782ல் யஜூர் வேதம் வல்ல ராமசிவன் மகன் சுப்பிரமணிய அய்யருக்கு குளப்பட்டிக்கிராமத்தின் பாதியையும், 1783ல் யஜூர் வேதம் கற்ற கிருஷ்ணய்யங்காருக்கு செப்பேடுகொண்டான் எனும் ஊரையும் தந்தார்.

 

This entry was posted in சேதுபதிகள் and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *