மலையாள முதல் இலக்கண நூல் லீலா திலகம் போற்றும் பாண்டிய மன்னன்

– கி. நாச்சிமுத்து

மலையாளத்தில் எழுந்த இலக்கண நூலாகிய லீலா திலகம் கி.பி. 1385 – 1400 – இல் எழுதப்பட்டிருக்கலாம் என்பது பேராசிரியர் இளங்குளம் அவர்கள் கணிப்பு. அவர் கருத்துப்படி இந்நூலை எழுதிய ஆசிரியர் யார் என்று தெரியவில்லை. இந்நூலில் வேணாட்டுச் சேர உதய மார்த்தாண்ட வர்மன் (1383 – 1444), திருப்பாப்பூர் மூத்த திருவடி இரவிவர்மன் (1444 – 1458), விக்ரமபாண்டியன் (1400 – 1422) என்ற மூன்று மன்னர்கள் பற்றிய புகழ்ப் பாடல்கள் லீலாதிலகம் அலங்காரம் பற்றிய சிற்பத்தில் மேற்கோளாகக் காணப்படுகின்றன. இவர்கள் மூவரும் வேணாட்டு அரச குடும்பத்துடன் தொடர்புபட்டு நின்றவர்கள், இவர்கள் நூலாசிரியரை ஆதரித்த புரவலர்கள் ஆகலாம். இவர்களில் விக்கிரம பாண்டியன் இளம்பருவத்தில் முசுலீம் படையினரால் தோவாளைப் பிரதேசத்தில் கலகங்கள் நேர்ந்தபோது சண்டையிட்டவன்; இவன் மகளை வேணாட்டு இரவிவர்மன் மணந்து கொண்டான் என்று இளங்குளம் குறிப்பிடுகிறார். இதற்கு அவர் லீலாதிலக மேற்கோள் செய்யுட்களையே (203, 205, 206) சான்று காட்டுகிறார். கி.பி. 1400 – 1422 ஆண்டுகளில் அரசனாயிருந்த விக்கிரம பாண்டியன் 1365-இல் தோவாளைப் பிரதேசத்திலிருந்து வேணாட்டு மன்னர்களுடன் சேர்ந்து கொண்டு முசுலீம் படையினரை விரட்டியதையே லீலாதிலகத்திலுள்ள 205, 206 செய்யுட்கள் கூறுவதாகவும் அவர் மேலும் கூறுகிறார். அந்தச் செய்யுட்களின் பொருள் வருமாறு:

இதன் பொருள்:-

”பின்னர் உடனே பகைப் படையினரைப் பாண்டிய இளைஞன் (விக்கிரம பாண்டியன்) கழுத்தை வெட்டினான். குதிரையின் மீதேறி விரைவாகத் துருதுரென்ற துரக்கர் எல்லாரும் ஓடினர்”.

”மிகவும் அகங்கரித்துத் திறமை உற்ற அணைந்து சிறந்த அரசர்களைக் காற்றில் பறந்த பரக்கும் பஞ்சைப் போன்ற ஆக்கினான்; கோபத்தால் மதிமறந்து கூற்றினும் கொடிய விக்ரம பாண்டியனாகிய சிங்கம்.”

அன்று வேணாட்டை ஆண்டவர்கள் இரவிவர்மனும் திருப்பாப்பூர் மூப்பன் சர்வாங்கநாத ஆதித்திய வர்மனுமாவர். கி.பி. 1383-க்குப் பிறகு சேர உதய மார்த்தாண்டவர்மர் அரசரானார். இவர் 1444 வரை ஆட்சியிலிருந்தார். இவர் காலத்தில் வேணாடு மேற்கு மலையின் இருபாலும் உள்ள பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. சேரன்மாதேவி இவர்கள் விருப்பிடமாக இருந்தது. திருநெல்வேலிப் பகுதியில் இவர்கள் ஆட்சி பரவியிருந்தது. இக்காலத்தில் ரெட்டியாபுரம் ஜமீன் வள்ளியூர்ப் பகுதியில் படை எடுத்து வந்தபோது திருப்பாப்பூர் மூப்பனாக இருந்த இரவிவர்மன் அவர்களை விரட்டினான். கருவேலம் குளத்தில் நடந்த இப்போர் வெற்றியை நினைவூட்டும் விதமாக இன்றும் பத்மனாபசுவாமி கோவிலில் பூசை ஒன்று நடந்து வருகிறது. இக்காலத்தில் வேணாட்டு மன்னர்களுக்கும் பாண்டிய மன்னர்களுக்கும் இடையே மணஉறவு வலுப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியையே லீலா திலகம் 203 – ஆம் செய்யுளில் கூறப்படும் வருணனைகள் குறிப்பிடுவதாக இளங்குளம் கருதுகிறார்.

”ஆற்றல் மிக்க தனஞ்சயன் துருபதனைப் (பாஞ்சால வேந்தனை) பிடித்துத் துரோணரிடம் ஒப்படைத்துத் துருபதனது மகளை மணம் புரிந்ததைப் போன்று யாதவர் தலைவனாகிய வேணாட்டை உடைய வீரரவிவர்மா விக்கிரம பாண்டியனைப் போரில் சிறைப்பிடித்துப் பாண்டிய அரசனிடம் கொடுத்துவிட்டு, விக்கிரமனின் மகளாகிய அழகியைத் திருமணம் செய்தான்.”

இப்பாடலின் அடிப்படையில் இளங்குளம் கீழ்க்கண்ட விளக்கம் அளிக்கிறார்:

அதாவது விக்கிரம பாண்டியன் அன்று அரசேற்கவில்லை; அன்று பாண்டிய நாட்டை ஆண்ட பாண்டிய அரசருடன் பிணங்கியிருந்திருக்கிறான். தனது குருசமானமான பாண்டியனுடைய ஏவல்படி இளைஞனாயிருந்த இரவிவர்மா விக்கிரம பாண்டியனை அடக்கி அவனுடன் கொண்டிருந்த பகைமையைத் தீர்த்த பின் விக்கிரம பாண்டியன் மகளையே திருமணம் செய்து கொண்டிருக்கிறான். இந்த விக்கிரம பாண்டியன் கல்வெட்டுக்கள் குற்றாலம் திருப்பத்தூர் முதலான இடங்களில் காணப்படுகின்றன.

இதிலிருந்து வேணாட்டிற்கும் பாண்டியருக்கும் இடையே இருந்த நெருங்கிய உறவுகளை உணர முடிகிறது. அது மண உறவாகவும் ஆசிரிய – மாணவ உறவாகவும் இருந்ததையும் அறிந்து கொள்கிறோம். முனைவர் வெ. வேதாச்சலம் எழுதியுள்ள பாண்டிய நாட்டோடு சேரநாட்டுத் தொடர்புகள் (கி. 600 – 1400) (1995) என்ற கட்டுரையில் அவ்விரு நாடுகளுக்கும் இடையே இருந்த பல வித உறவுகளையும் கல்வெட்டுக்களின் துணையுடன் சுட்டிக் காட்டியுள்ளார். இக்காலக் கட்டத்தில் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் வேணாட்டு அரசனாக விளங்கிய உதய மார்த்தாண்டவர்மன் (கி.பி. 1175-1195) பாண்டியரோடு மண உறவு கொண்டவனாக இருந்திருக்கிறான். இவனது மகளான திருபுவன தேவியைப் பாண்டியன் ஹவல்லபனுக்கு (கி.பி. 1158 – 1185) மணம் முடித்துக் கொடுத்துள்ளான். (A. Sreedhara Menon, A Survey of keral History, p.138). இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் (கி.பி. 1237 – 1266) வேணாட்டு அரசன் கோதை இரவிவர்மனை மச்சுனன் என்று கூறிக் கொள்வதால் பாண்டியர்க்கும் வேணாட்டு அரசர்க்கும் மணவுறவு இருந்ததை அறிகிறோம்.

பாண்டிய அரசனின் மச்சுனனாகச் சேரன்மாதேவிப் பகுதிக்கு வந்த வேணாட்டு அரசன் இரவி வர்மன் பெயரில் அங்குள்ள அப்பன் கோவிலில் (துவராபதி ஆழ்வார் கோவில்) சிறப்புச் சந்தி ஒன்று சடையவர்மன் குலசேகரனால் வழங்கப்பட்டுள்ளது. (ARE. 664, 665, 671 / 191617). பதினான்காம் நூற்றாண்டில் வேணாட்டு வீரகேரளன் இரவிவர்மன் குலசேகரன் கி.பி. 1312-ல் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றுத் தொண்டை நாட்டுப் பூந்தண்மல்லி வரை சென்றான் என்று அறிகிறோம். இவன் ஆட்சி பாண்டிய நாட்டில் பரவியிருந்தது. இவன் மருமகன் வீர உதய மார்த்தாண்ட வர்மன் (கி.பி. 1314 – 1344) வீரபாண்டியன் என்ற பெயரினையும் பெற்றிருந்தான். திருச்செந்தூருக்குப் பக்கத்திலுள்ள வீரபாண்டிய பட்டணத்திலுள்ள மக்தூம் பள்ளிவாசல் கல்வெட்டு (கி.பி. 1387) (ARE 311 / 196364) சேரமன்னன் உதயமார்த்தாண்டவர்மன் (1383 – 1444) பெயரால் இப்பள்ளி உதயமார்த்தாண்டப் பெரும்பள்ளி என அழைக்கப்பட்டதைத் தெரிவிக்கிறது. இனி லீலாதிலகம் கூறும் விக்கிரம பாண்டியன் யார் என்பது ஆராய்ச்சிக்குரியது.

மாறவர்மன் விக்கிரம பாண்டியன் என்ற பெயரில் ஆறு மன்னர்கள் இருந்தார்கள் என்று திரு. சேதுராமன் தனது பாண்டியர் வரலாறு (ப.153) இல் குறிப்பிடுகிறார். உண்மையில் ஏழுபேர் அவ்வாறான பெயருடன் காணப்படுகின்றனர். இன்னும் சடையவர்மன் விக்ரமன் என்ற பெயரிலும் சில மன்னர்கள் காணப்படுகிறார்கள். இவர்களில் இவ்விக்கிரம பாண்டியன் யார்? மாறவர்மன் விக்கிரமன் (1181 – 1190) தவிர முதலாம் மாறவர்மன் விக்கிரமன் (1218 – 1232), இரண்டாம் மாறவர்மன் விக்கிரமன் (1250 – 1264), மூன்றாம் மாறவர்மன் விக்கிரமன் (1298 – 1302), ஐந்தாம் மாறவர்மன் விக்கிரமன் (1323 – 1330), ஆறாம் மாறவர்மன் விக்கிரமன் (1241 – 1254) இரண்டாம் சடையவர்மன் விக்கிரமன் (1344 – 1352) என்ற பெயரில் இருவரும் காணப்படுகின்றனர்.

துரோணபதம் என்ற செய்யுளில் குறிப்பிடப்படும் இரவிவர்மா என்பவன் வேணாட்டை ஆண்டு காஞ்சிபுரம் வரை பிடித்தாண்ட சங்கிராமதீர்த்தன் என்ற பெயருடைய இரவிவர்ம குலசேகரனை (1299 – 1314)க் குறிக்கலாம் என்றும், எனவே அக்காலத்தில் வாழ்ந்த விக்கிரம பாண்டியனையே லீலாதிலகம் குறிப்பிடவேண்டும் என்றும் சில மலையாள இலக்கிய வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள். ஆனால் அக்காலத்தில் விக்கிரமபாண்டியன் என்ற பெயரில் யாரும் வாழ்ந்ததாகத் தெரியவில்லை. எனவே 1400 – 1442 வரை ஆண்ட விக்கிரம பாண்டியனையே இது குறிக்க வேண்டும். மேலும் விக்கிரம பாண்டியன் துளுக்கரோடு தனது இளம் பருவத்தில் போரிட்டதாகக் கூறப்படுவதால் 1311 -க்குப் பின் நிகழ்ந்த மாலிக்காபூர் படையெடுப்புக் காலத்தில் 1296 காலமான விக்கிரமபாண்டியன் போரிட்டிருக்க வாய்ப்பில்லை என்கிறார் இளங்குளம். இவர் 1296 காலமானதாகக் குறிப்பிடும் விக்கிரம பாண்டியன் யார் என்பது தெரியவில்லை.

ஆனால் சேதுராமன் அவர்கள் ஆய்வின்படி அக்காலக்கட்டங்களில் 1. நான்காம் மாறவர்மன் விக்கிரமபாண்டியன் (1298 – 1302). 2. ஐந்தாம் மாறவர்மன் விக்கிரமன் (1323 – 1330), 3. ஆறாம் மாறவர்மன் விக்கிரமன் (1337 – 1343), 4. இரண்டாம் சடையவர்மன் விக்ரமன் (1344 – 1352) என்பவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பது இப்போது தெரிகிறது. அவர்களில் மாலிக்காபூர் படையெடுப்பு நிகழ்ந்த 1311-க்குப் பிறகு இருந்தவர்கள் மேலே 2,3,4 என்று குறிப்பிடப்படும் மூவருமாவர். இளங்குளம் கருத்துப்படி அம்மூவரில் ஒருவராக லீலாதிலகம் குறிப்பிடும் விக்கிரம பாண்டியன் இருக்க இயலுமா என்பதை ஆராயவேண்டும்.

”நான்காம் மாறவர்மன் விக்ரமபாண்டியன் (1298 – 1302) மாறவர்மன் குலசேகரபாண்டியன் (1268 – 1318) தம்பியாக இருக்கலாம். குலசேகரன் தம் தம்பிக்கு முடிசூட்டும் முன் 1297-இல் தனது மகன் வீரபாண்டியனுக்கு முடிசூட்டி உள்ளான். 1301-இல் தனது மகன் சுந்தர பாண்டியனுக்கும் அடுத்த ஆண்டில் (1304) மகள் வயிற்றுப் பேரன் கோதண்டராமனான சுந்தர பாண்டியனுக்கும் முடிசூட்டியிருக்கிறான். இதனால் விக்ரமன் முரண்பட்டிருக்கலாம். இதன் எதிரொலியைத் திருக்கடையூர், இளையான்குடிக் கல்வெட்டுக்களில் காண்கிறோம். மாறவர்மன் விக்ரம பாண்டியனால் ஏதும் செய்ய முடியாது போய் இருக்கலாம். சடையவர்மன் இராஜராஜன் சுந்தர பாண்டியன் ஒருவேளை விக்ரமனின் மகனாக இருந்திருந்தால் 1310-இல் கலகம் விளைவித்திருக்கலாம்….” இவ்வாறு திரு.சேதுராமன் (பாண்டியர் வரலாறு பக். 186-7) எழுதிச் செல்வதை நோக்க இவ்விக்ரம பாண்டியன் தானோ லீலாதிலகம் கூறுபவன் என எண்ணத்தோன்றுகிறது. மேலும் இக்காலக் கட்டத்தில் வேணாட்டை ஆண்ட வீரகேரளன் இரவிவர்மன் குலசேகரன் (1299 – 1314) என்கிற சங்கிராம தீர்த்தன் காஞ்சிவரை சென்று ஆண்டிருக்கிறான். பாண்டியர்களின் மரபுப்பெயரான மாறவர்மன் என்பதை இவன் தரித்திருக்கிறான். முசுலீம் படையினருடன் போரிட்டிருக்கிறான். பாண்டியன் மகளை மணந்திருக்கிறான். இப்பாண்டியன் மாறவர்மன் குலசேகர பாண்டியன் என்று வரலாற்றாசிரியர்கள் எழுதுகிறார்கள் (ஸ்ரீ தரமேனோன் பக்.139). இதற்கு என் ஆதாரம் என்று தெரியவில்லை. ஒருவேளை இவன் மணந்தது மாறவர்மன் விக்ரமனின் மகளாக இருந்தால் லீலாதிலகம் குறிப்பிடும் விக்ரம பாண்டியன் 1298 – 1302 ஆண்டுகளில் ஆண்டவனாக இருக்கக் கூடுமா? முசுலீம் படையெடுப்பு கி.பி 1311-க்குப் பிறகு ஏற்பட்டதால் முசுலீம் படையினருடன் போரிட்ட விக்ரமன் இவனாக இருக்க முடியாது என்பது இளங்குளத்தின் வாதம். ஒருவேளை விக்ரமன் இன்னும் பிற்பட்டும் வாழ்ந்திருக்கலாம் என்று கருதினால் நாம் இளங்குளத்தில் முடிவுகளை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிவரும் அவ்வாறாயின் லீலாதிலகத்தின் காலம் ஒரு நூற்றாண்டு அளவு முன்னதாக 13-ஆம் நூற்றாண்டு என்பதாக அமையும். இது ஆராயத்தக்கது.

லீலாதிலகத்தில் காணப்படும் விக்ரமபாண்டியன் பற்றிய பாடல்கள் வேணாட்டிற்கும் பாண்டிய நாட்டிற்கும் இடையே நிலவியிருந்த மணஉறவு அரசியல் உறவு முதலியவற்றின் நெருக்கத்தை உணர்த்துகின்றன. பாண்டிய மன்னர்கள் மணஉறவால் வேணாட்டோடு கொண்டிருந்த தொடர்பால் கேரளத்தமிழ் மலையாளமாக உருவாகிக் கொண்டிருந்த காலத்தில் அன்று எழுந்த முதல் மலையாள இலக்கண நூலை ஆதரித்த புரவலர்களாகவும் காணப்படுகிறார்கள். அதற்கு அவர்கள் உடலில் வேணாட்டு இரத்தம் ஓடியது மட்டும் காரணமாக இருந்திராது. பாண்டியருடைய ஆட்சிப்பகுதியில் மலையாள மொழியாகிய கேரளத்தமிழும் பேசப்பட்டிருந்தது ஒரு காரணமாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. அதனாலேயே லீலாதிலக ஆசிரியரை இவர்கள் ஆதரித்திருக்கலாம்.

மேலும் பாண்டியர்கள் வடமொழியிலும் தமிழிலும் நிகரான புலமை பெற்றிருந்தார்கள் என்பதை வேள்விக்குடி செப்பேடும் திருவிளையாடற் புராணம் முதலிய நூல்களும் பேசுகின்றன. பிற்காலத் தென்பாண்டி நாட்டு அதிவீரராம பாண்டியன் போன்றோர் வடமொழி நளன் சரிதம் போன்றவற்றையும் பல புராணங்களையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளனர் என்பதையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

பாண்டியன் பற்றிய மூன்று பாடல்களில் இரண்டு பாடல்களும் அவன் வீரத்தைப் புகழ்வதாக இருக்க, வேணாட்டு மன்னர்களைப் பற்றிய பாடல்கள் பெரும்பாலும் அவர்கள் கொடைத்திறனைப் பாராட்டுவதாக இருக்கின்றன.

கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் சேரமன்னர் ஐயனாரிதனார் இயற்றிய புறப்பொருள் வெண்பாமாலையில் மூவேந்தரைப் பற்றிய பொதுக்குறிப்பு மட்டுமே உள்ளது. ஆனால் ஓரிடத்தில் (பொதுவியல் சூத்திரம் – 10 துறைப்பாட்டு 240 – 242) பாண்டியன் குலத்தைச் சேர்ந்த ஒரு மன்னனைப் பற்றி மட்டுமே அவன் பெயர் குறிப்பிடாது ஒரு பாடல் அமைத்துள்ளார் (பாடாண் படலம் பெருந்திணை துறைப்பாட்டு – 234). ஐயனாரிதனாரும் ஒரு வேணாட்டு மன்னராக இருக்க வாய்ப்புண்டு, அவர்கள் பாண்டிய குலத்துடன் மணஉறவும் அரசியல் உறவும் கொண்டவர்களாதலால் பாண்டியரை அவர் சிறப்பித்திருக்க வேண்டும். இதை நினைத்துப் பார்க்கும்போது லீலாதிலக ஆசிரியரும் ஒரு வேணாட்டு அரசராக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

இப்பாடல்களைப் புறப்பொருட் பாகுபாட்டில் அமைத்து நோக்கினால் முதற்பாடல் உழிஞைத் திணையில் மகட்பால் இகல் (123) என்பதில் அமைப்பது அவ்வளவு பொருத்தமாகத் தோன்றவில்லை. பாடாண் திணையில் மணமங்கலம் (இகலடுதேள் எறிவேல் மன்னன் மகளிரொடு மணந்த மங்கலங் கூறின்று 210) என்ற துறையில் அமைப்பது பொருத்தமாகத் தோன்றுகிறது. இரண்டாம் மூன்றாம் பாடல்கள் தும்பையில் நூழில் (141 கழல் வேந்தர் படைவிலங்கி அழல்வேல் திரித்து ஆட்டமர்ந்தன்று) துறையில் அமைத்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது.

நன்றி: ஆய்வுக்கோவை

This entry was posted in பாண்டியன் and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *