பொக்கிஷம் (பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் வாழ்க்கை வரலாறு)

ஆசிரியர்: க.பூபதிராஜா
வெளியீடு: பசும்பொன் தேவர் ஆன்மிக மனிதநேய நலச் சங்கம்
பகுதி: வாழ்க்கை வரலாறு
ISBN எண்:
மொத்த பார்வையாளர்கள்: 235 Views
விலை:  ரூ.600

பசும்பொன் தேவர் ஆன்மிக மனிதநேய நலச் சங்கம், 14, ஆண்டாள் நகர், 2வது தெரு, கோடம்பாக்கம், சென்னை-24. (பக்கம்: 720+64+16.)

தலைசிறந்த தேச பக்தரும், மிக உயர்ந்த ஆன்மிகவாதியுமான பசும்பொன் தேவரின் அரசியல், சமூக, மொழி, ஆன்மிகம் சார்ந்த தொண்டைப் பற்றி விரிவாக, விளக்கமாக, ஆய்வு நோக்கில், அலசி, ஆராய்ந்து எழுதப்பட்ட ஒரு சிறந்த வாழ்க்கை வரலாற்று நூல்.

தென் மாவட்டங்களில் முக்குலத்து மக்களால் போற்றி வணங்கப்படும் பசும்பொன் தேவர் மனிதாபிமானம் மிகுந்த நல்ல மனிதர். தமிழ் மொழியின் ஏற்றம், தமிழகத்தின் ஆன்மிகப் பெருமை, தரமான அரசியல், பலனை எதிர்பார்க்காத தொண்டு எனப் பயனுள்ள பலதரப்பட்ட துறைகளில் வாழ்நாளெல்லாம், சுற்றுப்பத்து கிராமங்களில் வாழ்ந்த ஏழை விவசாயக்கூலிகள்.

இவர்களில் பெரும்பாலோர் பசும்பொன் தேவரின் சொத்துக்களுக்குப் பதிவு செய்யப்படாத உரிமையாளர்கள்.

பிரம்மச்சார்யத்தைக் கடைப்பிடித்த ஒழுக்க சீலர். சுவாமி விவேகானந்தரின் ஆன்மிகத்தைப் பெரிதும் போற்றியவர். மிகச் சிறிய வயதிலேயே மேடை ஏறிச் சொற்பொழிவு நிகழ்த்தும் ஆற்றல் கைவரப் பெற்றவர். ஆங்கிலத்திலும் தமிழிலும் சரளமாகப் பேசக்கூடிய திறமைசாலி. பார்லிமென்டில் அைனைத்து மாநில உறுப்பினர்களின் கவனத்தையும், ஈர்க்கும் வகையில் விவாதங்களில் கலந்து கொண்டு சிறப்பித்தவர்.

அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழகத் தலைவராக இருந்து கட்சியை வளர்த்த பெருமைக்குரியவர். நூலாசிரியர் க.பூபதி ராஜா, பசும்பொன் தேவரின் பேரன் உறவு நிலையுடன் திகழ்பவர். தேவர் திருமகனாரைப் பற்றி நூல் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை செயல்படுத்த பெரு முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். தேவர் தொடர்பான அநேகமாக எல்லா தகவல்களையும், அவருடைய ஜாதகம் தொடங்கி, அவருடைய அன்றாடப் பழக்க வழக்கங்கள் ஈறாகச் சேகரித்து சிரத்தையுடன் கோர்வைப்படுத்தித் தயாரித்திருக்கிறார்.

மதுரைத் தமிழ்ச் சங்க பொன் விழாவில், அறிஞர் அண்ணாதுரை ஆன்மிக நம்பிக்கைக்கு விரோதமாக ஒரு கருத்தை தெரிவிக்க, பசும்பொன் தேவர் மறுநாள் அதே மேடையில் அதற்கு மறுப்பும் தெரிவித்தது அன்றைய நாட்களில் பேசப்பட்ட சுவையான சமாச்சாரம்.

அதேபோல, மூதறிஞர் ராஜாஜி எழுதிய `வியாசர் விருந்து’ நூல் வெளியீட்டு விழாவில் தானே முன்வந்து கலந்து கொண்டு ராஜாஜியைப் பற்றி புகழ்ந்து பேசிய பேச்சு வரலாற்றுப் பெட்டகத்தில் பாதுகாக்கப்பட வேண்டிய கருத்துக் குவியல்.

காமராஜருடன் நட்புடன் இருந்து அவர் கரங்களை வலுப்படுத்திய நாட்களும் தேவரின் வாழ்க்கையில் உள்ளடக்கம். இந்த ஆய்வு நூலை மிகச் சிறப்பாக எழுதித் தயாரித்துள்ள க.பூபதிராஜா பாராட்டுக்குரியவர். உற்சாக மிகுதியில் நூலாசிரியர் அரிய பல தகவல்களை கூறியிருந்தபோதிலும் சிலவற்றைத் தவிர்த்திருக்கலாம். அவை மிகப் பெரும் அறிஞரான தேவரை, அவரது பெருமையை சற்று சுருக்கி விடுகிறது.

This entry was posted in முத்துராமலிங்க தேவர் and tagged . Bookmark the permalink.

4 Responses to பொக்கிஷம் (பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் வாழ்க்கை வரலாறு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *