பூலித்தேவன் பிறந்த நாள் விழாவில் வைகோ உரை: (18.10.2008)



வானமேசாயினும் மானமே பேணிடும்
மறக்குல மன்னன் நான்
அன்னியனுக்கு அடிபணிவனோ?
உயிரே போயினும் உரிமை காப்பேன்
கூற்றமே சீறினும்
இக்கொற்றவன் கலங்கேன்
நெஞ்சுரம் கொண்டோர் உறையும்
நெற்கட்டான் செவல் நிமிர்ந்தே நிற்கும்

என முழங்கிய வீரவேந்தர் பூலித்தேவருக்கு இன்று விழா.

மாமன்னர் பூலித்தேவருக்கு புகழ் அஞ்சலி தொடுக்க ஏற்ற இடம் வாசுதேவநல்லூர் என்று சிவகங்கையில் விழா நடந்தவேளையில் நான் நம் பெரு மதிப்புக்குரிய சேதுராமன் அவர்களிடத்தில் தெரிவித்தேன். சிவகங்கையில் மருதுபாண்டியர்களுக்கு மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் தலைவர் மருத்துவர் சேதுராமன் அவர்கள் பெருவிழா நடத்தினார்கள். அன்றும் கருமேகங்கள் குவிந்துகிடந்தன. பெருமழையும் பெய்யத் தொடங்கியது.

அந்தச் சிவகங்கை சீமையில் திரண்டு இருந்த மக்கள் மத்தியில் மருது பாண்டியர்களின் தியாகத்தை அவர்களின் வீரஞ்செறிந்த வரலாற்றை ஒரு கடமை உணர்வோடு இந்த மண்ணில் வாழும் தலைமுறைக்கும் வளரும் தலைமுறைக்கும் வரப்போகும் தலைமுறைக்கும் நமது முன்னோர்கள் செய்த தியாகம் தெரியவேண்டும் என்பதற்காக அந்த நிகழ்ச்சியில் நான் உரையாற்றினேன். அதைப் போலவே சரித்திரப் புகழ்பெற்ற வாசுதேவநல்லூரில் மாநாட்டைப்போல இந்த நிகழ்ச்சியை அற்புதமாக ஏற்பாடு செய்து அதில் உரையாற்றுகின்ற உன்னதமான சந்தர்ப்பத்தையும் தந்திருக்கின்ற அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்திற்கும் அதனுடைய மதிப்புமிக்க தலைவர் மருத்துவர் சேதுராமன் அவர்களுக்கும் மனம்நிறைந்த நன்றியைத் தெரிவிப்பது எனது கடமையாகும்.

சரித்திரத்தில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்க நிகழ்ச்சிகளை உள்ளடக்கியதுதான் அக்டோபர் திங்கள் ஆகும். இந்த மாதத்தில்தான் 7 ஆம் தேதியன்று தூக்குக்கயிற்றைத் தாவி அணைத்து வரவேற்று மரணத்தை எதிர்கொண்ட பகத்சிங் பிறந்தான். அவனது நூற்றாண்டு நிறைவு விழாவை தலைநகர் சென்னையில் நான் முன்னின்று நடத்தினேன்.

அதே உணர்வோடுதான் இன்றைக்கு வாசுதேவநல்லூரில் இந்த நாட்டின் விடுதலை வரலாற்றில் முதன் முதலாக வெள்ளையரின் படைகளைச் சிதறடித்து வாளுயர்த்திய பெருவேந்தன் பூலித்தேவர் என்ற உணர்வோடு, அவர் உலவிய இடத்தில் – அவர் படை நடத்திய இடத்தில் – அவருடைய கட்டளைகள் பிறப்பிக்கப்பட்ட பகுதியில் – அவர் எழுப்பிய கோட்டையில் பாய்ந்த பீரங்கிக் குண்டுகளுக்கு அஞ்சாது வீரமறவர்கள் போராடிய பகுதியில் – இன்றைக்கு உரையாற்றக்கூடிய ஒருவாய்ப்பைப்பெற்று நிற்கிறேன்.

ஒரு நெடியவரலாறு காத்தப்ப பூலித்தேவனுக்கு இருக்கிறது. எனக்குத்தெரிய சரித்திரத்தில் 630 ஆண்டுகளுக்கு முன்னால் வரலாற்றுக் குறிப்பு சுவடுகளின் அடிப்படையில் 1378 ஆம் ஆண்டு வரகு™ராம சிந்தாமணி பூலித்தேவர் தொடங்கி சரியாக இன்றைக்கு 630 ஆண்டுகள் ஆகின்றன. அவர்கள் வழிவழி ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒரு பெயர் சூட்டுகிறபோது பாட்டனின் பெயரை பேரனுக்குச் சூட்டுகிற வழக்கம் நம் நாட்டில் இருக்கின்ற காரணத்தால் காத்தப்ப பூலித்தேவன் என்ற பெயர் தொடர்ந்து மூன்றுமுறை பேரனுக்குப் பேரனுக்குப் பேரனுக்கு என்றுவந்து நான்காவது பெயராக 1715 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி பிறந்த மாமன்னன் பூலித்தேவர் என்று வரலாறு மகுடம் சூட்டுகின்ற பெயர் நாம் யாருக்காக விழா நடத்துகிறோமோ அவருக்கு சூட்டப்பட்டது. காத்தப்ப பூலித்தேவர் என்ற பெயர்.

இன்றைக்கு 300 ஆவது ஆண்டு நெருங்கப்போகிறது. 1715; 2015 வந்தால் 300 ஆண்டுகள். பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழா தொடங்கி இருக்கின்ற நேரத்தில் – தேவர் திருமகனாரின் நூற்றாண்டு நிறைவு பெறப்போகின்ற நேரத்தில் – 300 ஆவது ஆண்டு விழாவையும் இயற்கை அன்னை உயிரோடு இருக்க அனுமதிக்குமானால் அது வரப்போகின்ற 2015 ஆம் ஆண்டில் 300 ஆவதுஆண்டு விழாவை இந்த மண்டலம் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தைப் பதிவு செய்கிறேன்.

ஆனால், அந்த மன்னருக்கு விழா எடுக்க வேண்டும் என்று விரும்புவதற்குக் காரணம் நான் உலகத்தின் யுத்தகளங்களை ஆர்வத்தோடு படிப்பவன். உலகத்தின் மகாபெரிய வீரர்களின் போர்க்களக் காட்சிகளை நான் விருப்பத்தோடு படிப்பவன். சின்னவயதில் இருந்தே என் உணர்வு அதுதான். நான் சிறுவனாக பள்ளியில் படிக்கிறபோதும் நான் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் எழுதிய வியாசர் விருந்தைப் படிப்பதற்கு முன்பு பெரிய எழுத்து மகாபாரதத்தை மழைவரவேண்டும் என்பதற்காக ஊர் மடத்திலே விராட பருவம் வாசிக்கின்ற அந்தக் காலத்தில் நான் சின்னஞ்சிறுவனாக மகாபாரதத்தைப் படிக்கிற போது என் மனம்கவர்ந்த காட்சி அந்த 13 ஆம் போர்சருக்கம். அபிமன்யு வதைக்காட்சிதான். அதைப்போல, கம்பனின் இராமாயணத்தில் என் உள்ளம் கவர்ந்த காட்சி நிகும்பலை வேள்வி சிதைக்கப்பட்டபோது களத்தில் போராடிய இந்திரஜித்தின் வீரக்காட்சிதான். இது என் உணர்வு.

அதே உணர்வோடு, உலகத்தில் எங்கெல்லாம் வீரபோர்க்களங்கள் நடைபெற்று இருக்கிறது என்று சரித்திர ஏடுகளைத் தேடிப்படிக்கின்ற வழக்கம் உண்டு. அப்படிப் படித்ததில் மனதைக் கவர்ந்த இடம் தான் தெர்மாப்பிளே போர்க்களம். 300 வீரர்கள் இலட்சம் வீரர்களைத் திகைக்கவைத்த அந்த வீரப்போர்க் களம்.

அந்தவகையில் இந்த மண் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த தமிழ்க்குடியின் வரிசையில்,

1715 ஆம் ஆண்டு பிறந்து 11 வயதிலேயே, அரியணைக்கு வரநேர்ந்த சின்னஞ்சிறு பிள்ளையாக வர நேர்ந்த மாவீரன்தான் காத்தப்ப பூலித்தேவன். அவர் சித்திரபுத்திர தேவருக்கும் சிவஞான நாச்சியாருக் கும் பிள்ளையாக பிறந்து நடத்தியிருக்கின்ற போர்க் களங்களைப் பார்த்தேன். அவருடைய வீரத்தை, படைகளை வகுக்கக்கூடிய திறமையை எதிரிகளை சின்னாபின்னமாக்கக்கூடிய ஆற்றலை அவருடைய போர்முறையை, படித்தபோது நான் திகைத்துப்போனேன். அப்படிப்பட்ட பூலித்தேவர் வரலாற்றை இந்த மண்ணில் பதிவுசெய்ய வேண்டும் என்பதற்காக நான் இங்கே வந்திருக்கிறேன். இது ஏற்ற இடம்.

பக்கத்தில் நெற்கட்டான்செவல். இந்தப் பகுதி வளம் நிறைந்த பகுதி. 1767 இல் கடைசியாக வெள்ளையர்களின் கொடுமையால் உடன் இருந்தவர்கள் துரோகத்தால் மன்னர் பூலியின் படை வீழ்ந்ததற்குப்பிறகு இந்தப் பகுதியை அழிக்க வேண்டும் என்று நினைக்காத டொனல்டு காம்பல் ஆஹா, வளம் குவிந்துகிடக்கிறது வாசுதேவநல்லூர் பகுதி மரகதப் பச்சையைப்போல எங்கு கண்டாலும் கழனிகள் செழித்துக் கிடக்கின்றன. கரும்புத் தோட்டங்களும், செந்நெல் வயல்களும், வாழைத்தோப்பு களும் குவிந்து இருக்கின்ற வளம் நிறைந்த இந்தப்பகுதியை அழிக்க எனக்கு மனமில்லை என்று சொன்னானே. அந்தப் பகுதிக்கு ஏன் நெற்கட்டான்செவல் என்று பெயர் வந்தது என நான் பார்த்தேன்.

நெல்விளைகிற காரணத்தால், நெல்லை கட்டுகட்டாக கட்டிச்செல்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால், எனக்குக்கிடைத்த குறிப்பு இது. சிவந்த நிலம். வீரமறவர்கள் சிந்திய இரத்தத்தாலும் சிவந்த நிலம். இயற்கையிலேயே செம்மண் பூமி. அதில் நெல்கட்டான் என்கின்ற ஒரு செடி அதிகமாக இருந்தது என்றும் அந்த நெல்கட்டான் செடியை நினைவூட்டி நெல்கட்டும்செவல் என்று பெயர் வந்தது என்று சொல்லப் படித்து இருக்கிறேன்.

இந்த வாசுதேவநல்லூர் கோட்டைக்கு ஈடான கோட்டை எதுவும் இல்லை என்றும் பரங்கியர் சொன்னார்கள். இது தென்னாட்டில் இருக்கின்ற மற்றக் கோட்டைகளைவிட, அபூர்வமான கோட்டை. பொறியியல் நுட்பத்தோடு கட்டப்பட்டு இருக்கின்ற கோட்டை. அந்தக் கோட்டையின் நீளம் 650 கெஜம். அகலம் 300 கெஜம். கோட்டையின் அடிமட்டத்தின் அகலம் 15 அடி. உச்சியின் அகலம் 5 அடி. கோட்டையின் மூலைகளில் கொத்தளங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. அந்தக் கொத்தளங்களுக் குள்ளே நிலவறைகளைப்போல – வீரர்கள் உள்ளே இருந்து சண்டை செய்வதற்கு ஏற்ற அமைப்புகள் இருந்தன. வெளியே இருந்து பார்த்தால் வீரர்கள் இருப்பது தெரியாது. அதில் அமைக்கப்பட்டு இருந்த துவாரங்கள் வழியாக அவர்கள் ஆயுதங்களை ஏவக்கூடிய அமைப்பு இருந்தது. அப்படிப்பட்ட கோட்டை. பதநீரும், கருப்பட்டியும், கம்பப் பசையும் மற்றும் பல்வேறு பொருட்களையும் கொண்டு அமைத்த மிகச்சிறந்த கோட்டை. பீரங்கிக் குண்டுகளுக்கு ஈடுகொடுத்த கோட்டை.

1755 ஆம் ஆண்டு வெள்ளைக்காரன் கர்னல் ஹீரான் ஆர்க்காடு நவாப்பின் துணையோடு அப்பொழுது மாபூஸ் கானையும் துணைக்கு அழைத்துக்கொண்டு களக்காட்டுக் கோட்டையைக் கைப்பற்றினார்கள். களக்காட்டுக் கோட்டை வீழ்ந்தது. அப்போது வாசுதேவநல்லூரில் இருந்த பூலித்தேவருக்கு களக்காடு ஏன் வீழ்ந்தது என்று நினைத்தார். மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்று நினைத்தார். அப்பொழுதுதான் அவர் முதன்முதலாக ஒரு கூட்டணியை உருவாக்குகிறார். கூட்டமைப்பை உருவாக்குகிறார்.

எதிரியை வெள்ளைக்காரனை எதிர்க்க நாம் அணிசேர வேண்டும் என்று நினைத்து எதிரியாக அதற்குமுன் இருந்த திருவிதாங்கூர் மன்னருக்கு தகவல் கொடுத்து திருவிதாங்கூர் மன்னரையும் உடன் சேர்த்துக்கொண்டார். அவர் அமைத்த அந்தக் கூட்டமைப்பில் சேத்தூர் சேர்ந்தது – கொல்ல கொண்டான் சேர்ந்தது – தலைவன்கோட்டை சேர்ந்தது – நடுவக்குறிச்சி சேர்ந்தது – சொக்கம்பட்டி என்று அழைக்கப்படுகின்ற வடகரை சேர்ந்தது – சுரண்டை சேர்ந்தது – ஊர்க்காடு சேர்ந்தது – ஊத்துமலை சேர்ந்தது. இத்தனையும் சேர்ந்து ஒரு கூட்டமைப்பை மன்னர் பூலித்தேவர் ஏற்படுத்தினார். இந்தக் கூட்டமைப்பை வைத்துக்கொண்டு வெள்ளையன் படைகளை சிதறடித்தார்.

அவருடைய காந்தசக்தி மகத்தானது. ஆர்க்காட்டு நவாப்பின் படையில்வந்த மூன்று இஸ்லாமிய தளபதிகள் முடேமியா எனும் முகம்மது மியானச், மியானோ எனும் முகம்மது பார்க்கி, நபிகான் கட்டாக் ஆகிய மூன்று தளகர்த்தர்கள் மன்னர் பூலித்தேவர் முகத்தைக்கண்டு அவரால் கவரப்பட்டு அவரது படையில் சேர்ந்தார்கள். சேர்ந்து வீரப்போர் புரிந்தார்கள். 12 மாதம்கழித்து 1756 மார்ச் 21 இல் திருநெல்வேலியில் மீண்டும் போர் நடத்தி வெள்ளையரை தோற்கடித்தார், மன்னர் பூலித்தேவன். அந்தப் போரில் இÞலாமியனாகப் பிறந்து ஆர்க்காடு நவாப்புக்குப் பக்கத்தில் இருந்து மன்னர் பூலித்தேவர் படைக்கு வந்துசேர்ந்த முடேமியா என்கின்ற இÞலாமியத் தளபதியின் மார்பில் குண்டு பாய்ந்து இரத்த வெள்ளத்தில் அவன் புரண்டு கொண்டிருந்த வேளையில் மன்னர் பூலித்தேவருக்குத் தகவல் கிடைத்து ஓடிச்சென்று முடேமியாவை எடுத்து மடியிலே கிடத்தி இந்த மண்ணில் அந்நியனை எதிர்த்து வீரப்போர் புரிந்த தங்கமே! உன் ஆவி பிரிகிற வேளையில் உன் மேனியின் இரத்தம் என் மடியில் பாய்கிறது என்று உச்சி மோந்து அவனை அரவணைத்துக் கொண்டார். மன்னா, நான் கடமையாற்றி விட்டுத்தான் மடிகிறேன் என்று முடேமியா இறந்துபோனான். இஸ்லாமியக் குலத்தில் பிறந்து தன்னோடு வந்து படையிலே சேர்ந்து போரிலே உயிர் விட்டவனுக்கு நடுகல் எழுப்பினார் பூலித்தேவன். அவருடைய பணிகள் அளப்பரிய பணிகள்.

பூலித்தேவர் தோற்றம் ஆறடி உயரம் இருக்கும். இரும்புபோன்ற தேகம். ஒளிவீசும் கண்கள். பகைவருக்கு அஞ்சாத உள்ளம். நட்புக்குத் தலைவணங்குகின்ற பண்பாளன். அடக்குமுறைக்கு அஞ்ச மாட்டார். குதிரையில்லா விட்டாலும் 40 கல் தொலைவு வேகமாக நடக்கக்கூடிய ஆற்றல் இருந்தது என்றும் வீரர்கள் தொடர்ந்து ஓடித்தான் வரவேண்டும் என்றும் அவரைப்பற்றி நாட்டுப்பாடல் சொல்கிறது. 40 கல் தொலைவும் அயர்வின்றி ஒரு குதிரையின் ஓட்டத்தில் நடக்கக்கூடிய ஆற்றல் மன்னர் பூலிக்கு இருந்தது என்று நாட்டுப்பாடல்கள் தெரிவிக்கின்றன.

அப்படிப்பட்ட மன்னனை அதற்குப்பிறகு எவனும் வெல்லமுடியாது என்றவகையில் அவர் அமைத்தது தான் முதல் கூட்டமைப்பு. இப்பொழுது தேர்தல்களில் கூட்டணி வருகின்றன. ஒரு பொது எதிரியை வீழ்த்துவதற்கு ஒன்றுசேர வேண்டும் என்ற எண்ணத்தைப் போர்க்களத்தில் இந்தியாவில் முதன் முதலாக ஏற்படுத்தியவரே பூலித்தேவர்தான். இது வரலாறு. அவருடைய உயர்ந்த மதிநுட்பம். ஆகவே தான், அவர் இதை அமைத்தபிறகு இராமநாதபுரம், சிவகங்கை சீமையில் சிவகங்கை மன்னர்கள் பூலித்தேவரை முன்மாதிரியாகக் கொண்டு கூட்டமைப்பை உருவாக்கினார்கள்.

அந்தக் கூட்டமைப்பில் அங்கே இராமநாதபுரம் மேலப்பனும், முத்துகருப்பத் தேவரும், சிவகிரி மாப்பிள்ளை வன்னியரும், மதுரைக் கள்ளர்களும் அதில் – அந்தக் கூட்டமைப்பில் சேர்ந்தார்கள். அதையடுத்து பாஞ்சாலங்குறிச்சியில் ஒரு கூட்டமைப்பு. அந்தக் கூட்டமைப்பு கட்டபொம்மனும் – கோலார்பட்டி ஜமீனும் – நாகலாபுரம் பாளையமும் குளத்தூர் பாளையமும் சேர்ந்து அவர்கள் ஒரு கூட்டமைப்பு அமைத்தார்கள். நான்காவது கூட்டமைப்பாக கள்ளர் நாட்டு மன்னர்களை ஒருங்கிணைத்து விருபாட்சி மன்னர் கோபால் நாயக்கர் திண்டுக்கல்லை மையமாகக்கொண்டு வெள்ளையனை எதிர்த்துப் போர்புரிந்தார். ஐந்தாவது கூட்டமைப்பாக மலபார் கோயம்புத்தூரை மையமாக வைத்து கேரளா வர்மா தலைமையில் ஒரு கூட்டமைப்பு உருவாயிற்று.

இது தென்னாட்டுப் போர்க்களங்களின் வரலாறு. இதற்கு அகரம் எழுதியவர் பூலித்தேவன். பிள்ளையார் சுழிபோட்டவர் பூலித்தேவன். அந்த உணர்வு அவருக்கு இருந்த காரணத்தினால் அவரை எவராலும் வெல்லமுடியாது. அவரை வெல்ல வேண்டும் என்று வந்தவன் யார் தெரியுமா?

அவன் கம்மந்தான் கான்சாகிப். அவன் பிரிட்டிக்ஷ் படையில் இருந்தவன். பிரிட்டிக்ஷ் படையில் படைத்தளபதியாக இருந்து பல போர்க்களங்களில் வெற்றிபெற்றிருக்கிறான். அவனுடைய வீரம் நிகரற்றதுதான். காரணம், ஹைதர் அலியைத் தோற்கடித்தான். திப்பு சுல்தானின் தகப்பன் மைசூர் புலி என்று அழைக்கப்பட்ட திப்புசுல்தானின் தகப்பன் ஹைதர் அலியைப் போர்க்களத்தில் தோற்கடித்த கம்மந்தான் கான்சாகிப் தெற்கே வந்தான். வாசுதேவநல்லூரில் ஒரு மன்னன் இருக்கிறான் பூலித்தேவன். அவனை எவராலும் வெற்றிபெற முடியவில்லை என்று பிரிட்டிக்ஷ்காரன் அவனுக்குத் துணையாக நாகப்பட்டினத்தில் இருந்து படை – திருச்சியில் இருந்து படை – தூத்துக்குடியில் இருந்து படை – பாளையங்கோட்டையில் இருந்து படை – மதுரையில் இருந்து படை – திருவனந்தபுரத்தில் இருந்து மன்னன் அஞ்செங்கோவின் படை இவ்வளவு படைகளும் வாசுதேவநல்லூரை நோக்கிவந்தது.

இங்கே மலையடிவாரத்தில் கம்மந்தான் கான்சாகிப் அந்தப் பெரும் படைகளைக் கொண்டு வந்து முகாம் அமைத்தான். இந்தப் பாளையத்துக்கு மாமன்னர் பூலித் தேவருடைய ஆளுமைக்குரிய அரசின் எல்லை எது தெரியுமா? அவர் நெற்கட்டுஞ் செவல் பாளையத்துக்கு எல்லை கிழக்கே குவளைக்கண்ணி. மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலை. தெற்கே முத்துக்குளம் சிவகிரிக்குப் பக்கத்தில். வடக்கே தலைவன் கோட்டை. இதுதான் அவருடைய அதிகாரத்துக்கு உட்பட்டசட்டப்பூர்வமான பகுதியாக முதலில் இருந்தது.

அப்படிப்பட்ட நிலையில் கான்சாகிப் இவ்வளவு படைகளையும் கொண்டுவந்து வெற்றி பெற்றுவிடலாம் என்று 1759 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி வாசுதேவநல்லூர் கோட்டையையும், நெற்கட்டுஞ் செவல் கோட்டையையும் தாக்கவேண்டும் என்று படைப் பிரிவுகளோடு வந்தான். 1759 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி தொடங்கிய யுத்தம் டிசம்பர் 26 ஆம்தேதிவரை நடந்தது. அவன் வெற்றி பெறுவான் என்று பிரிட்டிக்ஷ்காரன் நினைத்தான். ஹைதர் அலியையேத் தோற்கடித்தவன் ஆயிற்றே. சூராதி சூரனாயிற்றே என்று நினைத்தார்கள். அப்படி நினைத்த அந்தப் போரில் கான்சாகிப் தோற்றான்.

பூலித்தேவன் வெற்றிபெற்றான். பீரங்கிகளும், துப்பாக்கிகளும் கொண்ட இத்தனை படைகளை வெள்ளைக்காரன் கொண்டுவந்து பெரும்படையோடு தாக்கி ஏறத்தாழ ஒருமாதகாலம் நடைபெற்ற முதல் யுத்தத்தில் பூலித்தேவன் வெற்றிபெற்றான். கான்சாகிப் தோற்கடிக்கப்பட்டான். புறமுதுகிட்டு ஓடினான். ஏன் அவனைப்பற்றிச் சொல்கிறேன் என்றால் அவனுடைய மனத்துணிவையும் நான் அறிவேன்.

காரணம், அதே கான்சாகிப் பிரிட்டிக்ஷ்காரனை எதிர்த்தான். மதுரைக்கு நானே அரசன் என்றான். கும்பினிக்கு கட்டுப்பட முடியாது என்றான். வெள்ளைக்காரனை எதிர்த்தான். பிரெஞ்சுக்காரனோடு உடன்பாடு வைத்தான். கடைசியில் அவன் அவனுடைய படையில் இருந்து துரோகம்செய்து பிரிட்டிக்ஷ்காரனோடு போய்ச்சேர்ந்த பிரெஞ்ச் தளபதி மார்ச்சந்த் திரும்பவந்து நான் உன்னோடு திரும்பச் சேர்கிறேன் செய்தது தவறுதான் என்று திரும்பவும்சேர்ந்தான். வடக்கே நடந்த சண்டைகளில் சில வெற்றிகளை கான்சாகிப்புக்குத் தேடிக்கொடுத்தான் மார்க்சந்த்.

ஒருமுறை துரோகம் செய்தவன் எப்பொழுதும் துரோகம் செய்வான் என்பதை நான் வரலாற்றில் படித்திருக்கிறேன். அதே மார்க்சந்த்தான் பிரிட்டிக்ஷ்காரன் பெரும்தனம் கொடுத்து அவனைச் சரி கட்டியதால் மீண்டும் துரோகியானான். தொழுகை நடத்துகின்ற வேளையில் கம்மந்தான் கான்சாகிப்பை சிப்பாய்கள் பலர் பாய்ந்துசென்று கைதுசெய்தார்கள். கான்சாகிப் கையில் வாள்கிடையாது. அவனுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது மதுரையில் அவனைத் தூக்கில் போடுகிறபோது முடிந்தது கதை, கயிறு கழுத்தை இறுக்கிவிட்டது இறந்தான் இனிசவம்தான் என்று போய்ப்பார்த்து கயிற்றை அவிழ்த்து கீழேபோட்டார்கள். துள்ளிவிழுந்து உட்கார்ந்தான். மூச்சை அடக்குகின்ற பயிற்சி பெற்றிருந்தான்.

முதல்தடவை அவனைத் தூக்கில்போட்டு அவன் சாகவில்லை. இரண்டாவது முறையும் அதேமுறையில் தூக்கில் போட்டார்கள் அவன் சாகவில்லை. மூன்றாவது முறை இரும்புக் குண்டுகளைக் காலில்கட்டி தூக்கில் போட்டார்கள் அப்பொழுது இறந்தான். அவன் உடம்பைத் துண்டு துண்டாக வெட்டி பல இடங்களில் புதைத்தார்கள். அப்படிப்பட்ட கம்மந்தான் கான்சாகிப் தோற்றது யாரிடம் என்று சொன்னால் மாமன்னர் பூலித்தேவனிடத்தில். அந்த யுத்தத்தை பூலித்தேவர் நடத்தியதே ஈடில்லா சாகசமாகும். இப்போரில் கான்சாகிப்பின் பீரங்கிகள் வாசுதேவநல்லூர் கோட்டையை தகர்த்தெறிய பன்முறை முயன்றன – தோற்றன – கடைசியில் வாசுதேவநல்லூர் முற்றுகை ஆரம்பமாயிற்று. இதில் இருமுனைத் தாக்குதலை பூலித்தேவர் நடத்தினார்.

நெற்கட்டும் செவலிலிருந்து வந்த கும்பினிப் படையை வாசுதேவநல்லூர் கோட்டைக்கு எதிர்ப்புறத்தில் இருந்து பூலித்தேவர் தாக்கினார். கோட்டைக்குள் இருந்த வீரமறவர்கள் கும்பினிப் படையைத் தாக்கினார்கள். இருதரப்பிலும் பெரும் உயிர்ச்சேதம். இறுதியில் பூலித்தேவர் வென்றார். கான்சாகிப் தோற்றுப்பின் வாங்கினான்.

1759 ஆம் ஆண்டு தோற்று ஓடிய கான்சாகிப் மீண்டும் இரண்டாவது முறையாக 12 மாதம் கழித்து 1760 ஆம் ஆண்டு அதே டிசம்பர் மாதம் வந்தான். இந்துÞதானத்தில் பிரிட்டிக்ஷ் அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைகளின் வரலாறு என்ற புத்தகத்தை ராபர்ட் ஓர்ம் எழுதினார். முதல் பதிப்பு 1764 இல் வெளிவந்தது. பூலித்தேவரின் வாசுதேவநல்லூர் போர்க்களங்களுக்கு இந்நூலே மூலஆதாரம். இந்நூல் மூன்று வால்யூம்களைக் (தொகுப்புகள்) கொண்டது. மொத்தம் 1291 பக்கங்களை உடையது. தமிழ்நாடு ஆவணக் காப்பக நூலகத்தில் இந்த நூல் உள்ளது. இந்நூலின் முதல் தொகுப்பில் 15 இடங்களிலும் இரண்டாம் தொகுப்பில் 12 இடங்களிலும் பூலித்தேவர் பற்றியும், மூன்றாம் தொகுப்பில் 3 இடங்களிலும் பூலித்தேவன் கோட்டை குறித்தும் செய்திகள் உள்ளன.

இரண்டாம் முறையாக கான்சாகிப் 1760 டிசம்பர் 12 இல் திருநெல்வேலியில் இருந்து பெரும்படையுடன் வந்து நெல்கட்டும் செவலில் இருந்து மூன்று கல் தொலைவில் உள்ள மலையடிவாரத்தில் முகாம் போட்டான் 1760 டிசம்பர் 20 இல் போர் தொடங்கியது. வீரமறவர்கள் நூறுபேர் மடிந்தார்கள். பூலித்தேவரே இம்முறையும் வென்றார். கான்சாகிப் தோற்றான்.

மூன்றாம் முறையாக கான்சாகிப் 1761 மேமாதத்தில் மீண்டும் பெருமளவில் கும்பினிப் படைகளுடன், பீரங்கிகளுடன் போர் தொடுத்தான். மே 3 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி முடிந்தது போர். இப் போரில்தான் பூலித்தேவர் தோற்றார். வாசுதேவநல்லூர் கோட்டை, பனையூர் கோட்டை, நெற்கட்டும் செவல் கோட்டைகள் வீழ்ந்தன. கான்சாகிப்பும் பின்னர் வெள்ளையரை எதிர்த்து மதுரையில் தளம் அமைத்தான். வீரத்தில் சிம்மமான பூலித்தேவர் ஆலய வழிபாட்டில் சிறந்து கோவில் திருப்பணிகள் பலவற்றை செய்தார்.

அவர் கட்டிய ஆலயங்கள் பலப்பல. சங்கரன்கோவில் கோவிலுக்கு சபாபதி மண்டபம் கட்டியவர் பூலித்தேவன்தான். அங்கே தெப்பக்குளம் வெட்டியவர் பூலித்தேவன். கரிவலம் வந்த நல்லூர் பால்வண்ணநாதர் ஆலயத்துக்கு முன்மண்டபம் கட்டியவர் பூலித்தேவன். அந்த ஆலயத்துக்குத் திருத்தேர் செய்தவர் பூலித்தேவன். வெள்ளி ஆசனங்களை அமைத்தவர் பூலித்தேவன். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மூலஸ்தானத்து அம்மனுக்கு தங்க நகைகள், வைர அட்டிகைகள் செய்துவைத்தவர் பூலித்தேவன். இங்கே பக்கத்தில் இருக்கக்கூடிய தாருகாபுரத்தில் 16 கால் மண்டபத்தைக் கட்டி அன்னதானம் செய்தவர் பூலித்தேவன். அதுமட்டுமல்ல, சீவலப்பேரி மருகால் தலையில் பூலுடையார் கோவில் மண்டபம் கட்டியவர் பூலித்தேவன். அங்கே நெல்லையில் வாகையம்மன் கோவிலை கட்டிவைத்தவர் பூலித்தேவன்.

இத்தனைக் கோவில்களையும் கட்டி – இத்தனைத் திருப்பணிகளையும் செய்து மக்களை அரவணைத்து மக்கள் வாழ்வு செழிப்பதற்கு பாடுபட்டு அனைவரையும் சகோதரர்களாக ஏற்றுக் கொண்டதனால்தான் நான் இந்தக் கருத்தை வலியுறுத்தவிரும்புகிறேன். எந்த மாபூஸ்கான் ஆர்க்காடு நவாப்பின் தம்பி எதிர்த்து வந்தானோ அவன் பூலித்தேவனிடத்தில் வந்து நான் உங்கள் நண்பனாக அரண்மனையில் இருக்கிறேன் என்றான். அவர் ஏற்றுக் கொண்டார். இந்த அரண்மனையில் நீண்டநாட்களாக மாபூஸ்கான் இருந்தான்.

இதெல்லாம் சரித்திரம் தோழர்களே, நான் ஆதாரம் இல்லாமல் பேசமாட்டேன். இதை நான் பேசுகிறபோது ஒலிநாடாவில் ஒளிநாடாவில் பதிவுசெய்யப்படும் என்ற உணர்வோடு பேசுகிறேன். இந்தப்பேச்சு ஒரு வரலாற்றுச் சுவடாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் பேசுகிறேன். ஏனென்றால் ஏராளமான தம்பிகள், இளைஞர்கள் வந்திருக்கிறார்கள். இந்தத் தம்பிகளின் உள்ளத்தில் வீரஉணர்ச்சியும், மானஉணர்ச்சியும் அவர்கள் உள்ளங்களில் பொங்கவேண்டும் என்பதற்காகத்தான் இங்கே வந்திருக்கின்ற தம்பிகள் இடத்தில் உன்னுடைய பாட்டன், முப்பாட்டன் எல்லாம் போராடி இருப்பான் பூலித்தேவன் படையில். அவன் எல்லாம் வாளெடுத்து இருப்பான். அவன் எல்லாம் பீரங்கிக்கு எதிரே போய்நின்று இருப்பான். அவர்களுடைய பேரப்பிள்ளைகள்தான் நீங்கள். அந்த உணர்ச்சியைப் பெறவேண்டும் என்பதற்காக நான் இதைப்பேசுகிறேன்.

காரணம், பிரெஞ்சு நாட்டுத் தளபதி டியூப்ளே. அவன் மிகப்பெரிய தளபதி இராபர்ட் கிளைவ்வோடு போரிட்டவன். சந்தர்ப்பவசத்தால் தோற்றுப்போனவன். பாண்டிச்சேரியைக் கைப்பற்றியவன். அந்தப் பாண்டிச்சேரியை பிரெஞ்சின் காலனியாக்கிய டியூப்ளேயின் மொழிபெயர்ப்பாளர்தான் துபாஸ் ஆனந்தரங்கம்பிள்ளை. அவர் நாட்குறிப்பு எழுதியிருக்கிறார்.

ஆனந்தரங்கம் பிள்ளையின் டைரி. சரித்திரப் புகழ்பெற்ற டைரி. எப்பொழுது 1736 செப்டம்பர் 6 இல் தொடங்க 1761 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி வரை டைரி எழுதி இருக்கிறார். அந்த டைரி ஆவணக் காப்பகத்தில் இருக்கிறது. அந்த டைரியில் அவர் 11 பாகங்கள். 11 ஆவது பாகத்தில் மன்னர் பூலித்தேவரைப்பற்றி எழுதுகிறார். அப்பொழுது சொல்கிறார். இவரது பண்பாட்டை மாபூஸ்கான் என்பவன் மன்னர் அரண்மனையில் இருந்து அவன் விடைபெற்றுப் போகிறபோது அவனது பட்டுச் சட்டையும், பொன்னாபரணங்களையும் அவனுடைய கைவசம் இருந்த பொன்னையும், பொருளையும் பாதுகாப்பாக வைத்துவிட்டுப்போனான்.

இதை இங்கேயிருந்து அனுப்பிவைக்கிறார் பூலித்தேவன். அவர் இதை எழுதுகிறார். ஒரு தேதியைக் குறிப்பிட்டு 1757 ஆம் ஆண்டில் டிசம்பர் 21 தேதியைக் குறிப்பிட்டு பூலித்தேவன் அரண்மனையில் இருந்து பொன்னும் பொருளும் பட்டாடைகளும் திருவண்ணாமலை கம்மந்தானிடம் ஒப்படைக்கப் பட்டது என்று செய்தி கிடைத்திருக்கிறது என்று டைரியில் எழுதுகிறார். விலைமதிப்பற்ற பொருள்கள் அனைத்தையும் பத்திரமாக அனுப்பி வைத்தார் பூலித்தேவர் என்பது அவரது நேர்மை நாணயத்துக்கு வரலாற்றுச் சான்றாகும்.

அப்படிப்பட்ட வீரமும், தீரமும் நிறைந்த மன்னன் பூலித்தேவன் படையில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச்சேர்ந்த வெண்ணிக்காலாடி போராடிய வரலாற்றை இங்கே சொல்வது மிகவும் அவசியமாகும்.

அந்தப்போர் மிகஉக்கிரமானபோர். வாசுதேவநல்லூர் போரில் கம்மந்தான் கான்சாகிப் வந்து போர்தொடுத்துத் தோற்றானே அந்தப்போரில், இரண்டாம் போரில் வெண்ணிக்காலாடி பிரதான தளபதி. இன்று இம்மேடையில் சேதுராமனுக்குப் பக்கத்தில் என் அன்புச் சகோதரர் ஓ.பன்னீர் செல்வத்துக்குப் பக்கத்தில், தம்பி சரவணனுக்குப் பக்கத்தில், செந்தூர் பாண்டியனுக்குப் பக்கத்தில், என் அருமைத்தம்பி தேவேந்திரகுல சமூகத்துப் பிள்ளை டாக்டர் சதன் திருமலைக்குமார் உட்கார்ந்து இருக்கிறார்.

நீங்கள் கொஞ்சம் யோசித்துப் பார்க்கவேண்டும். அன்றைக்கு வெண்ணிக்காலாடி. மருத்துவர் சதன் திருமலைக்குமாருக்குப் பாட்டனுக்குப் பாட்டனுக்குப் பாட்டன். அவன் எங்கே இருக்கிறான்? அவன் பூலித்தேவன் படையில் பிரதான தளபதி. போர் நடக்கிறது. கம்மந்தான் கான்சாகிப் கால்பிடரியில் அடிபட ஓடுகிறான். அவனது படைதோற்று ஓடுகிறது. வெற்றிமேல் வெற்றிவருகிறது.

வெள்ளைக்காரன் எழுதுகிறான். 18 அடி நீளமுள்ள ஈட்டியை வாசுதேவநல்லூர் மறவர்கள் பயன்படுத்தினார்கள். நெற்கட்டுஞ்செவல் மறவர்கள் பயன்படுத்தினார்கள். எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. 18 அடி நீளமுள்ள ஈட்டியை எப்படி அவர்கள் பயன்படுத்தினார்கள் என்று எனக்கே வியப்பாக உள்ளது. இங்கே இருக்கின்ற மக்கள் ஒவ்வொருவரும் எந்த நேரத்திலும் கையில் வாளும், வளைதடியும், கேடயமும் பக்கத்தில் வைத்திருப்பார்கள் என்று எழுதுகிறான் வெள்ளைக்காரன்.

அந்தப்போரில் தோற்று ஓடுகின்றவர்களை விரட்டிச்சென்று வெற்றிபெற்றுவந்தான் வெண்ணிக் காலாடி. அந்த வெண்ணிக்காலாடியின் வயிற்றில் பாய்ந்த ஆயுதம் வயிற்றைக் கிழித்து குடல் வெளியேவந்து விட்டது. குடல் வெளியே வந்தவுடன் அந்தப் பெருவீரன் தலையிலேயே கட்டி இருந்த தலைப்பாகையை எடுத்து அந்தக் குடலை உள்ளேதள்ளிவிட்டு இரத்தம் பெருக்கெடுக்கின்ற இடத்தில் அந்த தலைப்பாகையைவைத்து இடுப்பில் கட்டிக் கொண்டு திரும்பவும் சண்டை செய்கிறான்.

சண்டை செய்து வெற்றிச் செய்தியோடுதான் வந்து மன்னர் பூலித்தேவனிடம் கீழே விழுகிறார். இரத்தம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பூலித்தேவர் எப்படி இலாமிய முடேமியாவை எடுத்துமடியில் போட்டாரோ அதேபோல இந்த தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தில் பிறந்த வெண்ணிக்காலாடியை எடுத்து மடியில் போட்டுக்கொண்டு கண்ணீர் பெருக்க பூலித்தேவன் அழுகிறார். அப்பொழுது அந்தத் தலைப்பாகை முழுக்க இரத்தத்தில் நனைந்து பூலித்தேவனின் உடம்பெல்லாம் இரத்தம் பாய்கிறது.

அந்தக் காட்சியில் அவர் தன்னுடைய வேதனை எல்லாம் கொட்டி ஒருபிள்ளையை இழக்கின்ற தகப்பனைப்போல அழுகிறார். அந்த இரத்தம் அவரது உடம்பில், கைகளில் பட்டது. அன்புக்கு உரியவர்களே, வளரும் பிள்ளைகளே, வாலிபச் சிங்கங்களே, நான் இதைச் சொல்லக்காரணம், ஒரு இலட்சியத்துக்காக ஆயுதம் ஏந்தலாம். ஒரு உன்னதமான இலட்சியத்துக்கு – ஒரு நாட்டின் விடுதலைக்கு – ஒரு இனத்தின் விடுதலைக்கு – ஆயுதம் ஏந்தலாம்.

ஆனால், சொந்த சகோதரர்களாக வாழவேண்டிய நாம், பகையை – மற்றவர்கள் பாராட்டினாலும் நாம் பாராட்ட வேண்டாம். இது உங்கள் சகோதரனாகிய வைகோவின் தாழ்மையான வேண்டுகோள். உங்களைப்போன்ற தம்பிகளை உயிராக நேசிக்கின்ற ஒரு அண்ணனின் வேண்டுகோள். பகை மற்றவர்கள் பாராட்டினாலும் நாம் பாராட்ட வேண்டாம் அந்த உறுதியை நாம் எடுத்துக் கொள்வோம்.

ஏன் என்றால் அன்றைக்கு வெண்ணிக்காலாடி உடம்பில் இருந்து இரத்தம் பூலித் தேவனின் உடம்பில் பாய்ந்தது. அதேபோலத்தான் ஒண்டிவீரன் அருந்ததியர் குலத்தில் பிறந்தவன். அவன் ஒற்றர்படைக்குத் தலைவன். பூலித்தேவன் ஒற்றர் படையும் வைத்திருந்தார். அப்பொழுதுதான் தகவல் வருகிறது. தென்மலையில் வெள்ளைக்காரன் முகாம் அமைத்து இருக்கிறான். தென்மலை முகாமில் இருந்து கும்பினிப் படைத்தலைவன் சவால்விடுகிறான். அவனுக்குத் தகவல் சொல்கிறார். இந்தத் தென்மலை முகாமுக்குள் எவனாவது நுழைந்து எங்கள் பட்டத்துக் குதிரையைக் கொண்டுபோய்விட்டால் நாங்கள் தோற்றதாக ஒத்துக் கொண்டு போய்விடுவதாக சவால் விடுகிறான்.

இந்தச் செய்தி அரண்மனைக்கு வருகிறது. அரசர் பூலித்தேவனின் காதுக்கு வருகிறது. கலகலவென்று சிரிக்கிறான், அப்பொழுது பக்கத்தில் நிற்கிறான் ஒண்டிவீரன். அரசனே, நான் போய் முடித்து வருகிறேன். இந்தச் சபதத்தை நிறைவேற்றி வருகிறேன் என்று இவன் கும்பினியாரிடம் போகிறான். தந்திரமாகப் போகிறான். நயமாகப் பேசுகிறான். அங்கு சிலவேலைகளைச் செய்கிறான். அந்த முகாமில் சேர்த்துக் கொள்கிறார்கள். தக்க நேரம் பார்த்தான். பட்டத்து குதிரை கட்டப்பட்டு இருக்கிற இடத்தில் இருந்து அந்தக் கயிற்றை அவிழ்த்தான். குதிரையைக்கொண்டு அமாவாசை இருட்டில் இரவோடு இரவாக கொண்டுவந்துவிடலாம் நெற்கட்டுஞ்செவலுக்கு என்று கொண்டுவருகிற போது குதிரை மிரண்டுவிட்டது.

குதிரை மிரண்ட சத்தத்தைக்கேட்டு கும்பினிப் படையினர் ஓடிவந்துவிட்டார்கள். ஓடி வந்தவுடன் இவன் என்ன செய்தான் தெரியுமா? குதிரையை விட்டுவிட்டு அங்கே இருக்கக்கூடிய புல்லை எடுத்து மேலேபோட்டு அந்தப் புல்லுக்குள் படுத்துக் கொண்டான். தேடிவந்த காவலர்கள் என்ன குதிரை கட்டுத் தறியைவிட்டு ஓடிவந்து இருக்கிறதே என்று குதிரையின் கயிற்றைபிடித்து சரி இதைக்கொண்டுபோய் லாயத்தில் கட்டவேண்டாம். இங்கேயே கட்டிவிடுவோம் என்று அங்கே முளையை அடிக்கிறார்கள். முளை உள்ளே இறங்குகிறது. முளை அடிக்கிற இடத்தில் படுத்துக்கிடக்கின்றான் ஒண்டிவீரன்.

அவன் கையில்தான் முளையை அடிக்கிறார்கள். அவன் உள்ளங்கையைத் துளைத்துக் கொண்டு அந்த முளை இறங்குகிறது. அந்தக்கூரிய முளை உள்ளே நுழைகிறது கூச்சல் போடவில்லை. அலறவில்லை. சத்தம் போடவில்லை. இவையெல்லாம் நினைத்துப் பார்க்கக்கூடிய காட்சியா? அவன் கையைத் துளைத்துப் போகிறது. அவன் முனகவில்லை. அங்கே இருக்கின்றவர்களுக்கு அவன் உள்ளே இருப்பது தெரியவில்லை. போய்விட்டார்கள். அதன்பிறகு, ஒண்டிவீரன் எழுந்து துளைக்கப்பட்ட கையோடு இன்னொரு கையால் முளையைத் தூக்கிவிட்டு எறிந்துவிட்டு கயிற்றை எடுத்து குதிரையையும் அழைத்துக்கொண்டு அரண்மனைக்கு வந்துவிட்டான் ஒண்டிவீரன்.

இந்தக் கை சிதறியிருப்பதைக் கண்டு பதறியவராக மன்னர் பூலித்தேவன் என்ன நேர்ந்தது என்று கேட்கிறபோது, என் கரம் போனால் என்ன, மன்னா உங்கள் மனதில் எளியவனுக்கு ஒரு இடம் இருக்கிறதே! அது ஆயிரம்கோடி தங்கத்தைவிட உயர்ந்தது அல்லவா என்றான். பெயருக்குப் பொருத்தமாக ஒண்டிவீரன் ஒண்டியாக சென்று சாதித்துவிட்டு வந்திருக்கிறான். அவன் அருந்ததியர் குலத்தில் பிறந்தவன்.

இப்படி அனைவரையும் அரவணைத்து யுத்தகளத்தில் நின்று சாகசங்கள் புரிந்தவர்தான் பூலித்தேவர்.
ஆறு ஆண்டுகள் கழிந்தன. 1767 ஆம் ஆண்டு மீண்டும் போர் – கடைசிப் போர். டொனல்டு காம்பெல் பெரும் பீரங்கிகளோடு வந்தான். அப்பொழுது அவன் சொல்கிறான். அந்தச் சண்டையில்தான் அனந்த நாராயணன் துரோகத்தால் பூலித்தேவர் தோற்றதாக சரித்திரம் சொல்கிறது. காம்பெல் எழுதுகிறான். நினைத்தேப் பார்க்கமுடியாது. பீரங்கிகளின் குண்டுகள் விழுந்து கொண்டே இருந்தன. கோட்டைத் தகரவில்லை. கோட்டையின் சுவர்களில் ஓட்டைகள் விழுந்தன.

ஆனால், அந்த மறவர்கள் அந்த ஓட்டைகளை அடைப்பதற்கு அவர்கள் பனை ஓலைகளையும், ஈரமண்ணையும் கொண்டுவந்து அந்த ஓட்டைகளை அடைத்தார்கள் என்று எழுதுகிறான். இந்த வீரத்தை எங்கும் பார்த்தது இல்லை. மறவர்கள் சிலரின் உடலைப் பீரங்கிகுண்டுகள் துண்டு துண்டாகவும் சின்னாபின்னமாகவும் சிதறவைத்தன. குண்டுகள் விழுந்து கொண்டே இருந்தன. பக்கத்தில் நிற்பவன் செத்து விழுகிறான். அதைப்பற்றிக் கவலைப்படாமல் அந்த இடத்தின் சிதிலமான பகுதிகளை செப்பனிடுவதில் பனை ஓலைகளையும், ஈரமண்ணையும் கொண்டுவந்து அந்த ஓட்டைகளை அடைப்பதிலே உறுதியாக இருக்கக்கூடிய வீரர்களை இந்த உலகத்தில் எங்கே பார்க்க முடியும். வாசுதேவநல்லூரில் தான் பார்க்க முடிந்தது என்று எழுதுகிறான்.

இந்தத் திருநெல்வேலி சரித்திரத்தை மிக முறையாக எழுதியவர் திராவிட மொழிகளில் ஒப்பிலக்கணம் எழுதிய இன்றைக்கு இடையன்குடியில் அடக்கம் செய்யப்பட்டு கல்லறையில் துயிலும் கால்டு வெல். திருநெல்வேலி சரித்திரம் எழுதி இருக்கிறார். அதில் பூலித்தேவனைப் பற்றிச் சொல்கிறார். “இந்த மேற்கத்திய பாளையக்காரர்கள் மத்தியில் உயர்ந்த இடத்துக்கு வந்தவர்தான் பூலித்தேவன். அவர் படைபலம் குறைவாக இருந்தாலும் பண்பால், வீரத்தால், திறமையால் அவருடைய ஆளுமைக்கு உட்பட்ட இடத்தைவிட செல்வாக்கும் புகழும் பெற்றார்” என்று எழுதுகிறார்.

இதற்குப்பின்னர் போரில் பூலித்தேவர் படை தோற்றபின் கடைசியாக அவரைக் கைதுசெய்து கொண்டு செல்கிறபோதுதான் சங்கரன்கோவில் ஆலயத்துக்குள் நான் வழிபட்டு வருகிறேன் என்று உள்ளே போனார் பூலித்தேவர். அவர் இறைவனைப்பாடிய பாடல்கூட இருக்கிறது. பூலித்தேவன் பாடிய பாடல்கூட இருக்கிறது. அருமையான பாடல். சிவனை நினைத்துப் பாடிய பாடல்.

இதோ அந்தப் பாடலைச் சொல்கிறேன்.

பூங்கமலத்தயன் மால் அறியா உமைசங்கரனே
புகலக் கேண்மின்
தீங்குபுரி மூவாலிச வினையே – சிக்கி
உழறும் அடியேன் தன்னை
ஓங்கையில் சூழ் உலகமதில் உனை அன்றி
எனைக்காக்க ஒருவருண்டோ
ஈங்கெழுந் தருள்புரியும் இன்பவாருதியே
இறைவனே போற்றி போற்றி

அதற்குப்பிறகு என்ன ஆனார் என்றே தெரியவில்லை. அருட்பெருஞ்சோதி மறைந்ததைப்போல சங்கரன்கோவில் கோவிலுக்குள் போனவர் திரும்பவில்லை. நேதாஜியின் மரணத்தைப்போல பூலித்தேவரின் மறைவும் இன்றுவரை மர்மமாகவே உள்ளது.

அன்புக்கு உரியவர்களே, இதைப்பேசக்கூடிய தகுதி அடியேனுக்கு உண்டு என்பதற்குக் காரணம் 1991 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் தேதி கழுகுமலைக்குத் தெற்கே இருக்கின்ற சிதம்பரபுரம் என்கின்ற மறவர் சீமையில் தென்னாட்டில் முதன்முதலாக பூலித்தேவருக்கு சிலை அமைத்தவன் இந்த வைகோ. நானும், என் தம்பியும் சொந்தச் செலவில் மண்டபம் கட்டினோம். நானும், என் தம்பி ரவிச்சந்திரனும் சேர்ந்து பூலித்தேவருக்கும், பசும்பொன் தேவர் திருமகனுக்கும் இரண்டு சிலைகளை எழுப்பினோம். மண்டபம் அமைத்து தமிழ்நாட்டில் முதல் சிலை அமைத்தவன் இந்த மேடையில் நின்று கொண்டு இருக்கக்கூடிய வைகோ.

அந்த மண்டபத்திறப்பு விழா மாலையில் நடைபெற்றது. அந்த மண்டபத்தைத் திறந்து வைத்துவிட்டு அந்த இரவோடு இரவாக நான் சென்னைக்குச் சென்றேன். அந்த இரவில்தான் என்னுடைய தம்பி விடுதலைப்புலிகளை வீட்டில் வைத்திருக்கிறான் என்று அதே இரவில்தான் கைது செய்யப்பட்டான். நான் இதை இங்கே நினைவூட்டுவதற்குக் காரணம் எந்த வீரத்தை மதிக்கிறோமோ மண்ணின் மானம்காக்க அந்தப் பூலித்தேவரின் வடிவமாகத்தான் நான் ஈழத்துப் பிள்ளைகளைப் பார்க்கிறேன். ஈழத்துப் போர்க்களங்களைப் பார்க்கிறேன்.

இந்தப் பூலித்தேவனின் வழியில்தான் ஈழத்தின் விடுதலைப்புலிகளைப் பார்க்கிறேன். இதைச் சொல்லக்காரணம், மானஉணர்ச்சியும், வீரஉணர்ச்சியும் படைகண்டு அஞ்சாது படை பெருக்கத்தைக் கண்டு அஞ்சாது உயிரைப்பற்றிக் கவலைப்படாது நாட்டின் விடுதலைக்கு முதலாவது அடிமை விலங்கை உடைப்பதற்கு சம்மட்டி ஏந்திய முதல் மன்னன் இந்தியாவிலேயே 1857 ஆம் ஆண்டு சிப்பாய்க் கலகம் என்றும் முதல் சுதந்திரப்போர் என்றும் அழைக்கப்படுவதற்கு நூறு ஆண்டுக்கு முன்னரே போர்புரிந்து வெற்றிகளைக் குவித்தவன்தான் பூலித்தேவர்.

அதன்பின்னர் கொடுமையிலும் கொடுமை என்னவென்று தெரியுமா? மீண்டும் அங்கே ஒரு புதுக்கோட்டை கட்டப்பட்டது. ஒரு கோட்டை அழிந்தபோது பூலித்தேவன் மன்னர் இன்னொரு கோட்டை எழுப்பினார். அதற்குப்பெயர் புதுக்கோட்டை. அந்த புதுக்கோட்டையும் தகர்க்கப்பட்டபோது மன்னர் பூலித்தேவனின் மனைவி கயற்கண்ணி அம்மையாரும், அவரது மூத்தமகள் கோமதிமுத்து தலைவச்சியும், ஆண் பிள்ளைகளில் மூத்தவனாகிய சித்திரகுப்த தேவனும், இரண்டாவது பிள்ளையாகிய சிவஞான பாண்டியனும், பாதுகாப்பாக இருக்கட்டும் என்று மறவர் மக்கள் பனையூருக்குப் பக்கத்தில் காட்டுக்குள் பாதுகாப்பாக வைத்திருந்தார்கள்.

துரோகிகள் அடையாளம் காட்டி அவர்கள் இருந்த பகுதிக்கு தீ வைத்தார்கள். மன்னர் பூலித்தேவனின் மனைவி கயற்கண்ணி அம்மையார் தீயில் கருகி இறந்தாள். அந்த இடத்தில் அவர்களைப் பாதுகாத்த கொத்தாளித் தேவரும், இன்னொருவரும் பாய்ந்து சென்று இவர்களைப் பாதுகாக்க முனைந்தார்கள். புதுக்கோட்டை சண்டையைப்பற்றிய நாட்டுப்புறப் பாடல் இருக்கிறது. நான் படித்து இருக்கிறேன். அந்த நாட்டுப்புறப்பாடலில் ஒரு செய்தி.

இந்தச் சம்பவம் நடந்த உடன் சின்னப்பிள்ளையாக இருந்த சித்திரகுப்தத் தேவனை வெள்ளைக்காரன் அழித்துவிடுவான் என்று பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பாஞ்சாலங்குறிச்சி அரண்மனைக்குக் கொண்டு சென்று வீரபாண்டிய கட்டபொம்மனின் தந்தை ஜெகவீரபாண்டிய கட்டபொம்முதுரை அவன் அரண்மனையில் வைத்து பாதுகாத்து வளர்த்ததாக புதுக்கோட்டை நாட்டுப்புறப்பாடல் செய்தி சொல்கிறது.

ஆகவேதான், மன்னர் பூலித்தேவன் போர்க்களம் அமைத்து அந்த வீரப்போர்கள் நடந்த அதற்குப்பிறகு ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்குப்பிறகு பாஞ்சாலங்குறிச்சி போர் நிகழ்கிறது. ஆனால், இந்தப் பிள்ளையையும் பாதுகாப்பதற்கு அவர்கள் முன்வந்த செய்தியும் இருக்கிறது. ஆகவே, இன்றைக்கு இருக்கக்கூடிய சூழலில் இந்த உணர்வுகளை சொல்வதற்குக் காரணம், அன்புக்குரிய இளைஞர்களே, நாட்டின் விடுதலைக்காக வீரப்போர் புரிந்த மன்னர்கள் நம் மண்ணைச் சேர்ந்தவர்கள். இந்தப் பெருமை இந்தியாவில் வேறு எவனுக்கும் கிடையாது.

இந்த மண் வீரம் நிறைந்த மண். மானம் நிறைந்த மண். இந்த மன்னனின் புகழைப் பாடுவது அப்படிப்பட்ட மன்னருக்குப் புகழ் நிலைநாட்டப்பட வேண்டும். சமூகஒற்றுமையை நிலைநாட்டுவோம். மதநல்லிணக்கத்தை பாதுகாத்தவர் பூலித்தேவர்.

வாசுதேவநல்லூரில் அல்லா தெரு என்று ஒரு தெரு இருக்கிறது. காரணம் என்னவென்று தெரியுமா? மாபூஸ்கான் இருந்தபோது இஸ்லாமியர்கள் வழிபடுவதற்கு என்று பள்ளிவாசலை அமைத்துத்தந்தவர் பூலித்தேவர். வாசுதேவநல்லூரிலும் சரி, நெற்கட்டுஞ்செவலிலும் சரி. வழிபடுவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தவர் பூலித்தேவன். அவரது படையில் பக்கத்தில் பீர்முகமது சாயுபு இருந்தார். மதநல்லிணக்கமும், சகோதரத்துவமும் இருந்த அந்தப் பண்பாட்டை நிலைநாட்டிய மாமன்னர் புகழ்பாடுவதற்கு இந்த இயற்கையும் ஒத்துழைத்து, மழைக்கும் விடுமுறை கொடுத்து மனம்போல இந்த விழா நடைபெறுவதற்கு ஒத்துழைத்த இயற்கைக்கு நன்றிதெரிவிக்கிறேன்.

வாழ்க மன்னர் பூலித்தேவர் புகழ்!

வைகோ இவ்வாறு உரையாற்றினார்.

This entry was posted in பூலித்தேவன் and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *