புகழூர்க் கல்வெட்டு

கரூர் மாவட்டம் புகழுரை அடுத்த வேலாயுதம் பாளையம் என்னும் ஊரில் ஆறுநாட்டான்மலை என்னும் குன்று ஒன்று உள்ளது. அந்த குன்றின் உச்சியில் முருகன் கோயில் உள்ளது. மலையின் இடைப்பகுதியில் வடக்குப் பக்கமும் தெற்குப்பக்கமும் இரண்டு குகைகள் உள்ளன. அந்த குகையில் சமணர் படுக்கைகள் உள்ளன. அந்த படுக்கையை அமைத்துக் கொடுத்த சேரனைப் பற்றியும் படுக்கையில் இருந்த சமணத்துறவிகள் பற்றியும் அங்குள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

‘புகழூர்க் கல்வெட்டு’ என்பது புகழூர் மலைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தமிழ் பிராமிக் கல்வெட்டு ஆகும். இவ்விடம் பண்டைக்காலத்தில் சேரர்களின் தலைநகரமாக இருந்த கரூரிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ளது. இக்கல்வெட்டு கிறித்தவ ஆண்டுக் கணக்கின் தொடக்க காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது. சேர மன்னன் இளம் கடுங்கோ என்பவன் சமணத் துறவி ஒருவருக்குக் குகை வாழிடம் ஒன்றைத் தானமாக வழங்கியதைக் குறிக்கவே இக் கல்வெட்டுப் பதியப்பட்டுள்ளது. இக் கல்வெட்டில் மூன்று தலைமுறையைச் சேர்ந்த சேர மன்னர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருப்பது இக்கல்வெட்டுக்கு ஒரு சிறப்பு ஆகும்.

இக் கல்வெட்டில் பெயர் குறிக்கப்பட்டுள்ள சேர மன்னர்கள், கோ ஆதன் செல்லிரும்பொறை, பெருங்கடுங்கோ, இளங்கடுங்கோ என்பவர்களாவர். இவர்களில் கோ ஆதன் சேரல் இரும்பொறையின் மகனே பெருங்கடுங்கோ. இளங்கடுங்கோ பெருங்கடுங்கோவின் மகன். இக் கல்வெட்டு வெட்டப்பட்ட காலத்தில் பெருங்கடுங்கோவே மன்னனாக இருந்ததாகத் தெரிகிறது. இளங்கடுங்கோ இளவரசராக முடிசூட்டப்பட்டதைக் குறிக்கவே இத் தானம் வழங்கப்பட்டது.

கல்வெட்டு செய்தி :

கல்வெட்டில் (பிராமி எழுத்துகளில்) இடம்பெற்றுள்ள செய்தி:

யாற்றூர் செங்காயபன் உறைய கோ ஆதன் செல்லிரும்பொறை மகன் பெருங்கடுங்கோ மகன் இளங்கடுங்கோ ஆக அறுத்த கல்

இதில் கூறப்படும் ‘கோ அதன் செல் இரும்பொறை’ என்னும் பெயரில் உள்ள சில பெயர்ப் பகுதிகள் ‘செல்வக் கடுங்கோ வாழி ஆதன்’ என்னும் 7ஆம் பதிற்றுப்பத்துத் தலைவன் பெயரினூடே பொதிந்து கிடப்பதைக் காணமுடிகிறது. இவனது மகன் பெயர் ‘பெருங்கடுங்கோ’ என்பது ‘பாலை பாடிய பெருங்கடுங்கோ’வையும், இவன் மகன் ‘இளங்கடுங்கோ’ என்னும் பெயர் ‘மருதம் பாடிய இளங்கடுங்கோ’வையும் நினைவூட்டுகின்றன.

இளங்கடுங்கோ சமணத் துறவிகளுக்கு மலைக்குகையில் படுக்கை அமைத்துக் கொடுத்தான். அந்தப் படுக்கைகள் இன்னின்னாருக்கு அளிக்கப்பட்டவை என்பதைக் குறிக்கும் தாமிழிக் கல்வெட்டுகளும் படுக்கைகளின் தலைமாட்டில் உள்ளன. அவை சிதைந்த நிலையில் இருந்தாலும் ‘பிட்டன்’, ‘கொற்றன்’ என்னும் பெயர்கள் படிக்கக்கூடிய நிலையில் தெளிவாக உள்ளன.

நன்றி : தமிழ் பிராமிக் கல்வெட்டுகள்

This entry was posted in கல்வெட்டு, சேரர் and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *