பார்கவ குல சத்திரியர்கள்

பார்கவ குல சத்திரியர்கள்.(மூப்பனார்,உடையார்,நயினார்)

பார்கவ குலத்தினர் மலையமான் திருமுடிக்காரி,வேள் பாரி  ஆகிய வேளிர்களின் வம்சமாக பழங்கால கல்வெட்டு,செப்பேடு போன்ற வரலாற்று ஆதாரங்களின் மூலமாக அறியப்படுகின்றனர்.
தென்னிந்திய அரச குலங்களில் மலையமான் குலமும் முக்கியமான ஒன்று. மூவேந்தரின் சதியால் ஏற்பட்ட பாரியின் மறைவிற்கு பின்,தந்தையை இழந்து நின்ற பாரிமகளிரை,புலவர் கபிலர் பெருமான் தனது முயற்சியின் மூலமாக நிழல்  வாழ்நர் குடியாகிய (வேளிர் அரசகுலம்) மலையமான் திருமுடிக்காரியின் மகன்  திருக்கோவிலூரையாண்ட தேர்வீகன் என்னும் மலையமான் தெய்வீகன் என்ற அரசனுக்கு சங்கவை,அங்கவை இருவரையும் மணம் செய்விக்க முனைந்து;பாரியை சதியால் கொன்ற மூவேந்தரையுமே ஔவையாரின் உதவியுடன்  நயந்து அழைத்து அவர்களின் முன்னிலையிலேயே பாரிமகளிருக்கும் மலையமான் தெய்வீகனுக்கும் திருமணம் செய்வித்தார்.
இவ்வாறு மூவேந்தர் முன்னிலையில் ஏற்பட்ட மண உறவின் காரணமாக உண்டான மலையமான் தெய்வீக ராஜனின் சந்ததியினர்  பார்கவ குலம்,பாரியின் வம்சம் எனவும் அழைக்கப்படுகின்றனர்.இவர்களின் மக்கள் மலையமன்னர் நரசிங்க முனையரையர் ,நத்தமன்னர் மெய்ப்பொருள் நாயனார்,சுருதிமன்னர் குலசேகரன் என்ற மூவர்.அதில் மலையை ஆட்சி செய்பவர் மலையமான் எனவும் சமதளத்தை ஆட்சி செய்தவர் நத்தமான் எனவும்,மண்ணும்,மலையும் ஆள்பவர்,கல்வி,கேள்விகளில் தேர்ந்தவர் சுருதிமான் எனவும் வழங்கப்பட்டார்கள்.

மேற்படி பட்டங்களைக்கொண்ட மலையமான்களாகிய தண்ணிழல் வாழ்நர் (சேர அரச குலத்தார்)என்று அழைக்கப்பட்ட இவர்களின் இனத்தார்  பதினெட்டாம் நூற்றாண்டு வரைக்குமே அவர்களது  அதே பட்டங்களோடு குறுநிலமன்னர்களாக, பாளையக்காரர்கள்,சீமை நாட்டார் என ஆட்சிசெய்திருந்தனர். அவர்களின் வம்சாவழியினர் இன்றைக்கும் அதே பட்டங்களுடனேயே அழைக்கப்படுகின்றனர்.
<குல முதல்வராக குலசேகரன் சுருதிமன்னர் அறியப்படும் காரணத்தால் அவர்தம் வம்சத்தினர் மூப்பனார் ஆவார். மலையமான் திருமுடிக்காரியின் நேரடி மரபு வழி வந்தோர் பாரியின் வம்சமான பார்க்கவ குலத்தார் மற்றும் வன்னிய பட்டம்(பார்கவ கோத்திரம்)உள்ள சிலரும்  தஞ்சைக்கள்ளர்களும் மட்டுமே.பார்கவ குலத்தோர் சோழனுக்கு பெண் கொடுக்கும் உயர் நிலையில் இருந்த அரச குடும்பத்தார். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூருக்கு அருகில் உள்ள சோழ பாண்டியபுரம் என்ற ஊரில் ஆண்டிமலை என்ற இடத்தில் உள்ள பாறையில் கி.பி.953 ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட கல்வெட்டில் உள்ள செய்தி,

“பாரிமகளிரின் பைந்தொடி முன்கை பிடித்தோர் வழி வரு குரிசில் சித்தவடவன்”என்பதாக அமைகிறது,பாரி மகளிரை மணம் செய்தவர்களின் வழி வந்த அரசன் சித்தவடவன் என்கிறது செய்தி. இவரது மகளான வானவன் மாதேவி என்பவர் தான் தஞ்சையை ஆண்ட சுந்தர சோழனின் மனைவி,ராஜராஜ சோழனின் தாயார். இன்றைக்கும் பாரியின் வம்சமாக கல்வெட்டு கூறும்

பாரிமகளிரின் பைந்தொடி முன்கை பிடித்தோர் வழி வரு வம்சத்தோர் பார்கவ குல சத்திரியர்கள் மட்டுமே. மேலும் “முத்தமிழ்க் கபிலன் மூரி வெண் தடக்கைப் பாரிதன் அடைக்கலப் பெண்ணை மலையர்க்கு உதவி” –எனத்தொடங்கும் இராசராச சோழன் கல்வெட்டும் கூறும் பாரி வம்சமாக அறியப்படுபவர்கள் பார்கவ குல சத்திரியர்கள் மட்டுமே.. சுந்தர சோழன் இறந்தவுடன் அவரோடு சேர்ந்து உடன்கட்டை ஏறியவர் பார்கவ குல மலையமானின் மகளான வானவன் மாதேவி. க்ஷத்ரியப்பெண்கள் மட்டுமே உடன் கட்டை ஏறுதல் வழக்கம்.

இன்றைக்கும் நத்தமான்,சுருதிமான்,மலையமான் பரம்பரையினர் பார்க்கவ குல க்ஷத்ரியர் என்று அழைக்கப்படுகின்றனர்.சோழனின் கிளைக்குடியாகவும் பார்க்கவ குலத்தார் வரலாற்றாளர்களால் கூறப்படுகின்றனர்.இவர்களை தஞ்சைக்கள்ளர் இனமாக அறிஞர்கள் கூறுகின்றனர், திருவண்ணாமலை,விழுப்புரம்,தஞ்சை, திருச்சி போன்ற இடங்களில் உள்ளோர் இன்னும் ஜாதி பார்கவகுலம்/உட்பிரிவு கள்ளர் மற்றும் பல்லவராயர் என்றே குறிப்பிட்டுள்ளனர்.ஆனால் பெரும்பாலும் இவர்கள் தனித்தே பார்கவ குல க்ஷத்ரியர் என இயங்குகின்றனர். சோழர்களில் சுந்தர சோழனுக்கும் இரண்டாம் ராஜராஜனுக்கும்(மலையமான் மகள் அவனிமுழுதுடையாள்)பெண் கொடுத்த இவர்கள்  மூவேந்தரோடும்,வேளிர்களோடு மண உறவு கொண்டுள்ளனர்.பார்கவ குலத்தார் வானவன்,சேரன்,மலையன் என்றும் குடிப்பெயருடைய மலையமான்களின் நேரடி வம்சத்தாராகவும் பாரி மற்றும் மூவேந்தரின் பெண்ணடி வாரிசாகவும் உள்ள குடும்பத்தினர்கள்.

காளியை குலதெய்வமாக கொண்ட போர் மறவர் குலமான இவர்கள் சோழர்களுக்கு அநேக வெற்றிகளைப்பெற்றுத்தந்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன.சோழனது படை பலமாக விளங்கிய போர்க்குடிகளில்  மலையமான் இனம் முதன்மையானது. மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன் தெய்வீகனின் சகோதரன் திருமுடிக்காரியின் மைந்தர் இருவருள் இவரும் ஒருவர். இவர் சோழனின் சேனாதிபதியாக பொறுப்பேற்றவர்.முள்ளூர் மலையை ஆண்டவர்.

சோழன் கிள்ளிவளவன் பகை மன்னர்களால் தோற்கடிக்கப்பட்டு இவருடைய முள்ளூர் மலையில் அடைக்கலம் புகுந்தார்.மலையமான் திருக்கண்ணன் பெரும்வீரன் என்பதால் பகைவரை போரிட்டு வென்று சோழ நாட்டை கிள்ளிவளவனுக்கே மீட்டுக்கொடுத்தார் என்ற செய்தி புறநானூற்றுப்பாடலில் காணப்படுகிறது.

மன்னர்காலத்திற்கு பின்னர் போர்க்குடியினர் அனைவரும் விவசாயத்தில் ஈடுபட்டனர் என்னும் காலமாற்றத்திற்கு ஏற்ப இவர்களும் விவசாய குடிகளானார்கள்.குறுநில மன்னர்கள், வேளிர்கள்,போர் மறவர்கள் ஆகிய இவ்வினத்தார் ஜமீன்களாகவும்,பண்ணையார்களாகவும் மாறினர்.
மலையமான் திருமுடிக்காரி,தெய்வீகன் என்ற தேர்வீகன், சோழியவேனாதி திருக்கண்ணன்,மலையமன்னர் நரசிங்க முனையரையர்,நத்தமன்னர் மெய்ப்பொருள் நாயனார்,சுருதிமன்னர் குலசேகரன்,மலையன்,தேர்வண் மலையன்,வேள் பாரி, கிளியூர் மலையமான் பெரியுடையானான இராஜராஜச் சேதிராயன்,கிளியூர் மலையமான் ஆகாரசூரனான இராஜகம்பீரச் சேதிராயன்,பாண்டியராய திரணி சுருதிமான்,குட்டன் வனராயன் திரணி சுருதிமான், நுணாங்குறிச்சி சுருதிமான் அணஞ்சா ஆனைவிடப்பாடி, ஊற்றத்தூருடைய சுருதிமான் சனனாதர் அரைய தேவனான வாண விச்சாதிர நாடாழ்வான். போன்ற எண்ணற்ற வேளிர்களையும், அரசர்களையும் கொண்ட அரச குடும்பமே பார்க்கவகுலம். வல்வில் ஓரியை போரில் கொன்றவர் மலையமான் திருமுடிக்காரி. ஓரி அதியமான் குலமாக கூறப்பட்டாலும் அதியமான்களும் மலையமான் பட்டத்துடனேயே ஆண்டுள்ளனர்.

அவர்களிடையேயான  போர் பங்காளிச்சண்டையே,(வல்வில் ஓரி வன்னிய குல சத்திரியர்)வன்னியர் என்ற பட்டம் சில ஜாதிகளில் காணப்படும் ஒன்று.அதில் பார்க்கவ குலத்தார் பிரம்ம வன்னியர் என்ற பிரிவினர்.(பிரம்மா=பிருகு=பார்கவர்) அரசர்களாகவும்,வேளிர்களாகவும் இருந்த காலத்தில் முனையரையர்,மலையமான்,கொங்கராயர்,சேதிராயன், மிலாடுடையார்,மலாடுடையார்,நத்தமான்,சுருதிமான்,உடையான், மலையமான்,சேதிய ராயன்,வன்னிய நாயகன்,பாண்டியராயர், கோவலராயர்,வாணகோவரையன்,சற்றுக்குடாதான்,காடவராயன்,(காடவர்களை ஆண்டவன்)பல்லவராயர்,அரைய தேவன்,நாடாழ்வான் போன்ற பட்டங்களுடன் ஆண்டு வந்தவர்கள்.

மலையமான்,நத்தமான்,சுருதிமான்,இம்மூவரும் அரசன் என்று பொருள் படும் உடையார் என்ற பொதுப்பட்டம் கொண்டவர்கள்.(சுருதிமான்)மூப்பனார் என்ற பட்டம் குல முதல்வர் (HEAD MAN)கத்திரியர்,கத்திக்காரர் என்ற படை பயிற்றுனர் என்ற அர்த்தத்தையும்,நயினார்,என்றபட்டம் சமண மதத்தைத்தழுவியவர்கள் அல்லது நாயன்மார் (மெய்ப்பொருள் மன்னர்)என்ற அர்த்தத்தையும் கொண்டது.உடையார் என்பதின் உட்பிரிவு பட்டங்களே மேற்காண்பவர்கள்.

(கன்னட,தெலுங்கு பேசும் உடையார்கள் என  உடையார் பட்டம் கொண்டு பலர் இருப்பினும்,பார்க்கவ குலத்தாருக்கு ஆதியிலிருந்தே  உடையார் பட்டம் மலைநாட்டு  அரசன் என்ற பொருளில் மலாடுடையார் என்ற பொருளில் வந்துள்ளது.மேற்கண்டோருக்கும் பார்கவ குலத்தாரோடு எத்தொடர்பும் கிடையாது.ஆனால்  வன்னிய குலத்திலும் பார்கவ குலத்திலும்  ஒரே பட்டம் கொண்ட குடும்பத்தார் சிலர் உள்ளனர் என்பதை விளக்குகிறது 18ம் நூற்றாண்டைச்சேர்ந்த கிருஷ்ணாபுரம் செப்பேடு.

சுருதிமான் மூப்பனார்கள் கத்திக்காரர்கள் என்ற மெய்க்காப்பாளர் பட்டம் பெற்றவர்கள். வட தமிழகத்தில் மன்னர் ஆட்சி முடிவுற்ற வேளையில் ஊர்க்காவலையும்,போரையும்தவிர வேறு தொழில் அறியாத காரணத்தால்,அப்போது மன்னராட்சி நடை பெற்ற திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு  பார்கவ குல சுருதிமான்களான உடையார் குல மூப்பனார்கள் கத்திக்கார படைவீரர்களாக(கத்திரியர்கள்) அகமுடையாராக பணி புரிய சென்றனர்.அவ்வாறு சென்ற பார்கவ குல சுருதிமான்களின் வாரிசுகள் இன்றைக்கும் திருநெல்வேலி,கன்னியாகுமரி,ராம்நாடு,மதுரை போன்ற பகுதிகளில் வாழ்கின்றனர்.

அவர்களை இன்றைக்கும் அவ்விடங்களில் கத்திக்கார மூப்பனார்கள் என்று பட்டமிட்டு அழைக்கப்படுவதைக்காணலாம்.மூப்பனார்கள் பதினாறாம் நூற்றாண்டு வரை சோழ நாட்டின் அகமுடைய மறவர்களாக,தளபதிகளாக,குறுநில மன்னர்களாக இருந்துள்ளார்கள் என்பதை சுருதிமான்களைப்பற்றிய கல்வெட்டுக்கள் மூலம் அறியலாம்.அரைய தேவன்,நாடாழ்வான் என்ற பட்டங்களும் மூப்பனார்களுக்கு(சுருதிமான்) இருந்துள்ளது.

மலையமான் சேதிராயன் வன்னியநாயகன் என்பவர்களுக்கு படை முதல்வராக ஆதியாம் கத்திக்கார மெய்க்காப்பாளர்கள் என்று இருந்துள்ளனர்.வன்னிய பட்டம் கொண்ட பள்ளி(குறும்பர்கள்) இன வீரர்களை படைக்கு பயன்படுத்திய மலையமான் உடையான்களின் பட்டம் வன்னிய நாயகன் . பாளையக்காரர்,,பாளையத்தார்,(பாளையங்களின் மன்னர்கள்) காவல்காரர்(ஊர்க்காவல் பணி) பண்டாரியார்(கருவூல அதிகாரி)உடையார்(அரசர்),மலையமன்னர்,நத்தமன்னர்,சீமை நாட்டார்(மூப்பனார் குலத்தின் ஆதியாம் முதல்வர்)நயினார் (சமண மதம் தழுவியவர்கள்) என்று பல வகையான அதிகார பட்டங்களைக்கொண்டு ஆட்சி செய்தவர்கள் பார்க்கவ குல க்ஷத்திரியர்கள்.

பாடம் கற்கும் குல குருவின் பெயரை கோத்திரமாக கூறிக்கொள்ளும் மரபும் சத்திரியரிடையே காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக வன்னியர்களான பல்லவர்கள் தம்மை பரத்வாஜ கோத்திரமாக,சம்பு கோத்திரமாக கூறிக்கொண்டனர். அதே போல பிருகு வம்ச பார்க்கவராகிய சுக்கிராச்சார்யரை குல குருவாக கொண்ட(மாபலி)சேர மன்னரின் வழிவந்த மலையமான் குலத்தவரான இவர்களும் சத்திரிய மரபுப்படி பார்க்கவ கோத்திரமாக கூறிக்கொள்கின்றனர்.பிருகு வம்சம் பார்கவ வம்சம் எனப்படும்,பிருகு பிரம்மாவின் புத்திரர்,எனவே பார்கவ முனிவர்களின் சீடர்களான அரசர்களுக்கே பிரம்ம வன்னியர் என்ற அடையாளம் உண்டு.பிருகுவின் சகோதரனே அக்னி தேவன்.(அக்னி வன்னியர்=வன்னிய குல சத்ரியர்) சேரனின் நேரடி வாரிசாகவும்,சோழர்களின் கிளைக்குடியாகவும் உள்ள திருமுடிக்காரி மலையமான்,தெய்வீகன்,சோழிய ஏனாதி திருக்கண்ணன் என்ற மலையர் குல அரச குடும்பமாகிய இவர்களுக்கு இரண்டாயிரம் வருடத்திற்கு முற்பட்ட பாரம்பரியம் உண்டு.புறநானூற்றில் இவர் மரபோர்க்கு அநேக பாடல்களும் உண்டு. இவர்கள் முதுகுடி அரச மரபினர்  என உணர்த்தும் விதமாக  காரியின் மக்களை கிள்ளிவளவனிடமிருந்து காக்க புலவர் பாடுகையில் சோழனின் குடிப்பெருமைகளை கூறி இவர்களும் உன்போன்றே பெருமை கொண்ட தமது பகுத்து உண்ணும் தண் நிழல் வாழ்நர் குடி (வேளிர் குல அரச குடி) எனக்கூறும் புறநானூற்றுபாடல்.

இரண்டாயிர வருடத்திற்கும் மேற்பட்ட பாரம்பரியம் கொண்ட இவர்கள் பதினைந்தாம் நூற்றாண்டிலேயே வடமொழி ஆதிக்கத்தால் அரச குடி வீரர்கள் கத்திரியர் என்ற தமிழ் சொல்லின் அர்த்தப்படும்படி பார்கவ குல  சத்ரியர் என அறிவித்துள்ளனர்.பாரி மற்றும் திருமுடிக்காரியின் குலமான இவர்கள்  தற்போதும் சில லட்சம் பேர்களே உள்ளனர்.இவர்களை ஜாதி அமைப்பு என்பதைக்காட்டிலும் தமிழ் நாட்டில் தற்போதும் உள்ள ஒரு பார்கவ கோத்திர, வேளிர் க்ஷத்ரிய குலமாக கூறுவதே தகுதியானது.

This entry was posted in சத்திரியர்கள் and tagged , . Bookmark the permalink.

One Response to பார்கவ குல சத்திரியர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *