ஜல்லிக்கட்டு

ஜல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக்
குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும்
வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது.

ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை
அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது. கொல்லக் கூடிய காளையைத்
தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்றும் சிறப்பித்துக்
கூறப்படுகிறது. பண்டைக்காலத்தில் ஐந்திணை நிலங்களுள் ஒன்றாகிய முல்லை நிலத்தின்
ஆயர் மக்களிடம் இவ்வேறு தழுவுதல் (மலைபடுகடாம் 330-335, முதல் ஏழு
முல்லைக்கலிப் பாடல்களில் ஆறாம் பாடலைத் தவிர மற்ற பாடல்கள்) இடம் பெற்றது. ஏறு
தழுவலுக்கும், குரவைக் கூத்திற்கும்
தொடர்பிருந்தது (சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை: 17-18). குரவைக் கூத்து ஏறு
தழுவலுக்குரிய நாளுக்கு முதல் நாள் மாலையிலாவது, ஏறு தழுவும் நாளின்
மாலையிலாவது ஊர் பொதுமன்றே நிகழும். முதல் நாளாயின் தம் காதலரை ஏறு
தழுவுவதற்குத் துண்டும் பாட்டுகளையும், ஏறுதழுவிய நாளாயின் தம் காதலர்
வெற்றியைக் கொண்டாடும் பாட்டுகளையும் மகளிர் பாடுவர். ஏறுதழுவுதல் மண
வினையுடன் தொடர்புடையதாய் அமைந்திருந்தது. காளையை அடக்கிய மணமாகா இளைஞர்
பெண்ணினைப் பரிசாகப் பெறுவதுண்டு. இன்று ஏறு தழுவுதல் என்ற பெயர் வழக்கில்
இல்லை. இருப்பினும் ஏறுதழுவலின் எச்சமாக இன்றைய ஜல்லிக்கட்டு விளங்குகிறது.

ஏறு தழுவதற்கும் ஜல்லிக்கட்டுக்கும் சில வேறுபாடுகளே உள்ளன. முல்லை நிலத்து
மக்களாகிய ஆயரிடம் மட்டுமே ஏறுதழுவுதல் இடம் பெற்றது. தற்போது ஜல்லிக்கட்டில்
ஆயர் மட்டுமின்றி பல திறத்தவரும் பங்கேற்கிறார்கள். ஏறு தழுவுதலில் உள்ளது
போன்றே ஜல்லிக்கட்டு கள்ளர், மறவரிடையே பெண் கொடுப்பதற்கான தேர்வு களனாக
உள்ளது. இருப்பினும் ஜல்லிக்கட்டில் வென்றவர் பண முடிப்பினைப் பரிசாகப் பெறுதல்
பெரும்பான்மையாக உள்ளது. ஜல்லிக்கட்டு தைப்பொங்கலுக்கு மறுநாள்
மாட்டுப்பொங்கல் நாளன்று விழாப் போல் கொண்டாடப்படுகிறது. ஏறு தழுவுதல் விழா
தெய்வ நம்பிக்கையுடன் தொடர்புடையதாக இருக்கவில்லை. ஆனால் ஜல்லிக்கட்டு கிராமிய
தேவதைகளின் வழிப்பாட்டு நம்பிக்கையுடன் தொடர்புடையதாகத் திகழ்கிறது. அம்மை,
வைசூரி போன்ற கொடிய நோய்கள் பரவிய காலத்திலும், மழையில்லா வறட்சி
காலங்களிலும், பிள்ளை வரம் கேட்கும் நிலையிலும் வேண்டுதல் நடைபெறும்.
இக்குறைகள் நீக்கப்பட்டால் பொங்கல் நாளன்று ஜல்லிக்கட்டுகிறோம் என்பதே
வேண்டுகோளாய் அமைகிறது.

ஸ்பெயின், போர்ச்சுக்கல், மெக்ஸிகோ நாடுகளில் காளைப் போர் முக்கியமான
தேசியப் பொழுதுப் போக்கு விளையாட்டாக இன்றும் நடைபெறுகிறது. காளைகளை
அரங்கத்திற்குள் விரட்டி, ஆத்திரமூட்டி சண்டையிட்டுக் கொல்வதே இக்காளைப்
போரின் நோக்கம். இம்மேனாட்டுக் காளைப் போரும் ஜல்லிக்கட்டும் ஒன்று போலத்
தோன்றினாலும், இரண்டும் முற்றிலும் வேறுபட்டவை ஆகும்.

thanks : http://thaainilam.com/yarl/?p=994

..

This entry was posted in மறவர் and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *