சோழர்கால கல்வெட்டில் எச்சரிக்கை.

திருவண்ணாமலை அருகே கண்டெடுக்கப்பட்ட சோழர்கால கல்வெட்டில் எச்சரிக்கை.
ஆயிரம் ஆண்டு பழமையான சோழர் கால கல்வெட்டுகள் மற்றும் நடுகல், திருவண்ணாமலை அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில், “ஏரியை அழிப்பவர்கள் நரகத்துக்கு போவார்கள்” என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பெரியகோளாப்பாடி, சின்னகோளாப்பாடி, வாசுதேவன்பட்டு, படி அக்ரகாரம், ஓரந்தவாடி, நரசிங்கநல்லூர், சொ.நாச்சிப்பட்டு, கீழ்சிறுபாக்கம் கிராமங்களில் நடந்த ஆய்வில் சுவையான வரலாற்று பின்னணி கொண்ட சோழர்கால கல்வெட்டுகள் மற்றும் நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை.
கீழ்சிறுபாக்கம் கிராம ஏரிக்கரையில் கி.பி. 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டது. அதில் தமிழ் வட்டெழுத்துகள் இடம்பெற்றுள்ளன. ஏரியை உருவாக்கிய ஆவணமாக இவை அமைக்கப்பட்டுள்ளது. “ஏரியை அழிக்கிறவர்கள் ஏழாம் நரகத்துக்கும் கீழான நரகத்துக்கும் போவார்கள். ஏரியை காப்பவர்களின் பாதங்கள் எனது தலையின் மேலிருக்கும்” என கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீர்நிலைகளை பாதுகாப்பதில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் கொண்டிருந்த அக்கறைக்கு சான்றாக இது அமைந்திருக்கிறது. இந்த கல்வெட்டுகளை கருப்பு கச்சக்காரன், ஊமை வேடியப்பன் என்ற சிறு தெய்வங்களாக அந்த பகுதி மக்கள் வழிபடுகின்றனர்.
சின்னகோளாப்பாடி பச்சையாத்தாள் கோயில் பாறையில் கி.பி.16ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில், “கோயில் நிலத்தை அபகரிக்கிறவர்கள் கங்கைக்கரையில் காராம்பசுவை கொன்ற பாவத்துக்கு சமம்” என குறிப்பிட்டுள்ளனர். பெரியகோளாப்பாடி கிராமத்தில் 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கிடைத்திருக்கிறது.
இதுகுறித்து கல்வெட்டு ஆய்வாளர்கள் டாக்டர் கே.கருப்பையா, ஆர்.சேகர் கூறுகையில், “தமிழ் வட்டெழுத்து வடிவில் கிடைத்துள்ள இந்த கல்வெட்டுகளில் உள்ள சொல்லாட்சி, இதுவரை வேறு எங்கும் கிடைக்காதது. தமிழர்களின் வீரம், தானம், நீர்நிலை பாதுகாப்பு போன்றவற்றை உணர இவை முக்கியமானவை. செங்கம், தண்டராம்பட்டு போன்ற பகுதியில் அரியவகை கல்வெட்டுகள் இருக்கின்றன. அவற்றை தொடர்ந்து ஆய்வு செய்ய திட்டமிட்டிருக்கிறோம்” என்றனர்.
This entry was posted in சோழன் and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *