சிங்களவர்களை வென்ற பாண்டிய மன்னன்!

மெக்கன்ஸி சேகரித்த ஒரு வரலாற்று ஆவணம்

மெக்கன்ஸி காலத்திற்கு 200 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த வரலாறு (கி.பி.1594-1572-ல் நடந்தவை) ஒரு ஏட்டில் எழுதப்பட்டிருந்தது. அந்த விவரங்களை மெக்கன்ஸி தருகிறார்:

அந்த நாளில் பரமக்குடியில் ஒரு பாளையக் காரர் இருந்தார். அவர் பெயர் தும்பிச்சி நாயக்கர். பரமக்குடி பாளையத்திற்கு எதிராக வந்த பல யுத்தங்களில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார்.

இதற்காக பரமக்குடியில் ஒரு வலுவான கோட்டையை அவர் கட்டிக் கொண்டார். மானாமதுரையில் இருந்த பாண்டிய அரசருக்கு இந்தச் செய்தி சென்றது. அவர் சீற்றம் அடைந்தார்.

தும்பிச்சி நாயக்கரை அடக்குவதற்கு தனது சிறந்த சேனைத் தலைவர்களை அனுப்பினார். தும்பிச்சி நாயக்கர் அவர்களுடன் சண்டையிட் டார்! பாண்டியருக்கு நிறைய சேதங்களை உண்டு பண்ணிவிட்டு தனது கோட்டைக்குள் புகுந்து கொண்டார்.

பாண்டிய அரசருக்கு இந்தச் செய்தி வந்ததும் அவர் மேலும் கோபம் அடைந்தார். பரமக்குடி பாளையத்திற்கு ஒரு பெரும் சேனையை அனுப்பினார். அந்தப் படையினர் பரமக்குடி கோட்டையைக் கைப்பற்றி, தும்பிச்சி நாயக்கரையும் கொன்று, அவரது தலையைக் கொய்து பாண்டிய மன்னர் முன்னால் சமர்ப்பித் தார்கள்.

அந்தச் சேனைத் தலைவரை பிரதான சேனைத் தலைவராக உயர்த்தினார் மன்னர். சேனாதிபதிக்கு மிக விலையுயர்ந்த ஆபரணங் களையும் பரிசாக அளித்தார்.

பிறகு பரமக்குடி கோட்டையை இடிக்க அரசர் உத்தரவு கொடுத்தார். அதேசமயம் தும்பிச்சி நாயக்கரது இரு மனைவிகளையும் நல்ல முறையில் நடத்தி, அவர்கள் வாழ்வதற்காக பரமக்குடி கிராமத்தையும் பம்பூர் கிராமத்தையும் மான்யமாகக் கொடுத்தார்.

பரமக்குடி கோட்டையை உடைத்துச் சின்னா பின்னம் செய்ததையும், தும்பிச்சி நாயக்கரின் தலையைக் கொய்ததையும் கேள்விப்பட்டு இலங்கையில் உள்ள கண்டி அரசர் வெகுண்டார். (இவரும் தும்பிச்சி நாயக்கரும் நட்பு கொண்டி ருந்தனர்.) இப்படிச் செய்துவிட்டாரே என்று பாண்டிய அரசரைப் பற்றிக் கேவலமாகப் பேசினார் கண்டி அரசர். அவர் பேசியது பாண்டிய அரசருக்குத் தெரிந்தது.

பாண்டியர் வெகுண்டெழுந்தார். கண்டிமீது படையெடுக்கத் தீர்மானித்தார். தனது 55 பாளையக்காரர்களையும் திரட்டினார். அது ஒரு பெரும் சேனைத் திரளாக மாறியது.

புறப்படும்போது “ஸ்தோம சுத்தி’ செய்தார் பாண்டிய மன்னர். (அந்தச் சடங்கு என்னவென்று தெரியவில்லை.) பிறகு சேனைகளைக் கடற்கரை யில் கொண்டுபோய் நிறுத்தினார்.

அவரது சேனை தர்ப்பசயனம் முதல் நவபாஷானம் வரை நீண்டிருந்தது. பின்னர் மன்னார்துறையில் உள்ள படகுகளை நவபாஷானத்திற்குக் கொண்டு வந்தார். பாண்டிய அரசரே முன்னின்று சேனை கள் அனைத்தையும் படகுகளில் ஏற்றித் தாமும் புறப்பட்டார்.

சேனைகள் கடலைத் தாண்டி கண்டி கடற்கரையில் போய் இறங்கின.

அங்கிருந்து தமது சேனைத் தலைவனை கண்டி மன்னனிடம் தூதுவ ராக அனுப்பினார். கப்பம் கொடுக்கும் படியும் இல்லாவிடில் போர் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

கண்டி அரசர் கப்பம் கொடுக்க மறுத்ததோடு பாண்டிய சேனையை எதிர்க்கத் துணிந்தார்.

உத்தளம் என்ற இடத்தில் கண்டி சேனைகள் திரண்டு இறங்கின. பாண்டியரின் ஒரு பகுதி சேனை 20,000 பேர்களுடன் சின்ன கேசவப்பா தலைமையில் கண்டி சேனைகளைச் சந்திக்கப் புறப்பட்டன.

யுத்தம் தொடங்கியது.

கண்டி சேனையால் பாண்டியசேனையின் பலத்தைச் சமாளிக்க முடியவில்லை. சேதங்க ளோடு படுதோல்வி அடைந்தது. கண்டி சேனாதி பதி காயம் அடைந்தார். அதைக் கண்டு சேனை கள் யாவும் சிதறி ஓடின.

உத்தளம் கோட்டை கைப்பற்றப்பட்டது. பாண்டிய அரசர் தமது சேனாதிபதியை தலைநகர் கண்டியை நோக்கிச் செல்லப் பணித்தார்.

சிங்கள அரசர் விடவில்லை. 4,000 பேர் அடங்கிய சேனையோடு பாண்டிய சேனையை எதிர்த்தார். சண்டையில் அவரது நான்கு மந்திரி களும் எட்டு திசைநாயகர்களும் பங்கு கொண்டனர்.

ஏற்கெனவே கேசவப்பா நாயக்கர் தலைமை யில்தான் பாண்டிய சேனை பரமக்குடியில் தும்பிச்சி நாயக்கரை வென்று கொன்றது.

அதே கேசவப்பா தலைமையில் இங்கும் பெரிய யுத்தம் நடந்தது. பீரங்கிகளின் குண்டு களும் இதர யுத்த ஓலங்களும் எங்கும் எழுந்தன. பாண்டிய அரசரே தமது சேனாதிபதியின் உதவிக்காக அவசரமாகப் புறப்பட்டுச் சென்றார்.

நடந்த மாபெரும் சண்டையில் பாண்டிய சேனைகள் வெற்றி பெற்றன. கண்டி மந்திரிகளும் திசை நாயகர்களும் பிடிக்கப்பட்டனர். பிழைத் தவர்களையெல்லாம் பாண்டிய அரசர் மரியாதையோடு நடத்தினார். அவர்களைத் தனித்தனிக் கூடாரங்களில் அமர்த்தி, அவர்கள் சேவைக்குரிய பணியாட்களையும் இருக்கச் செய்தார்.

கண்டி மந்திரிகளும் சேனாதிபதியும் ஆலோசனை செய்து பாண்டிய அரசரிடம் மன்னிப்பு கேட்டார்கள்.

பாண்டிய அரசர் யுத்த களத்திலிருந்து இறந்தவர்களையும் காயம் அடைந்தவர்களையும் எடுத்துச் செல்ல அவர்களை அனுமதித்தார்.

சிங்களச் சேனைகள் 2,000 பேர் கொல்லப் பட்டிருந்தார்கள். 1,800 பேர் காயம் அடைந் திருந்தார்கள். பாண்டிய சேனையில் 1000 பேர் இறந்திருந்தார்கள். 18 சர்தார்களும் இறந்திருந் தார்கள்.

பாண்டியப் படையில் உள்ள பாளையக்காரர் களின் குடும்பங்களில் பட்டத்துக்கு வரவேண் டிய பல இளவரசர்களும் இறந்திருந்தார்கள்.

பாண்டிய அரசர் வெற்றி பெற்ற செய்தி எங்கும் பரவியது.

அப்போது கண்டியில் உள்ள பொதுமக்கள் எல்லாரும் திரண்டு பாண்டிய அரசரிடம் முறையிட்டனர். கண்டி அரசரின் உறவினர்கள் எல்லாம் சண்டையில் இறந்து விட்டார்கள். எனவே பாண்டிய அரசரையே கண்டியின் அரச ராய் இருக்கும்படி பொதுமக்கள் வேண்டிக் கொண்டார்கள். பாண்டிய அரசரும் அதை ஏற்றுக்கொண்டு தலைநகர் கண்டிக்கு கோலாகல மாகச் சென்றார். நகரம் பெரிய வரவேற்பு அளித்தது.

சிங்கள அரசரின் சிங்காதனத்தில் பாண்டிய அரசர் அமர்ந்தார். அங்கு வந்துள்ள பிரதானிகளையும் உத்தியோகஸ்தர்களையும் அந்தந்த பதவிகளில் இருந்து கொண்டு நாட்டைக் கவனிக்கும்படி சொன்னார்.

பிறகு அரசர் அங்குள்ள ராமசுவாமி, கிருஷ்ணசுவாமி கோவில்களுக்குச் சென்றார். சுவாமிக்கு வஸ்திரங்களையும் ஆபரணங்களையும் அளித்தார்.

பின் கதிர்காமத்துக்குச் சென்றார். அங்குள்ள கோவிலிலும் வழிபட்டார்.

இதற்கிடையே பாண்டிய அரசர் தமது உறவுக்காரர்களை எல்லாம் கண்டியின் தலைநகருக்கு வரவழைத்தார். அதில் தனது மைத்துனர் விஜயகோபாலரைத் தேர்ந்தெடுத்து, அவரை சிங்களத்தின் அரசராக முடிசூட்டினார்.

அப்போது ஊர்ப் பிரமுகர்கள் யாவரும் பாண்டிய அரசரிடம் சென்று ஒரு ஆணை பிறப்பிக்க வேண்டிக் கொண்டார்கள்.

அதன்படி அவர்களது மதமான புத்த மதத்தில் யாரும் தலையிடக் கூடாது. அவர்களது ஆசாரங்கள், பழக்க வழக்கங்களை யாரும் எந்தவிதத்திலும் பாதித்துவிடக் கூடாது. இதுதான் அவர்களது வேண்டுகோள்!

பாண்டிய அரசர் அதற்குச் சம்மதித்தார். ஆணையும் இட்டு உதவினார்.

பிறகு புது அரசரின் பாதுகாப்புக்கு வேண்டி, பாண்டிய அரசர் 6,000 பாண்டிய வீரர்களை அங்கே நிறுத்தி வைத்தார். தவிர அறுபது பாண்டியக் குடும்பங்களைக் கொண்டு வந்து அரண்மனை அருகே குடியிருக்க ஏற்பாடு செய்தார். இவர்கள் எல்லாரையும் தங்கள் குழந்தைகளோடு வரும்படி ஏற்பாடு செய்தார். இதற்கு ஒரு வருட அவகாசம் கொடுத்தார்.

எல்லா விஷயங்களையும் முடித்துவிட்டு பாண்டிய அரசர் தமது நாட்டுக்கு விமரிசையாகத் திரும்பினார். மன்னார் கடற் கரையை அடைந்தார். சேனைகளை கடலைக் கடந்து தேவிப் பட்டினம் கடற்கரையை அடையும்படி உத்தரவு கொடுத்தார்.

ஆனால் அரசரும் பிரதானிகளும் சேனைத் தலைவர்களும் பாளையக்காரர்களும் தேவிப்பட்டினம் போகாமல் ராமேஸ் வரத்திற்குச் சென்றார்கள். சேதுவில் எல்லாரும் புனித ஸ்நானம் செய்தார்கள்.

ராமேஸ்வரம் கோவிலுக்கு பாண்டிய அரசர் ஆடை ஆபரணங்களோடு பல கிராமங்களையும் வழங்கினார்.

பாண்டிய அரசர் தமது படைகளோடு மலையாள ராஜ்ஜியம், கொச்சி முதலிய இடங் களுக்குச் சென்று கடைசியில் கோழிக்கோடு சென்றார். அந்த மலையாள மன்னர்களை பாண்டிய நாட்டிற்குக் கப்பம் கொடுக்கும் படி செய்தார்.

பின்னர் கோயம்புத்தூர் சென்று மைசூர் அரசருடன் தமது நாட்டு எல்லைகள் குறித்து ஒரு உடன்படிக்கை செய்து கொண்டார். (கோயம்புத்தூர் மைசூர் ஆட்சியில் இருந்தது).

மேற்குத் தொடர்ச்சி மலையின் கீழே பாலக்காட்டுக் கணவாய் பற்றி உடன்படிக்கையில் குறிப்பிட்டு, பதினெட்டு எல்லைக் கற்களையும் ஆங்காங்கே பாண்டிய அரசர் நாட்டினார்.

பின்னர் மதுரைக்குச் சென்று மீனாட்சி சுந்தரேசுவரரை வணங்கி னார்.

மதுரையும், திருச்சிராப்பள்ளி சமஸ்தானங்களும் (ராஜ்ஜியங்கள்) விழும் வரை கண்டியிலிருந்தும் மலையாளத்திலிருந்தும் கப்பப் பணங்கள் (திரைப்பணம்) பாண்டிய நாட்டுக்கு வந்துகொண்டிருந்தன.

பிறகு சமஸ்தானங்கள் விழுந்த வுடன் பாண்டிய அரசர் குடும்பத் தினருக்கு வள்ளிக்குச்சி (சிவகங்கை சீமையில் உள்ளது) என்னும் ஊரில் ஒரு அரண்மனை கொடுக்கப் பட்டது.

இதை சிவகங்கை, ராமநாதபுரம் தலைவர்கள் கொடுத்தார்கள்.

நன்றி:  நக்கீரன்

…..

This entry was posted in பாண்டியன் and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *