ஏன் பாளையக்காரர் தோற்றனர்?

சிவகங்கைச்சீமை வரலாறு பற்றி என்னுடைய பழைய குறிப்புகளைத் தோண்டிக்கொண்டிருக்கும்போது சில விஷயங்கள் தென்பட்டன. அவற்றைப் பார்த்தபோது ரொம்பவும் வியப்பாக இருந்தது.

18-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில்தான் பிரிட்டீஷ் கிழக்கிந்தியக் கம்பெனி(கும்பினி) தமிழ்நாட்டில் தன்னுடைய போர் நடவடிக்கைகளை அதிகரித்திருக்கிறது. அப்போதுதான் பாளையக்காரர்களை அடக்கும் போர்கள் ஆரம்பித்தன.

அப்போது ஆர்க்காட்டு நவாபின் ஆட்சி நடந்தது. அதெல்லாம் பேரளவுக்குத்தான் ஆரம்பத்தில் இருந்தது. ஆர்க்காட்டு அரசாட்சிப் போட்டி ரொம்பவும் பலமாக நடந்துவந்தது.

எழுபத்திரண்டு பாளையங்கள் மதுரைநாட்டில் மட்டுமே இருந்தன. இவைபோக சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய அரசுகளும் இருந்தன. ராமநாதபுரம் அரசு இருபதினாயிரம் ஆட்கள் கொண்ட படையை விரைவாகத் திரட்டும் அளவுக்கு இருந்தது. தேவைப்பட்டால் இன்னும் அதிக எண்ணிக்கையைச் சேர்க்கமுடிந்தது. சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய இரண்டும் சேர்ந்திருந்த காலத்தில் கிழவன் சேதுபதி ஆட்சியில் ஆறே மணி நேரத்தில் இருபதினாயிரம் மறவர்களைத் திரட்ட முடிந்திருக்கிறது. ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களில் சிலரும் புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களில் சிலரும் டச்சுக்காரர்கள் முதலியோரை வைத்து மேற்கத்திய நாட்டுப் படைகளின் கவாத்து முறைகளிலும் போர் முறைகளிலும் ஆயுதங்கள் பயன்படுத்துவதிலும் பயிற்சிகொடுக்கப் பட்டிருந்தன.

அவர்களிடம் Standing Army எனப்படும் நிலைப்படை இருந்தது. சில தமிழ்ப்படங்களில் காட்டப்படுவதுபோல ‘வீரவேல், வெற்றிவேல்’ என்று கத்திக்கொண்டு வேல்க்கம்பு அரிவாளுடன் எப்போதும் ஓடவில்லை. அவர்களிடம் தக்க ஆயுதங்கள் இருந்தன. அவ்வப்போது தேவைக்கேற்ப ஆங்காங்கு மக்களையும் திரட்டிக்கொண்டு போரில் அவர்களையும் ஈடுபடுத்தினர்.

மற்றபடிக்கு அவர்களிடமும் பீரங்கிகள், துப்பாக்கிகள் போன்றவை இருந்தன. அவற்றை வைத்தும் போரிட்டனர. மொத்தம் ஆயிரக்கணக்கையும் தாண்டி லட்சக்கணக்கில் பாளையப்பட்டுக்கள், அரசுகள் முதலியவற்றிடம் போர்வீரர்கள் இருந்திருக்கின்றனர்.

மிலிட்டரி ஆர்க்கைவ்ஸிருந்து திரட்டிய விபரப்படி 1793-ஆம் ஆண்டு கும்பினியாரின் மெட்ராஸ் படையில் பத்தாயிரம் வெள்ளைக் காரர்களும் முப்பதாயிரம் இந்தியர்களும் இருந்தனர். அதன்பின்னர் பாளையக்காரர் புரட்சி வந்தபோது 1798-இல் பதினோராயிரத்து முன்னூறு வெள்ளையர், முப்பத்தாறாயிரத்து ஐந்நூறு இந்தியர்களாகக் கூட்டினர்.

மாவீரன் பூலித்தேவன (1715 – 1767) நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரராவார். இந்திய விடுதலை வரலாற்றில் `வெள்ளையனே வெளியேறு’
என்று முதன் முதலாக 1755 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார்.

அப்போதுதான் நெற்கட்டான் செவல் முதல் போர் நடந்தது. அது 1767 -இல் முடிந்தது. ஆனால் மருது சேர்வைக்காரர்கள் கூட்டணி தொடர்ந்து போரிட்டது. ஆகவே கும்பினி தன்னுடைய படைகளை இன்னும் பலப்படுத்தியது. 1801-இல் புரட்சி ஒடுங்கியது.

1805-ஆம் பதின்மூன்றாயிரம் வெள்ளையர்கள் அறுபத்தொன்பதாயிரம் இந்தியர்கள் கொண்ட படை கும்பினியில் இருந்தது.

இவர்கள் எல்லாரையும் சேர்த்தாலும்கூட ஒரு லட்சத்தைத் தொடவில்லை. ஆனால் லட்சக்கணக்கான எண்ணிக்கை கொண்ட படைகளைத் திரட்டக்கூடிய பாளையக்காரர் தோற்றனர்.

This entry was posted in பூலித்தேவன் and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *