அன்றொருநாள்: அக்டோபர் 12:II

II. தந்தையின்பணி: நான் அப்பாவிடம் ஆயிரம் கேள்வி கேட்பேன். ஆங்கிலேயனின் போலீஸ் துறை தான் இந்த Criminal Tribes Act 1871 ஐ நடத்தியவர்கள்; முன்பின் சொல்லாமால் அட்டெண்டென்ஸ் எடுத்து, கைது செய்பவர்கள். கொடுமைக்காரர்கள் எனப்பட்டவர்கள். அதே ஆங்கிலேய நிர்வாஹம் கள்ளர் புனர்வாழ்வு (Kallar Reclamation) என்ற அருமையான திட்டம் ஒன்றை அதே போலீஸ் துறை மூலம், ஆனால் கூட்டுறவுத்துறை அதிகாரிகளின் வழிமுறையில் சிறப்பாக நடத்தி வந்தது. அப்பா ஒரு ஜூனியர் கூட்டுறவுத்துறை அதிகாரி.

வீட்டு முகப்பு அறை தான் ஆஃபீஸ். ஆனால், அப்பா தினந்தோறும் முகாம் போய் விடுவார். இரவு பத்து மணிக்கு தான் ஆஃபீஸ். ஒரு தெலுங்கு மாமா கணக்கு எழுத வருவார். அம்மா தான் புதிய இரும்பு கலப்பை, விதை தானியம், மருந்துகள் எல்லாம் கொடுப்பார். மாலை ரேடியோவில் விவசாய அறிவுரை கேட்கக்கூட்டம்.  போலீஸ் கெடுபிடியை தாண்டி, வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட கள்ளர் பிரான்கள் கடனை அடைக்க நடு நிசியில் வருவார்கள். அவர்களுக்கு அப்பாவின் ரூல் தடியிடம் பயம். அவருக்கு இருந்த அதிகார பலம், வரவு செலவுக்கு அனுமதிக்கப்பட்டது எல்லாம், இன்று அந்தத் துறைத்தலைவருக்கே கிடையாது.

லேபர் கூட்டுறவு சொசைட்டி, விற்பனை கூட்டுறவு சொசைட்டி, லேவாதேவி கூட்டுறவு சொசைட்டி, விவசாய கூட்டுறவு சொசைட்டி, சேமிப்பு கூட்டுறவு சொசைட்டி. எல்லாம் லாபத்தில். அங்கத்தினர்கள் எல்லாம் ஜெயிலுக்கு போய் வரும் பிரமலை கள்ளர்கள். அப்பா சர்வாதிகாரி. கட்டுப்படுவார்கள். கோடாங்கி தான் சூத்ரதாரி. டவாலி போட்டுக்கொள்ளாத டவாலி மாயாண்டியும், பெரியாண்டியும் குடும்ப நண்பர்கள். எனக்கு ஒரு பாடி கார்டு உண்டு. ‘…அவர் பெயர் ரவணப்பன்; ஹெட் கான்ஸ்டபிள்; வேங்கையச்சுட்ட வீரன்; எங்கள் ஹீரோ. எனக்கு நிழல் என்ற பணி. அவருடன் உடன்படிக்கை செய்து கொண்டு, அவரது சைக்கிளில் டபிள்ஸ்! அவர் கண்ணில் மண் தூவி விட்டு, அருணா ஆசஃப் அலியையும், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களையும், பார்த்து விட்டு வந்தேன். நான் காங்கிரஸ்; ஃபார்வேட் ப்ளாக் பக்கம் சாய்வு. அப்போது தான் அப்பா கடைசியாக அடித்தது…’.

இதனுடையசெய்தி: ஆங்கிலேய நிர்வாஹம் ஸர் வில்லியம் ஸ்லீமென் மேற்பார்வையில் வட இந்தியாவில் ‘தக்ஸ்’ (Thugs) என்ற கொள்ளையர் கூட்டத்தை அடக்கியதும், புனருத்தாரணம் செய்ததும் வரலாறு.

அதே மாதிரி, 1947 வரை ஆங்கிலே அரசு செய்த ஆக்கப்பூர்வாமான பணிகள் பிரமலைக்கள்ளர்களுக்கு உதவியது போல, பிற்காலம், அரசியல் ஆதாயத்திற்காக எல்லா கட்சிகளும் தீட்டிய தன்னலத்திட்டங்கள் உதவவில்லை என்று நான் கருதுகிறேன். 1960களில், இந்த கள்ளர் புனர்வாழ்வு திட்டத்தைத் தணிக்கை செய்யசென்றிருந்தேன். என்று அது போலீஸ் + கூட்டுறவு துறைகளிலிருந்து தாசில்தார்களிடம் வந்ததோ அன்றே அரோஹரா. ஜனாப் யாகூப்கான், பெரியாண்டி, மாயாண்டி, ரவணப்பன் ஆகியோரை அவரவர் இடங்களில் போய் சந்தித்தேன். அவர்களின் வாழ்க்கைத்தரம் உயரவில்லை என்பது கண்கூடு. விஜாரித்ததில், 1947க்கு பிறகு அவர்களுக்கு எல்லாமே சுரத்துக்குறைந்துவிட்டது தெரியவந்ததது. இன்று தமிழ்நாட்டில் Kallar Reclamation எப்படி நடக்கிறது என்று படித்தேன். எனக்கு நம்பிக்கை பிறக்கவில்லை.

நன்றி – மின்தமிழ் குழுமத்திற்காக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திரு இன்னம்பூரான் அவர்கள் எழுதியது

This entry was posted in தேவர் and tagged , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *