சேத்தூர் ஜமீன்தார்கள் 

பாரம்பரிய சிறப்பு மிகுந்தவர்கள் சேத்தூர் ஜமீன்தார்கள். சேத்தூர் மற்றும் அவர்கள் ஆட்சிக்குட்பட்ட தேவதானம் பகுதியில் மிக அதிகமாக கோயில்கள் அவர்கள் அரவணைப்பில் தற்போதும் பொலிகின்றன. அந்த கோயில்களுக்கான திருவிழாக்கள் மற்றும் பூஜைகளை அவர்களது வாரிசுகள் முன்னின்று செம்மையாக நடத்தி வருகிறார்கள்.

விருதுநகர் மாவட்டத்தில், ராஜபாளையம் வட்டத்தில், ராஜபாளையம்-தென்காசி நெடுஞ்சாலையில். தென்மேற்கில் 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சேத்தூர். இது சேறையம்பதி சதுரகிரி மலைக்கும், திரிகூடமலைக்கும் நடுவில் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையை அரணாகக் கொண்டு  அமைந்துள்ளது. சேத்தூர் ஜமீனுக்கு உள்பட்ட ஊர்கள் வளமிகுந்த நல்லூர்கள், செல்வம் கொழிக்கும் பொன்னூர்கள். எனவேதான் இங்கு வாழ்ந்த ஜமீன்தார் தாம் சீரும் சிறப்புமாக வாழ்ந்ததோடு, அவ்வாறு தம்மை வாழவைத்த இறைவனையும் அவர் குடிகொண்டிருந்த ஆலயங்களையும் போற்றினர்.

‘சோணாடு சோறுடைத்து’ என்பது பழமொழி. ஆனால், ‘சோற்றுக்கு அலைந்தவர்கள் சேற்றுருக்குச் செல்லுங்கள்’ என்பது இப்போதைய புதுமொழி. இது மெய் என்று உலகிற்கு பறைசாற்றும்விதமாக சேத்தூர், பச்சைபசேலேன்று காட்சியளிக்கிறது. ‘சேற்றூர்’ என்றும் ‘போற்றூர்’ என்றும் இலக்கியங்கள் இவ்வூரை பாராட்டுகின்றன. சேற்றூர்தான் சேத்தூர் என்று மருவிவிட்டது என்கிறார்கள். சடையவர்மன் குலசேகரபாண்டியன் (கி.பி.1162) மாறவர்மன் குலசேகரபாண்டியன், மாறவர்மன் விக்கிரம பாண்டியன், தர்மப் பெருமாள் குலசேகர பாண்டியன் ஆகியவர்களின் கல்வெட்டுகளால் ‘சேறை நகர்’ என்றும் ‘சேரூர்’ என்றும்  அழைக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. 

பதின்மூன்றாம் நூற்றாண்டில் குலசேகரபாண்டியனால் வியாபார ஸ்தலமாக நிறுவப்பட்டதனால் ‘குலசேகரபுரம்’ என்ற பெயரும் உண்டு. இன்றும் சேத்தூரில் மேட்டுப் பட்டியில் ‘சந்தைக்கடை’ என்று அப்பகுதி அழைக்கப்படுகிறது. தென்பாண்டி நாட்டில் அடிக்கடி எதிரிகள் தாக்குதல்  நடந்து வந்தது. அதை அடக்க சின்மயத்தேவர் தலைமையில் ஒரு படையை தென்பகுதிக்கு அனுப்பி வைத்தார் மன்னர் பராக்கிரம பாண்டியர். சேத்தூருக்கு மேற்கே அவர்கள் ஒரு கோட்டையைக் கட்டினர். 

அது சின்மயன்கோட்டை என்றழைக்கப்பட்டது. அந்த சமயத்தில் பந்தள நாட்டின் தளபதியான திருவநாதன் பெரும் படையுடன் வந்தான். அவனைப் போரிட்டு வென்றார் சின்மயத்தேவர். அதற்குப் பரிசாக பாண்டிய மன்னர் அந்த பகுதியை அவருக்கு வழங்கி அவரை திசைக்காவலராக நியமித்தார். இவர் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்திலேயே தங்கி விட்டார். இந்தப் பாளையத்தின் முதல் குறுநிலமன்னர் இவர்தான். இவர் ஆதிசின்மயத்தேவர் என்றழைக்கப்பட்டார். 

இவர்தான் தேவதானம் பெரிய கோயிலை கட்டியவர். இவரையும் இவரது மனைவி மனோன்மணி நாச்சியாரையும் கோயில் வளாகக் கல்தூணில் சிலைகளாக வடித்து மரியாதை செய்திருக்கிறார்கள். இவர் காலத்துக்கு பிறகு பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து, சேத்தூர் தனி ஜமீனாக மாறியது. கடைசி பட்டங்கட்டிய ஜமீன்தார் வடமலை திருவநாத வணங்காமுடி சேவுகபாண்டியன் என்பவராவர். இவர் 1973 வரை ஆட்சி செய்தார். 

இவர்களது வாரிசுகள்தான் தேவதானம் பெரிய கோயிலில் அறங்காவலர்களாக இருந்து அறப்பணிகளை செய்து வருகிறார்கள். தற்போது சேத்தூர் ஜமீன்தார் திரு வி.டி.எஸ்.டி. துரைராஜசேகர் அறங்காவலராக இருந்து திருவிழாக்களை பக்தி மேம்பாட்டோடு மேற்கொண்டு வருகிறார். தேவதானம் மற்றும் சேத்தூர் பகுதியில் திரும்பிய இடங்களிலெல்லாம் ஜமீன்தார்கள் பூஜை செய்த கோயில்கள் உள்ளன. இவற்றில் மிகச்சிறப்பானது, அன்னை தவம் பெற்ற நாயகி உடனுறை நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோயிலாகும். விருதுநகர் மாவட்டத்தில் பஞ்சலிங்கத் தலங்கள் உள்ளன. இவற்றில் ஆகாயத்தலமாக விளங்குவது தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சிவபெருமான் கோயில்தான்.

இந்த ஆலயத்தில் இறைவன் சுயம்புவாகக் கோயில் கொண்டிருக்கிறார். கன்னி மூலையில் குன்றின் மேல் அமைந்துள்ள திருமலைக் கொழுந்தீஸ்வரர் ஆலயம் மிகவும் சிறப்பானது. உமாதேவி தவக்கோலத்தில் இங்கு எழுந்தருளி ஈசனை வழிபாடு செய்துள்ளார். அதற்கான தடயங்களை இங்கே காணலாம். தேவர்கள், முனிவர்கள், சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் இந்த ஈசனை வழிபட்டுள்ளார்கள்.

 

பல சிவாலயங்களில் நாகலிங்க மரம் காணப்படும். ஆனாலும், இத்திருக்கோயிலில் காணப்படும் நாகலிங்க மரம் பிரசாத மரமாகவே பாவிக்கப்படுகிறது. ஆமாம், குழந்தைப் பேறு இல்லாதோர் இந்த நாகலிங்க மலரை பாலில் கலந்து சாப்பிட்டால் அப்பேறு கிட்டும் என்று நம்பப்படுகிறது! மருத்துவ ரீதியாக கூட குழந்தை பாக்கியம் கிட்டாத பெண்மணிகள் இந்த நாகலிங்க மலரை உட்கொண்டு குழந்தை பாக்கியம் பெறுகின்றனர். 

இந்த ஆலயம், தேவதானம் ஊரில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது. திருக்கோயிலுக்கு அரசர் தேவபணிக்காக நிலத்தினை தானம் செய்த காரணத்தினால் ‘தேவதானம்’ என்று பெயர் வழங்கப்படுவதாக ‘ஊரும்பேரும்’ நூலில் டாக்டர். ஆர்.பி.சேதுப்பிள்ளை  கூறுகிறார். தேவர்கள் வந்து பெருந்தவம் புரிவதால் ‘தேவதானம்’ எனப் பெயர் பெற்றது என்று ‘சேறைத்தல புராணம்’ கூறுகிறது. தேவதானம் என்ற இத்தலத்திற்கு “அம்பிகாபுரம்” “மந்தாகினிபுரம்” “பராசகேந்திரம்” “ மகுலா புரம்” என்ற  பெயர்களும் உண்டு.  

பாறையின் மேலுள்ள கொன்றை மரத்தின் கீழ் இறைவன் வீற்றிருப்பதால் “திருமலைக் கொழுந்தீசர்” எனப் பெயர் பெற்றார். அம்மையப்பர், ஆறுடையார், சேவகத் தேவர், நச்சாடை தவிர்த்தவர் என்னும் வேறு பெயர்களும் இப்பெருமானுக்கு உண்டு. இத்தலத்தின் அருகாமையிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலை ‘தருமாசலம்’ என்றும் ‘புண்ணியவெற்பு’ என்றும் புலவர்களால் பாராட்டப்படுகிறது. இம்மலையில் தவம் இயற்றி பக்தி சிரத்தையுடனும், வைராக்கியத்துடனும், இறைவனை காண முயல்பவர்கள் தங்கள் வினைகள் ஒழிந்து வீடுபேறெய்துவர் என்பது பெரியோர்களின் நம்பிக்கை.

இம்மேற்கு மலைத் தொடரிலிருந்து கோரையாறு, தேவியாறு, நகரையாறு என்னும் பல ஆறுகள் ஓடிவருகின்றன. கோரையாற்றில் சதுர்ச்சுனை, மேலருவி, கீழருவி, கன்னிகா தீர்த்தம், தேவி தீர்த்தம், குயவரி தீர்த்தம், காரி தீர்த்தம், காருத்த தீர்த்தம், பூத தீர்த்தம், அருக்கத் தீர்த்தம், பராசர தீர்த்தம். சங்க தீர்த்தம் எனப் பல புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. இக்கோயிலை வணங்கி திருவோலக்க அருவியின் கீழ் உள்ள குகை பக்கத்தில் அம்மை தவம் செய்த இடத்தினை வணங்கி வருபவர்கள் முக்தி பெறுவார்கள் என்பது ஆன்றோர்கள் கருத்து. 

இந்த ஈசன் தான் வெளிபட சின்மயத்தேவன் ஆட்சிகாலத்தில் ஒரு திருவிளையாடல் செய்தார்.  என்ன திருவிளையாடல் அது? 

சேத்தூர் காட்டுப் பகுதியில் புதர்களுக்கு அடியில் மறைந்திருந்த லிங்கரூபமான சிவபெருமானை ஒரு கலைமானும், ஒரு பசுவும் தனித்தனியே வணங்கிவந்தன. ஒருநாள் பசு அங்கே சாணம் போட்டு அசுத்தப் படுத்தியதைக் கண்ட கலைமான், கோபத்துடன் பசுவைத் தாக்க, பசுவும் பதிலுக்குப் போரிட்டது. அப்போது அவற்றுக்கு காட்சி தந்தார் சிவபெருமான். இதை அப்பகுதிக்கு அப்போது வந்த ஒருவர் பார்த்து வியந்துபோய் ஊருக்குள் சென்று தான் கண்ட அதிசயத்தைக் கூறினான். அனைவரும் காட்டுக்குள் வந்தனர். சிவலிங்கத்தைக் கண்டு அங்கேயே ஈசனுக்குக் கோயில் அமைத்தனர். 

இறைவனை, ‘திருக்கொழுந்தீஸ்வரர்: என்று போற்றி மகிழ்ந்தனர். இந்த பகுதியை ஆண்ட பாண்டிய மன்னர் இந்த சிவன் மீது பெரும் பக்தி கொண்டிருந்தார். ஒருசமயம் இவருக்கும் சோழருக்குமிடையே போர் தோன்றியது. அப்போது பாண்டியரின் படை தளபதியாக சிவபெருமானே பொறுப்பேற்று, பாண்டிய மன்னரை வெற்றியடையச் செய்தார். எனவே மன்னருக்கு ஈசன்மீது பக்தி கூடிற்று. காலங்கள் கடந்தன. மீண்டும் சோழ மன்னர், பாண்டியரிடம் நட்பு பாராட்டுவதாக நடித்து அவரை வெல்ல நினைத்தார். இதற்காக  நஞ்சு தோய்க்கப்பட்ட நச்சாடை ஒன்றைத் தயாரித்து தூதர் மூலம் அனுப்பி வைத்தார். 

இந்த ஆடையை பாண்டியன் போர்த்திக்கொண்டானானால் உடனே அவன் எரிந்து சாம்பலாகி விடுவான் என்பது திட்டம். ஆனால், பாண்டியன் கனவில் முதல்நாள் சிவபெருமான் தோன்றி, அவனுக்குக் கொடுக்கப்படும் ஆடையை லிங்கத்தின் மீது போர்த்துமாறு கூறியிருந்தார். மறுநாள் சோழன் அனுப்பிய நச்சாடை சிவபெருமான் மீது போர்த்தப்பட்டது. உடனே அந்த ஆடையே நெருப்பு பற்றி எரிந்தது! பாண்டியன் உயிர் தப்பினான். அதேசமயம் சோழ மன்னர் பார்வையிழந்தான். விவரம் தெரிந்துகொண்ட பாண்டியன் ஈசனிடம் வேண்டிக்கொள்ள, சோழ மன்னன் பார்வையை மீண்டும் பெற்றான்.  

இந்த சம்பவத்துக்குக் காரணமான கண்கெடுத்த சிவனும், கண்கொடுத்த சிவனும், தனித்தனியே திருக்கொழுந்தீஸ்வரர் சந்நதிக்கு அருகில் தற்போதும் காணப்படுகிறார்கள். நச்சாடையை தன்மீது போர்த்திக்கொண்டு பாண்டியனை காப்பாற்றிய சிவனே இக்கோயிலில் மூலவர்.  இவருக்கு ‘நச்சாடை தவிர்த்தருளிய நாதர்’ என்று பெயர். மிகுந்த நன்றியறிதலுடன் இக்கோயிலை விரிவாக கட்டினான் பாண்டியன். சோழ மன்னரும், தன் குற்றம் உணர்ந்து, அதற்குப் பரிகாரமாக சேத்தூரில் சிவனாலயம் ஒன்றை அமைத்தார். அந்த ஆலய இறைவன் கண்ணீஸ்வரர் என்றழைக்கப்படுகிறார்.   

திசைக்காவலராக இருந்து, குறுநில மன்னராகி, பின் நாயக்கர் காலத்தில் பாளையக்காரரான சேத்தூர் ஜமீன்தாரின் ஆளுமைப் பகுதியில் நச்சாடை தவிர்த்தருளிய நாதர் கோயில் அமைந்தது. அவர் கோயிலை நன்கு பராமரித்தார். கருவறையின் முன்னாலிருந்த முன்மண்டபத்தை விரிவுபடுத்தினார். திருவிழாக்களை மிகச்சிறப்பாக முன்னின்று நடத்தினார். இக்கோயிலில் இறைவி ‘தவம் பெற்ற நாயகி’ என்று போற்றப்படுகிறாள். சின்மயத்தேவர் இவ்வாலயத்தில் தமிழ்ச்சங்கம் வைத்து தமிழை ஆதரித்தார். நூல் அரங்கேற்றம் செய்தார். ‘சேறைத்தல வரலாறு’ எனும் நூலை அர்ங்கேற்றியபோது புலவர்களுக்குள் சர்ச்சை ஏற்பட்டது. 

நூலாசிரியர் பொன்னாயிரங் கவிராயரை பல கலைஞர்கள் குறை கூறினர். சந்திராமுதக் கவிஞர் என்பவர், “சேக்கிழார், கச்சியப்பர் ஆகியோர் நூல்களைப்போல் இந்நூல் இறைவனால் அங்கீகரிக்கவில்லையே” என்றார். என்ன ஆச்சரியம்! அப்போது திடீரென்று மழை பெய்தது. இதைக் கண்ட சபையோர், “இதுவே இறை சகுனம்தான்; இறைவன் நூலை அங்கீகரித்தற்கு சமம்” என்றனர். ஆனால், மழை பெய்வது இயற்கையின் இயல்பு. இதைப்போய் இறைவனின் அங்கீகாரம்  என்று முடிவு செய்யக்கூடாது,’’ என்று எதிர்ப்பு தெரிவித்தார் சந்திராமுதக் கவிஞர்.  அப்போது யாரும் எதிர்பாரத சம்பவம் நடந்தது. தவம்பெற்ற நாயகியின் சந்நதிக்குள் ஒரு கிளி பறந்து சென்றது.

அன்னையின் திருக்கரத்திலிருந்த பூச்செண்டையும், மோதிரத்தையும் வாயினால் கவ்விக்கொண்டு வந்து, பொன்னாயிரங்கவிராயர் மடியில் போட்டுவிட்டு, ‘சரி… சரி…’ என்று மழலைக் குரலாய் மொழிந்தது. சபையோர் அதிசயித்தனர். இதைவிட இந்த நூல் அரங்கேற வேறு என்ன அங்கீகாரம் வேண்டும்?   இத்தகைய பெருமைவாய்ந்த கோயிலுக்கு சேத்தூர் ஜமீன்தார் சின்மயதேவர் நிலங்கள் பல வழங்கினார். பொன்னும் மணியும் பதித்த அணிகலன்களும், வாகனங்களும், பண்ட பாத்திரங்களும் ஏராளமாக அளித்தார். 

திருவிழாக்களை மிகச்சிறப்பாக நடத்தினார்.  இவரது வாரிசு சேவுகப்பாண்டியத்தேவர், (1803-1827) தேவதானம் கோயிலுக்கு ஆண்டுக்கு நாலாயிரம் கோட்டை நெல்லும், சேத்தூர் திருக்கண்ணீஸ்வரர் ஆலயத்திற்கு மூவாயிரம் கோட்டை நெல்லும் அளந்துவிட்டு, மிச்சத்தைதான் நெல்லை அரண்மனையில் சேர்ப்பிப்பாராம். சேத்தூர் ஜமீன்தார் அரண்மனையின் அப்போதைய செழிப்பை இங்கு விளைந்த நெல்வகைகளே சொல்லும்: மிளகி, பூம்பாறை, சீரகச்சம்பா, காயுமிளகி, கல்லு குண்டை, முங்கில் சம்பா, வெள்ளை நெல்…     

சேத்தூர் ஜமீன்தாரின் வாரிசான சுத்தர ராசுத்தேவர் 1877ல் தேவதானம் கோயிலுக்கு மகா மண்டபம்  அமைத்துள்ளார். குடமுழுக்கு விழாவும் மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். சிறந்த கவிஞரான இவர், ‘நச்சாடை தவிர்த்தவர் சேறைப்பதிகம்’, ‘தேவதானம் பெரிய கோயில்’, ‘கோயில் திருவிழா’, ‘திருவாதிரை விழா’ போன்ற தலைப்புகளில் பாடல்கள் எழுதிள்ளார். சேறைத் தலவரலாற்றை மறுபதிப்பு செய்து 1893ல் வெளியிட்டுள்ளார்.   சேத்தூர் ஜமீன்தார் வடமலை திருவநாத வணங்காமுடி சேவுகப் பாண்டியத்தேவர் கடைசி பட்டங்கட்டிய ஜமீன்தார்.

இவர் காலத்தில் பல திருப்பணிகள் நடந்துள்ளன. குதிரை சவாரி, யானைசவாரி, துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், சிலம்பம், கத்திச்சண்டை, என பலகலைகளில் அபார திறமைகொண்டவராக விளங்கினார். கஞ்சிரா வாசிப்பதில் நிபுணர். திருச்சி வானொலியில் இவர் கஞ்சிரா கச்சேரி அடிக்கடி ஒலிபரப்பானது. ‘முத்தமிழ் வித்தகர்’ பட்டமும் பெற்றவர்.  இவர்காலத்தில் தேவதான ஆலயவிழாக்கள் பிரமாண்டமாக நடந்தன. இக்கோயிலில் நடைபெறும் இசை நிகழ்சிகளும், வெகு சிறப்பாக இருக்கும். சிலப்பதிகாரத்தில் வர்ணிக்கப்படும் இந்திர விழாவையும் மிஞ்சும் அளவிற்கு தேவதானம்  கோயில் திருவிழா நடைபெறும் என்பார்கள்!   

சங்கர நாராயணர் கோயிலில் 4.9.1934 முதலே மின்விளக்கு எரிய உதவி செய்தார். இதேபோல் தமிழகத்தில் உள்ள பெரிய கோயில்களிலும் இவர் அறத்தொண்டாற்றியிருக்கிறார். இவரது மனைவி நாச்சியார், தவம் பெற்ற நாயகி மீது மிகுந்த பற்று கொண்டிருந்தார். ஒருசமயம் திருவிழாவின்போது தவம்பெற்ற நாயகியின் தங்க வளையல் காணாமல் போய்விட்டது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அம்மன்  ஒருகையில் வளையல் இன்றி காணப்பட்டார். இது ஜமீன்தார் குடும்பத்தாருக்கும் ஊராருக்கும் பெரிய கவலையைத் தந்தது. அந்த சமயத்தில் நாச்சியார் கனவில் தவம் பெற்ற நாயகி தோன்றி, ‘எனக்கு வளையல் இல்லை; 

நீ மட்டும் வளையல் போட்டுக்கொள்ளலாமா?’ எனக் கேட்க. மறுநாளே அம்மனுக்கு ஒரு வளையல் செய்து போட்டார் ராணியார்.   வளையல் போட்ட ஓரிரு மாதங்களில் தொலைந்துபோன வளையலும் கிடைத்தது. தற்போது அம்மைக்கு மூன்று வளையல்கள்!   தேவதானத்தில், குமரன் கோயில் முன்பு மிகப்பெரிய மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில்தான் நச்சாடை தவிர்த்தருளிய சாமிக்கும், தவம் பெற்ற நாயகிக்கும் திருமண உற்சவம் நடைபெறும். பத்துநாட்கள் திருவிழா இவ்வாலயத்தில் மிகச்சிறப்பாக நடைபெறும். அக்காலங்களில் ஜமீன்தார் குடும்பத்தினர் ஆலயத்திலேயே தங்கி வழிபாடுகளில் கலந்துகொள்வார்கள். 

4ம் நாள் திருவிழாவிற்காக ஜமீன்தார் வாரிசுகள் அழைத்து வரப்படுவார்கள். ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்த பின்பு கோயிலிலிருந்து  நச்சாடை தவிர்த்தருளிய சாமியும், தவம் பெற்ற நாயகியும் புறப்பாடாவார்கள். அவர்களை ஜமீன்தார் எதிர்கொண்டழைத்து வருவார்கள். தேவதானம் குமரன் கோயில் முன் மண்டபத்திற்கு அவர்களை அழைத்து வருவார்கள். 7ம் நாள் திருவிழாவில் திருக்கல்யாணம் நடைபெறும். அன்று ஜமீன்தார் வாரிசுகளுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தப்படும். 9ம் நாள் தேர்த்திருவிழா நடைபெறும். 

அப்பனும், நாயகியும் தனித்தனி தேரில் உலா வருவார்கள். தேரை ஜமீன்தார் வாரிசுகள் வடம் பிடித்து கொடுத்த பிறகே தேர் ஓடும். குமரன் கோயிலைச் சுற்றியபடி கிராம மக்கள் எல்லோரும் கூடி தேர் இழுப்பர். தேவதானத்தில் மிகப்பெரிய திருவிழாவாகவே இது தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. தேவதானம், சேத்தூர் பகுதியிலுள்ள தேவதானம் முருகன் கோயில், நாகமலை சுப்பிரமணியன் கோயில், குமரன்கோயில், தேரடி விநாயகர் கோயில், கன்னி விநாயகர் கோயில், மாடசாமி கோயில், பெருமாள் கோயில், நச்சாடை தவிர்த்தருளிய சிவன் கோயில் ஆகிய பல கோயில்களில் தற்போதைய வாரிசு துரைராஜ சேகர ஜமீன்தாரால் திருப்பணி நடைபெற்று வருகிறது. 

சேத்தூரில்  கண்ணீஸ்வரர் ஆலயத்தில் தவசு காட்சி மிகச்சிறப்பாக நடைபெறும் கந்தசஷ்டி விழாவிலும் ஜமீன்தார்கள் கலந்துகொள்கிறார்கள். சேத்தூர் வெயிலுகந்த சுவாமி கோயில், சின்னத் திருப்பதி என அழைக்கப்படும் னிவாச பெருமாள் கோயில், மணல் விநாயகர் கோயில், கரையடி விநாயகர் கோயில் ஆகியவையும் சேத்தூர் ஜமீன்தாரால் பராமரிக்கப்படுபவையே.

சரச்சந்த்ர நிபானனா

சரத்காலத்து சந்திரனுக்கு சமானமான முகத்தையுடையவள்

நிரஞ்ஜதா

மாசற்றவள். அஞ்ஜகம் என்றால் (கருப்பு) மை. ஞானம் மறைபட்டு, மனதில் இருள் சூழ்ந்து கொள்வதினால், அவித்யையை கருப்பு மை என்று சொல்லப்பட்டது. அம்பாள் அவித்யை, மாயை இரண்டுடனும் சம்பந்தமில்லாதவள் என்று பொருள்.

நித்யா

பூத, பவிஷ்யத், வர்த்தமானமாகிய காலத்திலும் அழிவில்லாதவள், எப்போதும் இருப்பவள்.

நிராகாரா

ஆகாரத்தோடு கூடாதவள். ஆகிருதி இல்லாதவள். ஸம்வித் ரூபிணீயாகிய பராசக்தி, ஜகமெங்கிலும் வியாபித்திருப்பதால், அவளுக்கு குண ஸம்பந்தமான உருவம் என்பது இல்லை என்று அர்த்தம்.

Share
This entry was posted in சேத்துர் ஜமீன். Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *