சிவகிரி ஒரு தீர்வு:5

~~~~~~~~~~~~~
“சிவகிரி சமீன்தாரவர்கள் வரகுணராம பாண்டிதுரையவர்கள் மீது திக்குவிஜயம்”
-பாடியவர் கடிகைமுத்துப் புலவர்.
என இங்கு காட்சியளிக்கும் இந்த சுவடிப்பாடல் தொகுப்பு, தமிழ்தாத்தா உ.வே.சாமிநாதையரவர்களால் தொகுக்கப்பெற்று, அவருடைய பெயரால் திருவான்மியூரில் அமைந்துள்ள உ.வே.சா.நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த தொகுப்பு விஷேசமாக சிவகிரி ஜமீன்தார் மீது பாடப்பெற்றிருந்தாலும், இது அதன் தொடக்கம் முதல் முடிவு வரை ஊத்துமலை மருதப்பத்தேவர் மற்றும் வடகரை பெரியசாமித்தேவர் என இருவரையும் சிவகிரி வரகுணனோடு இணைத்தே பாடியுள்ளது. எப்படியென்றால்,…?
“சாற்றுவிசயச் சிவகிரியுந் தமிழோர்பரவு வடகரையு மூற்றுமலையும் புரப்பவர்க ளுயர்ந்ததமிழ்நாட் டரசரன்றோ”
“உலகமறிய மூவரையு மொன்றாய்க்கூட்டு மொருகடவுட் புலவர்மகிழ வென்றதமிழும் பொருந்தக்கூட்டிப் புரப்பதுவே”
என திக்கு விஜயத்தின் தொடக்கத்திலேயே கடிகைமுத்துப் புலவரானவர், சிவகிரி-வடகரை-ஊத்துமலை ஆகிய மூவரும் தமிழைக் காக்கும் உயர்ந்த தமிழ்நாட்டரசர்கள் என்றும்,
இந்த உலகமறிய இந்த மூவரும் ஒன்றாக இருந்து புலவர்கள் மகிழுமாறு வெல்லுந் தமிழ் போர் நிகழ்த்திக் காட்டிக் காப்போர்களாவர் என்றும் கூறியுள்ளார்.
மேலும்,
“வேந்தன்வரகுணராம பாண்டியனுக்கே விசயவிலாசஞ் சொன்னேன்
மாந்தரெலாமகிழ விசைவளர்த்ததுவும் விசயமால்வரைதானன்றோ
புதுவைநவநீதகிட்ணன் பொன்னடியுந்திரிகூடப் பொருப்பின் மேவும்
விதுவணியுங் குற்றாலர் விரைமலர்த்தாளுந் துணையாய் வேண்டினேனே” – என அடுத்ததாக தொடர்ச்சியாகப் பாடுகிறார். இதன் பொருள் என்னவென்றால்,..
நான் சிவகிரி வரகுணராம பாண்டியனுக்கே விசய விலாசம் எனும் இந்நூலைப் பாடினேன் எனினும் அதற்கு இவ்வுலக மனிதரெல்லாம் மகிழும்படி வெற்றியை பெற்றவரும், காக்கும் கடவுளுமாகிய வெற்றித் திருமால் வசிக்கும் ஊற்றுமலையின் தலைநகரமாகிய புதுவையில் {வீரகேரளம்புதூர்- புதூர் இங்கு புலவரால் புதுவையாயிற்று} கோயில் கொண்டுள்ள நவநீதகிருஷ்ணனின் பொன் திருவடியும், திரிகூட மலையின் மீது பதிந்து செல்லும் குற்றாலநாதருடைய பாதமலர்களையும் எனக்குத் துணையாக இருக்குமாறு வேண்டினேன் என்கிறார்.
ஊத்துமலை மறக்குல மன்னரின் குலதெய்வமாகிய நவநீதகிருஷ்ணனையும், வடகரை மறக்குல மன்னரின் குலதெய்வமாகிய குற்றாலநாதரையும் சிவகிரி மறக்குல மன்னரின் புகழைப் பாட துணையாக அருளவேண்டுகிறார் புலவர் அவர்கள்.
மேலும்,
“சிவகிரியும் வடகரையுந் திறலூற்று மலையுமெனச் செப்புமூன்று
புவனமதிநுதற்றிலகம்புனைந்தநெற்றிப்பட்ட மெனப் பொருந்திவாழும்
முவகையாதிக்கமதின் மூவேந்துமோருமன தாய்மொழியும் வார்த்தை
யாவதுமொன் றாய்மனுடரனைவோரும் பேதமில்லாதாங்கேயெய்தும்” – என்கிறார். இதன் பொருளாவது,
சிவகிரி-வடகரை-ஊற்றுமலை என கூறப்படும் மூன்று அரசுகளும் நெற்றி போன்றும், நெற்றியில் இடப்பட்ட திலகம் போன்றும்,நெற்றிப்பட்டம் போன்றும் பொருந்தி ஒன்றாக வாழ்வனவாகும் என்றும், இந்த மூன்று அரசுகளிலும் வாழும் மக்களும் ஒரே மொழி, ஒரே சொல்,என்று பேதமில்லாமல் வாழ்பவர்கள்என்றும் ஆகும்.
தவிர,
“மகத்துவ மிகுதியு மாகிய விருநிலத்துறை பெரியசு வாமிதன் மனதுவைத்திடுதயவு விடாமலு மகிழு மைத்துனன் வரகுணராமனே”
– என்று வடகரை பெரியசாமித்தேவரிடம் தன் மனதை வைத்திருப்பவனும் அவரது தயவை விடாமல் பற்றிக்கொண்டும் இருக்கின்ற “மைத்துனன்”வரகுணராமன் என்றும் சிவகிரி வரகுணன் சுட்டப்பெறுகின்றான்.
இது தெளிவாக சிவகிரி வரகுணன் வடகரை பெரியசாமித்தேவரின் மைத்துனன் என்கிறது. அதாவது மாமன்- மச்சான் முறை உடையவர்கள் இருவரும் என்கிறது.
அடுத்ததாக,…
“தென்னாட்டு ராயமரு தப்பவர பாலனைச் சீவலம கீபனைச் சிறுதந்தை யென்றவன்”- எனும் தொடர் வருகிறது.
இது உணர்த்துவதென்ன? அதாவது தென்னாட்டு ராயன், மருதப்பனாகிய வரபாலன், சீவல மகீபனாகிய {சீவலமகீபன்-சீவலமாற பாண்டியன் என ஊத்துமலை அரசர்கள் வழங்கப்பட்டனர்} ஊத்துமலை மன்னரை தனது சிறுதந்தை {சிற்றப்பா}என்று சொல்லியவன் சிவகிரி வரகுணன் என்பது பொருளாகும்.
மேலும் ஊத்துமலை மருதப்பத்தேவர் குறித்து சொல்கையில்,..
“மருதப்ப னென்றரவி குலராச சுந்தரனை
மனதுக்கி சைந்ததுணை யெனவேம கிழ்ந்தபுலி விருதிட்ட வஞ்சகர்த முடிதூளெ ழும்பவிடு விசயத்து ரங்கன்வர குணராம சிங்கமே”- என கூறுகிறார்.
ஊத்துமலை மருதப்பரின் குலம் “ரவிகுல ராச சுந்தரன்” எனப்படுவதின் மூலம் சூரிய குலம் என்றும், புலிவிருது உடையவன் என்பதின் மூலம் புலிக்கொடியை ஏந்தியவன் என்றும் பொருள் காணப்படுகிறது. இந்த மருதப்பரை சிவகிரி வரகுணன் தனது மனதுக்கிசைந்த துணையாகக் கருதி மகிழ்ந்தான் என்பது பாடலில் காணப்படும் பொருளாகும்.
திக்கு விஜயத்தின் இறுதிப்பாடலாக,..
“மருவுசிவ கிரிவாழி வரகுணராமேந்திரனும் வாழிகீர்த்திப் பெருமைவட கரைவாழி பெரியசுவா மியும்வாழி பெரியோர்வாழி தருவனைய தென்னாட்டில் வாழுமரு தப்பன்மிகத் தழைத்துவாழி யிருநிலத்து நான்மறையு மந்தணரு மெந்நாளும் வாழி வாழி!- என முடிகிறது.
அதாவது, சிவகிரி-வடகரை-ஊத்துமலை ஆகிய மூவரும் வாழ்க என்று வாழ்த்து கூறி சிவகிரி திக்கு விஜயம் எனும் நூலை அவர் இறுதி செய்கிறார். சுவடியின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை இந்த மூன்று மறக்குல மன்னர்களும் ஒன்றாகவே இணைந்து பயணித்து முடிக்கின்றனர்.
•படைக்கு முதல்வர் குலத்தில் வரும் மறவர்•
சிவகிரி வரகுணன்-ஊத்துமலை மருதப்பர்-வடகரை பெரியசாமித்தேவர் ஆகியோரைக் கூட்டாக அவர்களின் குலத்தைக் குறித்து கடிகைமுத்துப் புலவர் கூறும்பொழுது,..
“பலபடைக்கலமு மிகவெடுத்தவர்கள் பகைஞரைப்பொருதசெருவினார் வலமிகுத்தவர்கள் புவிபடைக்குமுதல் வருகுலத்தில்வரு மறவரே” – என்கிறார்.
அதாகப்பட்டது, … பல படைக்கலமாகிய ஆயுதங்களையெல்லாம் மிகவும் அதிகமாகக் கையாண்டவர்கள், போரில் பகைவர்களை நேரடியாக சென்று எதிர்த்து களமாடுபவர்கள், வலிமை மிகுந்தவர்கள், இந்த உலகின் படைகளுக்கெல்லாம் முதல்வர்களாக விளங்கியவர்களாகிய “மறவர் குலத்தில்” வந்த மறவர்கள் என்கிறார். இதை விட நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல ஒரு சான்று வேறென்ன வேண்டும்? நண்பர்களே!
மேலும்..
“படையொடு தொடர்வது துடியடியே” -என்பதின் மூலம் படைஞர்களோடு துடியிசைத்து செல்லும் குடியினர் இருந்தனர் என்பதும்,
“யிடுநிழல்புடவியினிடமறவே”- என்பதின் முலம் தன் நிழல் பூமியின் மீது விழுமாறு குதிரையின் மீது மறவர்கள் அமர்ந்திருந்தனர் என்பதும் புலப்படுகின்றது.
•”தேவர் பிரான்”-“ஆப்பனூர் பிரதாபன்”•
இவை தவிர,
“தென்மலை தழைக்க அரசு புரிந்தவனாகிய “வழுதி மனுபதி” என்று புகழப்பட்ட வரகுணராமேந்திரனை,..
“ஆப்பனூரான்” -என்றும்,
“ஆப்பனூ ரிற்ப்ரதாபா”- என்றும்,
அதாவது மறவர் சீமையின் திருவாப்பனூரைச் சேர்ந்தவன், மற்றும் ஆப்பனூரின் பிரதாபன் என்கிறார். இது சிவகிரி ஜமீன் முன்னோர்கள் ஆப்பனூர் என வழங்கப்பட்ட ஆப்பநாட்டு மறவர்கள் என்பதை உணர்த்துகிறது. மறவரில் ஆப்பநாட்டு மறவர்கள் வெகு பராக்கிரமமானவர்களாவர். ஆப்பநாட்டில் வாழ்ந்த கொண்டையன் கோட்டை மறவரில் வேறுபட்ட வன்னிய மறவர்கள் இவர்கள் என்றும் கருதலாம்.
அடுத்ததாக,
“தேவர் பிரான்”-என்றும், சிவகிரி வரகுணராம பாண்டியன் திக்குவிஜயத்தில் வழங்கப்படுகிறான். { தேவர்குலத்தவர் தலைவன்}
ஆனால் இவையெல்லாம் நடன.காசிநாதன் அவர்களின் கண்ணில் படவில்லை போலும்!.
•”சேதுபதியின் செந்தூரக் கனி”•
“செம்பிநாடது புரந்தமன்னனொரு சிந்தூரக்கனி”- என்றும் சொல்கிறார்.
அதாவது இந்த சிவகிரி வரகுணராமன் தேவர் பிரானாகிய தேவர்குலத்தின் தலைவனாவான், அவன் செம்பிநாட்டைக் காக்கும் மன்னனின் ஒரு செந்தூரக்கனி போன்றவன் என்றும் புகழப்படுகிறான். இந்தப் புலவரின் காலத்தில் செம்பிநாடு என்று அழைக்கப்பட்டது சேதுநாடேயாகும். அந்த சேதுநாட்டைக் காத்தவர்கள் சேதுபதிகளாவர். ஆக இம் மன்னன் சேதுபதியின் செந்தூரக் கனி போன்றவன் என்பதே இங்கு பொருந்திவருவதாகும். இவ்விதம் பலவாறு சிவகிரி வரகுணன் புலவரால் மறக்குடியினனாகவே குறிப்பிடப்படுகிறான். ஆக இனியும் இவர்களை மாற்றுக்கூட்டத்தார் உரிமைகோராமல் பாதுகாக்க வேண்டியது மறக்குலத்து மக்களின் தலையாய கடமையாகும் என்று கூறிக்கொண்டு மீண்டும் அடுத்த பதிவில் உங்களைச் சந்திக்கிறேன்!
நன்றி!
அன்பன்:கி.ச.முனிராஜ் வாணாதிராயன்.
Share
This entry was posted in சிவகிரி ஜமீன், சிவகிரி ஜாமீன். Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *