கருணாலய வலங்கைப்புலிப் பாண்டியன் கல்வெட்டு

வடகரையாதிக்கமாகிய சொக்கம்பட்டி அரசின் கடைசி அரசருள் ஒருவரான ஸ்ரீராஜமான்யஸ்ரீ கருணாலய வலங்கைப்புலி பாண்டியன் அவர்கள் பற்றிய செய்திகளும் வரலாற்றுச் சான்றுகளும் மிகவும் குறைவாக இதுவரை கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் இம்மன்னரைக் குறிப்பிடும் கல்வெட்டு ஒன்று, சில மாதங்களுக்கு முன்பாக நாங்கள் தென்காசிப் பாண்டியர் பற்றிய தேடுதல்களில் ஈடுபட்டிருந்த பொழுது, சொக்கம்பட்டி கருப்பாநதிக்கரை அருகிலுள்ள பெரியநாதன் கோயில் என மக்களால் வணங்கப்பெறும் பெரியசாமி ஐயன் கோயிலின் முன்நுழைவு மண்டபத்தின் இடது ஓரத்தில், கீழே சாய்க்கப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டது. 27 வரிகள் கொண்ட இக்கல்வெட்டின் இறுதிப்பகுதி உடைந்து காணப்படுகின்றது. இதனை படியெடுக்காமல் நான் படித்து அன்று பதிவு செய்தபின் முறையாகத் தொல்லியல் துறையிடம் தெரிவித்துப் பின்னர் அது, மத்திய தொல்லியல் துறை கல்வெட்டு ஆய்வாளர்களால் முறையாகப் படியெடுக்கப்பட்டது. இனி அச் சாசனத்தொடரை நாம் பார்ப்போம்.

கல்வெட்டு

“”””””””””””””””

1. ௵௶யஎ௵

2. பரிதாபி௵

3. உத்தராயண

4. மான நிர்ஷ

5. மாக ஆனி௴

6. யச ம்தேதி சுக்கிரவா

7. ரமுஞ் சுக்கில ப

8. ட்ச நவமியு

9. மசுத நட்செ

10.த்திர முஞ் சித்த

11.யோகமு பய

12.கரணமும் விரி

13.ச்சிகலக் க

14.னெமு மார்ச்சுதவே

15.ளையுங் கூடின சு

16.ப தினத்தில் பூர

17.ணவல்லி சமே

18.தப் பிரசுதிசுர

19.ரும் பூரணா பு

20.ட்கலா சமேத

21.மகாசாத்தா

22.வுக்குஞ் சொ

23.க்கம்பட்டி ஆதிக்

24.கத்துக்கு அரசராகி

25.ய கருணாலய வ

26.லங்கைப்புலிப்

27.பாண்டி{யன்}

19ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த கல்வெட்டில் அது இருக்குமிடமாகிய அக்கோயிலின் கடவுளர் ,

“பூரணவல்லி மற்றும் பிரசுதிசுரர்”- எனவும்,

“பூரணபுட்கலா -மகாசாத்தா” -எனவும்,

வழங்கப்பெறுகின்றனர். சொக்கம்பட்டி ஜமீன் ஸ்ரீராஜமான்யஸ்ரீ கருணாலய வலங்கைப்புலி பாண்டியன் இக்கல்வெட்டில். ..

“சொக்கம்பட்டி ஆதிக்கத்துக்கு ‘அரசராகிய’ கருணாலய வலங்கைப்புலிப் பாண்டியன்”- என்றே வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

●கருணாலய வலங்கைப்புலி பாண்டியன் பற்றிய செய்திகள்.

இவருக்கு “அனந்த சுந்தர கருணாலய வலங்கைப்புலி பாண்டியன்” என்றும், “சோமசுந்தரபாண்டியன்”-என்றும் வெவ்வேறு பெயர்களும் உண்டு.

இவர் 1859ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி மன்னராகப் பதவியேற்றார். இவர் பற்றிய சில செய்திகளை நாம் இப்போது காண்போம்.

சொக்கம்பட்டி மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள ஊர். அதனால் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதும் போவதுமாக இருந்துள்ளது .இதே போல ஒரு புலி அட்டகாசம் செய்து வந்ததைக் கண்டக் கருணாலய வலங்கைப்புலிப் பாண்டியன் புலியை அடித்துக் கொன்று விடுகிறார் .அதைப் புலவர் இவ்வாறாக பாடுகிறார்,…

“தம்புலியான மடப்புலியே ! தடிக்கம்பால் அடிபட்டாயே ! எங்கள் முப்புலி துரைப்புலி

வீரப்புலி கொண்ட புலி கருணாலய வலங்கைப்புலி கைக்கம்பால் அடிபட்டு இறந்தாயே ”

என்று புகழ்ந்து பாடியுள்ளார் .

இந்த பாடல் வரிகள் சொல்லும் உண்மைக்குச் சான்றாக ஒரு சிலை ஒன்று புலியைக் குத்திக்கொல்வது போன்ற தோற்றத்தில் இதே கோயிலில் ஆற்றடி ஓரமாக அமைந்துள்ளது அச் சிலை கருணாலய வலங்கைப்புலி பாண்டியன் சிலையாகவே இருக்க வேண்டும். அந்த சிலைக்கு தனியாக கோயிலில் அறை எழுப்பப்பட்டு இன்று வணங்கப்பெறும் சிலையாக உருமாறியுள்ளது. அதன்படத்தையும் கீழே பதிவிட்டுள்ளேன்.

கடைசி அரசர் தம் வாழ்நாட்களை அரண்மணையின் ஓரிடத்தில் கழித்துக்கொண்டிருந்தார். அவர் வேதமந்திரங்களை உச்சரித்துக்கொண்டு ஒரு வேதாந்தியைப்போல,..

“வாழ்க்கை நிலையாமையுடைத்து”

எனக்கூறி ஒரு சந்நியாசியைப்போல வாழ்ந்தார் என கலெக்டர் எழுதியுள்ளார். {பேசும் ஆவணங்கள் }

பிற்காலத்தில்சொக்கம்பட்டியின் மிகப்பெரிய அரண்மணைக் கொத்தளங்களில் கற்றாழையும், இண்டும், இசங்கும், ஆமணக்கும் முளைத்துக்கிடந்தன, அங்கே பன்றிகளும், நாய்களும், கழுதைகளும், வாசம் செய்தன, அரண்மணையின் பெரிய வாயிற்படிகளின் அருகே உ

ள்ள கேணியில் பலர் நீர் இறைத்துக் கொண்டிருந்தார்கள், பல ஏக்கர் பரப்பளவுள்ள அந்த அரண்மணையைச் சுற்றிலும் மண்சுவர்கள் இடிபாடுகளுடன் காணப்பட்டன, சில சிலைகள் அங்கே நடுகற்களாகத் தரையில் புதைக்கப்பட்டிருந்தன, என்றும் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

அரண்மனை பராமரிப்பின்றி சீர்கேடு அடைந்ததால்

கருணாலய வலங்கைப்புலிப் பாண்டியன் தமது குற்றாலம் பங்களாவாகிய “வலங்கைப்புலி விலாசம்” வசம், வாசம் செய்து, தனது இறுதிநாட்களை கழித்துவிட்டு 1892 ல் மரணமடைந்தார். என தனது பேசும் ஆவணங்கள் நூலில் எஸ்.எஸ்.பாண்டியன் அவர்கள் தெரிவிக்கிறார்.

அன்பன். கி.ச.முனிராஜ்வாணாதிராயன் !

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர், வெளிப்புறம் மற்றும் இயற்கை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வானம், வெளிப்புறம் மற்றும் உரை

Share
This entry was posted in சொக்கம்பட்டி ஜமீன். Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *