கடம்பூர் ஜமீன்தார்கள்

கடம்பூர், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வானம் பார்த்த பூமி. மிகப்பெரிய கரிசல் காடு. ஒருகாலத்தில் கடம்ப மரங்கள் அடர்ந்த காடாக காணப்பட்டது இவ்வூர். இம்மரங்களை அழித்து உருவாக்கப்பட்ட ஊரே, (கடம்ப + ஊர்) கடம்பூர் என்றழைக்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகில் உள்ள நகரம் இது. நெல்லை-சென்னை ரயில்பாதையில் அமைந்துள்ளது. அனைத்து ரயில்களும் இங்கே நின்று செல்கின்றன.

சுமார் 600 வருடங்களுக்கு முன்பு இந்த பகுதியில்  பாண்டிய மன்னர்கள்  ஆட்சி புரிந்துள்ளனர். அச்சமயம் கடம்பூர் உள்பட பல பகுதிகளில் கொள்ளையர்கள் தாக்குதல் நடந்துள்ளது. கடம்பூர் ஜமீன் முன்னோர்கள் இந்தப் பகுதியில்  திசைக் காவலர்களாகப் பணியாற்றினார்கள். மன்னரின் கட்டளையை  ஏற்று அவர்கள் கொள்ளையர்களை அடக்கி ஒடுக்கினர். அதன்பிறகு இவர்களின் காவலுக்கு உள்பட்ட பகுதிகளில் திருடர்கள் தொந்தரவு இல்லாமலேயே போய், மக்கள் சந்தோஷமாக வாழ ஆரம்பித்தார்கள்.

மகிழ்ந்த மன்னர் கடம்பூர் உள்பட சுற்று புறக் கிராமங்களை ஒன்று சேர்த்து  அதை ஆட்சி செய்யும் பொறுப்பை கடம்பூர் ஜமீன் முன்னோர்களிடம் கொடுத்தார். அதன் பிறகு கரிசல் பூமியை வளம் கொழிக்கும் பூமியாக மாற்றினார்கள் ஜமீன்தார்கள். இவர்கள் அமைத்த கோயில் ஊருக்கு மேற்புறம் உள்ளது. சுமார் 500 ஆண்டுகளுக்கு தொன்மைவாய்ந்த அந்தக் கோயிலில் பெருங்கருணீஸ்வரராக சிவபெருமானும், பெரியபிராட்டியாக அம்பிகையும் அருள்பாலிக்கிறார்கள். நந்தியம் பெருமானின் இரு புறமும் ஜமீன்தார் மற்றும் ஜமீன்தாரிணி சிலைகள்  சிவபெருமானை வணங்கியபடி காணப்படுகின்றன. முன்னொரு காலத்தில் இந்த கோயிலில் திருவிழாக்கள் சீரும் சிறப்புமாக நடைபெற்றுள்ளன. 

சுற்றுப் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பிரச்னைகளைத் தீர்க்க ஜமீன்தாரை எப்படி நாடுவார்களோ, அதுபோலவே அருள்கோரி சிவபெருமானையும் நாடியுள்ளனர். மக்களுக்கெல்லாம் இந்த சிவன் பெரும் கருணை புரிந்துள்ளதால் இவர் பெருங்கருணீஸ்வரர் என்றானார். இந்த ஆலயத்தில் ஜமீன்தார் காலத்தில் பத்துநாள் திருவிழா நடந்ததுள்ளது. ஜமீன்தாருக்குப் பட்டம் கட்டி, ஊர்வலமாக அழைத்து வந்து, மாலை மரியாதை செய்துள்ளார்கள். திருவிழா காலங்களில் பெருங்கருணீஸ்வரர் உற்சவரை தங்களது மார்போடு அணைத்தும், தெருக்களில் ஊர்வலமாக சுமந்தும் இறைச்சேவை செய்துள்ளனர் ஜமீன்தார்கள்.   

ஜமீனில் எந்தவொரு நிகழ்ச்சியையும், நடவடிக்கையையும் பெருங்கருணீஸ்வரர் ஆலயத்தில் உத்தரவு கேட்டே மேற்கொண்டனர். ஒரு சமயம் கோயிலில் நடந்த ஒரு துர்சம்பவத்தினால் கோயில் நடை சாத்தப்பட்டது. அதன்பிறகு ஜமீன்தார் வாரிசுகள்கூட அந்த கோயில் பக்கம் செல்லவில்லை. இந்த கோயிலில் ஒரு மூதாட்டி மட்டும் தங்கி, பூஜை செய்து வருகிறார். கோயில் பராமரிப்பு இன்றி கிடந்தாலும், கோயிலினுள் ஜமீன்தார் முன்னோர்கள் கைகூப்பியபடி சிவனை வணங்கி நிற்கும் சிலைகள் பழைய சம்பவங்களை நமக்கு நினைவூட்டி பரவசப்படவைக்கின்றன.   

கடம்பூர் ஜமீன்தார் வாரிசுகளில் முக்கியமானவர் பூலோக பாண்டிய சொக்கு தலைவர். இவரது மகன், எஸ்.வி.எஸ் பாண்டியன் என்று அழைக்கப்பட்ட சீவ வெள்ளாள சிவசுப்பிரமணிய பாண்டிய சொக்கு தலைவன் ஆவார். இவர் பட்டமேற்று ஆட்சி செய்த கடைசி ஜமீன்தார். இவர் சிறு குழந்தையாக இருந்தபோது, தந்தையார் இறந்துவிட்டார். அந்த காலத்தில் பட்டம் ஏற்கும் ஜமீன்தார் மைனராக இருந்தால் அவரை வளர்த்துப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, ஆங்கிலேய அரசுக்கு இருந்தது. அதன்படியே இளைய ஜமீன்தார் வளர்ந்தார்.

இவர்போன்ற ஜமீன் வாரிசுகள் படிப்பதற்காக ஊட்டி போன்ற இடங்களில் பள்ளிகளும் இருந்தன. இந்த வகையில் அங்கு படித்து முடித்த எஸ்.வி.எஸ் பாண்டியன் ஆட்சிக்கு வந்தார். தன் காலத்தில் பல நற்பணிகளை மேற்கொண்டார். ஆங்கிலேயர்களுடன் நல்ல உறவு வைத்து கடம்பூர் வளர்ச்சிக்குப் பாடுபட்டார். இரண்டாம் உலகப் போரின்போதும் ஆங்கிலேயருக்கு மிகவும் உதவியாக இருந்தார்.

இந்த பகுதியில் 1942ல் விமானபடைத் தளம் அமைக்கப்பட்டது. இங்கிருந்து போருக்கு கடம்பூர் ஜமீன் மக்கள் சென்றுள்ளனர். விமானப் படைதளம் அமைக்கப்பட கடம்பூர் மக்கள் பெரிதும் உழைத்து ஒத்துழைப்பு அளித்தனர். உலகத் தரம் வாய்ந்த ரன்வே அமைக்கப்பட்டு, இப்போதும் ஹெலிகாப்டர் மற்றும் பிற வானஊர்திகள் இயங்கிவருகின்றன. 

போர்க்காலத்தில் இந்த விமான தளத்திற்குள் நுழைய அனைவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டாலும், ஜமீன்தாருக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டது. இதே ஊரில் 1927ம் ஆண்டு ஹார்வி மில்லுக்குத் தேவையான பருத்தி அரைக்கும் ஆலை ஒன்றும் ஆங்கிலேயரால் நிறுவப்பட்டது. இந்த மில்லில் 24 மனை  என்றழைக்கப்படும் பருத்தி அரவை இயந்திரம் இயங்கியுள்ளது. இதற்காகக் கரிசல் நிலத்தினை பண்படுத்தி பருத்தி விவசாயத்தினை பெருக்கியுள்ளனர். ஆங்கிலேயருக்கு ஒத்துழைப்பு நல்கியதன் மூலம் தம் மக்கள் இந்த விவசாயத்தாலும், ஆலையில், உரிய பணி செய்தும் வருமானம் பெற்று வளர்வதற்கு, வழிவகுத்தார் கடம்பூர் ஜமீன்தார்.

தற்போதும் ஜமீன் வாரிசுகள் மக்களோடு மக்களாக இணைந்தே வாழ்கிறார்கள். உள்ளாட்சி அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். ஜமீன்தார் வாரிசான மாணிக்கராஜா, கயத்தார் ஒன்றிய பெருந்தலைவராக பணியாற்றியவர். தற்போதும்  மக்கள் தொண்டாற்றி வருகிறார். அவர் தம்பி ஜெகதீஸ் ராஜா தனது தோட்டத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். விளைபொருட்களை தம் ஊர் மக்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கிறார்.

இந்த பகுதி மக்கள் தங்கள் வீட்டில் நடக்கும் விசேஷங்களுக்கு ஜமீன்தார் குடும்பத்தினரை தவறாமல் அழைக்கிறார்கள். அதோடு அவர்களிடையேயான சில வழக்குகளையும் ஜமீன்தார், தன் வீட்டிலேயே பேசி முடித்து சமரசம் செய்து வைக்கிறார். ஆலயத்துடனான ஈடுபாடு இவர்களுக்கும் தொடர்ந்து இருந்து வருகிறது. ஜமீன்தார்கள் சார்பாக தெய்வீக  திருப்பணிகளும் நடைபெற்றுவருகின்றன. சுற்று வட்டார கிராமப்புற கோயில்களை சீரமைக்க  தம்மை நாடி வரும் மக்களுக்கு வேண்டிய உதவிகளை தாராளமாகச் செய்கிறார்கள்.

ஜமீன்தார்கள் வணங்கி வரும் கோயில்களில் குறிப்பிடத்தகுந்தது, மருகால் தலைமலை சாஸ்தா கோயிலாகும். மணியாச்சி, நெற்கட்டும் செவல், கடம்பூர் ஜமீன்தார்களுக்கு இதுதான் குலதெய்வம். எனவே பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு திருப்பணிகளை இக்கோயில் கண்டிருக்கிறது. தங்கள் முன்னோர்கள் வணங்கிய இந்தக் கோயிலுக்கு, திருப்பணி மற்றும் பல விசேஷங்களை ஜமீன் வாரிசுகள் சிறப்பாகச் செய்து வருகிறார்கள்.

தென்பகுதியில் மிக அதிகமான பக்தர்கள் தரிசிக்கும் சாஸ்தா கோயிலில் இதுவும் ஒன்று. வருடங்தோறும் பங்குனி உத்திரத்தில் பல லட்சம் மக்கள் கூடுவார்கள். தாமிரபரணி ஆற்றங்கரையில், சீவலப்பேரி அருகில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. மலை மீது அமர்ந்திருக்கும் இந்தக் கோயிலின் மறுபுறம் தொல்பொருள் ஆராய்ச்சிக்கு சொந்தமான இரண்டாயிரம் வருடம் பழமையான சமணர் சிற்பங்களை வரலாற்று பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார்கள். 

ஒருகாலத்தில் மலை மீது உள்ள இந்தக் கோயிலுக்கு செல்வது கடினம். எனவே கோயில் நிர்வாகிகள் படி கட்டியதோடு, பக்தர்கள் இளப்பாறத் தேவையான நடவடிக்கைகளும் எடுத்தனர். கடம்பூர் ஜமீன்தார் ஜெகதீஸ் ராஜா, சுரண்டை ஜமீன்தாருடன் சேர்ந்து கோயிலுக்கு முன் மண்டபமும்,  ராஜா கோபுரமும் அமைத்தார். இப்படி பல திருப்பணிகள் கண்ட மருகால் தலை சாஸ்தா கோயில் கம்பீரமாக காட்சி தருகிறது.

படிகள் அமைப்பதற்கு கடம்பூர் ஜமீன்தார் மாணிக்கராஜா உதவியதை கோயில் வளாகத்தில் உள்ள ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது. அதில் ‘எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா, ரேவதி நாச்சியார் கடம்பூர் ஜமீன் அம்பதாயிரத்து ஒன்று’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜமீன்தார்கள் ஆட்சிகாலத்தில் ஜமீன்தாரிணிகள் கோயிலுக்குள் வரமாட்டார்கள். ஆனாலும் தங்கள் முன்னோர்கள் வணங்கிய சாஸ்தாவை  திருவிழாக்களில் தரிசிப்பதற்காக பங்குனி உத்திரம் அன்று கோயிலுக்கு வருவார்கள். இவர்கள் தங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட குகை மண்டபங்களை இப்போதும் கோயில் வளாகத்தில் காணலாம். 

ஆனால், அவை மணல் மூடி பராமரிப்பு இன்றி கிடக்கிறது. மருகால் தலை சாஸ்தா கோயில் மட்டுமல்லாமல் கடம்பூர் கிராமத்தில் உள்ள சிறு தெய்வ கோயில்களிலும் கடம்பூர் ஜமீன்தார்கள் திருப்பணிகள் மேற்கொண்டிருக்கிறார்கள். மாணிக்கராஜா கயத்தாறு சேர்மனாக இருந்தபோது அவ்வாறு திருத்தொண்டுகள் பல செய்திருக்கிறார்; இப்போதும் செய்துவருகிறார். 

ஆன்மிகம், ஜூன் 16-30 தேதியிட்ட இதழில் வெளியான ஜமீன் கோயில்கள் கட்டுரையைப் படித்தேன். சுரண்டை அழகு பார்வதி அம்மன், கோயில் ஏழு சமுதாயத்திற்கும் பாத்தியப்பட்டது. இக்கோயிலுக்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் மூன்றாவது செவ்வாய்க்கிழமை திருவிழா ஆரம்பமாகி 10 நாட்கள் நடைபெறும். 9வது நாள் தேரோட்டம். ஒன்றாம் திருநாள், சாளுவத்தேவர் வகையறாக்களால் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தாங்கள் செய்தியில் கூறியபடி அந்தத் திருநாள் ஒருபோதும் ஜமீன்தாரரால் நடத்தப்படவில்லை. மேலும் இக்கோயிலில் மாலை மரியாதையோ முதல் மரியாதையோ யாருக்கும் செய்யப் படுவதில்லை. ஏழுநாள் மண்டகப்படியை கோட்டை தெரு தேவர் சமுதாயத்தினர் செய்து வருகிறார்கள்.

– வ.முருகையா, தலைமை ஆசிரியர் (ஓய்வு), தலைவர் ஒன்றாம் திருநாள், சாளுவதேவர் வகையறா, அழகுபார்வதி அம்மன் கோவில், சுரண்டை.

Share
This entry was posted in கடம்பூர் ஜமீன். Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *