இலங்கையில் ஒரு மறவர் கோயில் !

மகாபாரதப் போரை நினைவு கூரும் உடப்பு திரௌபதை அம்மன் திருவிழா

உடப்பூர் க. மகாதேவன்
 
 
இலங்கையின் கிழக்கு, வடமேற்கு, மத்திய பிரதேசங்களில் சக்தி வழிபாடு முக்கியத்துவம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்துக்கள் வாழும் ஏனைய பிரதேசங்களில் சக்தி வழிபாடு காணப்படினும் இப்பிரதேசங்களில் சக்தி வழிபாடு குலதெய்வ வழிபாடாகக் காணப் படுகின்றது.
மஹா பத்திரகாளி மாரியம்மன், கண்ணகியம்மன் காளியம்மன் நாச்சியம்மன், இராக்குருசியம்மன், திரெளபதையம்மன் போன்ற தெய்வங்களுக்கான ஆலயங்கள் சக்தி வழிபாட்டிற்கு சான்று பகிர்கின்றன. அவ்வகையில் இந்து மதத்தின் தர்ம போதனை நூலான பகவத்கீதை தோற்றம் பெற்ற மகா பாரதக்கதையை சித்தரிக்கும் முகமாக ஆலயங்களும், வழிபாடுகளும், திருவிழாக்களும் முக்கிய இடம் வகிக்கின்றன.
மகாபாரதக் கதாநாயகியான தர்ம தேவதை திரெளபதியம்மன் வழிபாடு மட்டக்களப்பு, புத்தளம், பகுதிகளில் சிறப்பாக விளங்குகின்றது. மட்டக்களப்பு, பாண்டிருப்பு திரெளபதையம்மன் ஆலயம் இவற்றுக்கு சான்றாகின்றது. அத்துடன் மத்தியமலை நாட்டில் ஓரிரு இடங்களிலும் வழிபாடுகள் நிகழ்கின்றன. பக்தி சிரத்தையோடு பாரதக்கதையை ஒட்டிய உற்சவங்களும் பூஜைகளும், விசேட தீமிதிப்பு உற்சவமும் இங்கு இடம்பெறுகின்றன.
இலங்கையில் அமைந்திருக்கும் திரெளபதை தேவியின் ஆலயங்களில் தேவியின் புகழ் கூறும் ஆலயமாகவும் இற்றைக்கு 400 ஆண்டுகள் தொன்மைமிக்க ஆலயமாகவும் உடப்பு ஸ்ரீதிரெளபதை அம்மன் ஆலயம் விளங்குகின்றது.
புத்தளம் மாவட்டத்தில் சிலாபம் நகரிலிருந்து 16 மைல்கள் வடமேற்கில் உடப்புக் கிராமத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இங்குள்ள திரெளபதை அம்மன் ஸ்ரீருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீபார்த்த சாரதி சமேத ஸ்ரீ திரெளபதாதேவி ஆலயம் என மிக நீண்ட பெயரைக் கொண்டுள்ளது. இவ்வால யத்தில் 1917ம் ஆண்டு காலத்தில் அம்மனை மடாலயத்தில் வைத்துத்தான் பூஜித்து வந்தார்கள். 1917ம் ஆண்டுக்குப் பின்னர் அம்மனை பிரதிஷ்டை செய்து மகா மண்டபத்துடன் பூரணமிக்க ஆலயமாகக் கட்டி முடித்தார்கள். 1929ம் ஆண்டளவிலேயே ஸ்ரீ ருக்குமணி சத்தியபாமா சமேத பார்த்தசாரதிப் பெருமாளின் சிலை மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு அங்கிருந்த அம்மனின் சிலை கோயிலின் அர்த்த மண்டபத்தில் வைக்கப்பட்டது.
அதன் பின்னர் 1974, 1994 களில் சுவாமி விஸ்வநாதக் குருக்கள் அவர்களின் தலைமையில் குடமுழுக்கு நடைபெற்ற மையும் குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து வானுயர்ந்த 108 அடி நவதள நவகலச நலகுண்டபக்ஷ நூதன இராஜகோபுர மகா கும்பாபிஷேக நிகழ்வு வெகு கோலாகலமாக 2011-01-24ம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.

புத்தளம் மாவட்டத்திலே எழுபத்தைந்து வீதமான தமிழ் சைவ மக்கள் வாழும் கிராமம் உடப்பூராகும். நீர்வளமும் நிலவளமும் மிக்க உடப்பூருக்கென்று தனித்துவமான வரலாற்றுச் சிறப்புண்டு. அக்காலத்து அந்நியப்படையெடுப்புக்கள், போர்கள், மதமாற்றங்கள் எதற்குமே அசையாது தமக்கே உரித்தான அஞ்சா நெஞ்சுடன் வாழ்த்து வரும் குடிகளின் கோட்டையாக உடப்பூர் கடந்த பல நூற்றாண்டுகளாக விளங்குகின்றது.
தெய்வ பக்தியும் குலபக்தியும் மிக்க இவர்கள்இராமநாதபுரத்தில் இருந்து வந்து குடியேறிய மறவர் பெருங்குடிகளின் வழித்தோன்றல்களாவர். தங்களது குல தெய்வங்களான காளியம்மன், மாரியம்மன், திரெளபதை அம்மன் போன்றோருக்கு ஆலயங்கள் அமைத்து வருடாந்த உற்சவங்களை பக்தி சிரத்தையுடன் கொண்டாடியும் வருகின்றார்கள். உடப்பூரில் நடுநாயகமாக விளங்கும் ஸ்ரீ காளியம்மன் ஆலயத்துக்கு வடக்கே அரை மைல் தொலைவில் ஸ்ரீ மாரி யன்மன் ஆலயமும், தெற்கே கால் மைல் தொலைவில் ஸ்ரீ திரெளபதையம்மன் ஆலயமும் அமைந்துள்ளன.

ஆடி மாதத்தில் அன்னை ஸ்ரீ திரெளபதா தேவிக்கு ஆடித் திருவிழா பெருமை சேர்க்கும் விதமாக வெகு விமரிசையாகவும் சிறப்பாகவும் நடை பெற்று வருகின்றது. பல நூற்றாண்டு காலமாக எவ்வித விக்கினமுமின்றி இந்த விழா இடம்பெற்று வருவது இவ்வூர் மக்களின் பக்தியைப் புலப்படுத்துகின்றது. கால மாற்றத்திற்கேற்ப ஆலயக் கிரி யைகள், மரபுகள் அருகிவரும் இக் காலகட்டத்தில் தம் மூதாதையர்கள் காட்டிய வழியில் அதே பழைமைச் சிறப்புடன் உடப்பு ஸ்ரீ திரெளபதாதேவி ஆலய உற்சவத்தையும், தீமிதிப்பு விழாவையும் இன்றைய சந்ததியினர் நடாத்தி வருவது குறித்து பெருமிதம் அடைய வேண்டியுள்ளது.
இதிகாசங்களில் ஒன்றான மகா பாரதக்கதையின் ஓட்டமே இவ்வால யத்தில் நடைபெற்றுவரும் உற்சவங்களுக்கு உயிரூட்டுவனவாக அமைகின்றது. இக்கதை யைக் கொண்ட இவ்வுற் சவங்கள் மரபு ரீதியாகவும் சம்பிரதாய பூர்வமாகவும் காட்சிகள் செய்கைகள், நடிப்புகள் மூலமாகவும் கொண்டாடப்பட்டு வருகின்றன.
திருவிழாக் காலங்களில் மகா பாரதக்கதையைப் பாட்டாகவும், இசையாகவும் தெம்மாங்கு மெட்டுக ளுடனும் கிராமிய சந்தங் களுடனும் பக்கம் கூறுப வருடன் கதையாகப் படிப் பார்கள். இது அன்று தொட்டு இன்று வரை வழக்கமாக இருந்து வருகின் றது. உடப்பு திரெளபதை அம்மனின் கோயிலில் நடைபெறும் உற்சவங்கள் பதினெட்டுத் தினங்கள் நடைபெற்று, விசேட வைபவங்களாக திருக்கரகம் பாலித்தல், கொடியேற்றல், சுயம்வரக் கொண்டாட்டம், வனம்புகும் காட்சி, அருச் சணன் தவ நிலைக்காட்சி, அக்கினிக்குண்டக்காவல், தேத்தரசன் கோட்டை பிடித்தல் கர்ணன் படுகளம், தீமூட்டும் வைபவம், துரி யோதனன் படுகளம், தீக்குளிப்பு, அன் னையின் ஆனந்தநடனம், சுவாமி ஊர் வலம் உட்கொடி இறக்கம் பால்குடபவனி போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
திருக் கரகம் பாலித்தல்
இவ்வாலய உற்சவங்களில் பிரதான ஓர் இடத்தை கரகம் வகிக்கின்றது. கரகம் எடுப்பவரே அன்னை ஸ்ரீ திரெளபதை தேவியாக அருள் பாலிப்பார். முதல் நாள் மாலை ஆலயத்தில் விரார்த்தசாந்தி கிராமசாந்தி முடிந்து திருவிழா நாயகியாக கரகம் பாலிக்கின்ற பூ சகருக்கு ஸ்ரீதிரெளபதை தேவியின் தத்துவத்துக்குரிய காப்புக்கட்டும் கரியையைத் தொட்ந்து கரகம் பாலிப்பது சிறப்பு நிகழ்சியாக இடம்பெறும். ஸ்ரீதிரெளபதையம்மன் ஆலயத்திலிருந்து மாரியம்மன் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்பட்ட கரகத்திற்குப் பூசை நைவேத்தியங்கள் செய்யப்பட்டு பக்திபூர்வமாக அரோஹரா என பக்திப் பரவசமான ஒலியை எழுப்புவர்.
கரகம் மத்தள வாத்தியங்கள், மெய் யடியார்கள் சகிதம் இக்கிராமத்துக்குரிய பாரம்பரிய கும்மிமெட்டு மரபுப் பாடல்களை மத்தள பாட்டுக்காரர்கள் பாடிய வண்ணம் உலாவரும், அதே வேளை கரகம் வரும் வீதியில் ஒவ் வொரு இல்லத்திலும் தலைவாசல்களில் நிறைகுடம் வைத்து கரகம் தத்தம் இல்லங்களை அண்மித்ததும் கும்பநீரை கரகபாத மலர்களில் வார்ப்பார்கள். அத்துடன் கரகம் கும்மியடிக்கும்காட்சி மெய்யடியார்களுக்கு அருள் பாலிக்கும் காட்சியாக அமைகின்றது.
இவ்வாறு ஸ்ரீ திரெளபதை தேவியின் ஆலயத்தை அடைந்த திருக்கரகம் ஆனந்த நடனம் புரிந்து அர்த்த மண்ட பத்தை அடைந்ததும் திருக்கதவு மூடப் படும். பூசகர் கரகத்தை அம்பாளின் சந்நிதா னத்தில் வைத்து அம்பாளின் பக்கத்திலுள்ள அவளின் அருளாக விளங்குவதுமாகிய 3 அடி நீளமான வெள்ளி வாளை தலைகீழ் பாவனையில் திருக்கரகத்தின் செம்பு விளிம்பின் மேல் செங்குத்தாக நிறுத்தி வைத்திருக்கும் அற்புதக்காட்சியை திருக்கதவு திறந்ததும் மெய்யன்புமிக்க பக்திசாரத்துடன் ஜெகஜோதியாக பிரகாசிக்கும் பஞ்சாரத்தின் ஒளியில் காணலாம்.
இக்கரக உற்சவம் முதல் நாளை அடுத்து வெளிக்கொடியேற்றிய 5ம் நாளிலிருந்து ஒருநாள் விட்டு தீமிதிப்பு வரையும் நடைபெறும். கரகத்தின் பின் கொழுந்தன் கொடியும் கொண்டு வரப்படும். கொழு ந்தன்கொடி என்பது ஐந்து தலையுடைய சூலாயுதம் போல் இருக்கும். ஐந்து எலுமிச்சம்பழங்கள் அதில் குத்தப் பட்டிருக்கும். இவை பஞ்சபாண்ட வர்களைக் குறிப்பதாக பாவனை செய்யப்படுகின்றது.
கொடியேற்றம்
உற்சவங்கள் ஆகம முறைப்படி அமையாவிட்டாலும் கொடியேற்றத்துடன் கூடிய உற்சவமாகவே தீமிதப்பு உற்சவம் காணப்படுகின்றது. அத்திருவிழாவில் இரண்டு கொடிகள் ஏற்றப்படும். முதலாவது ஏற்றப்படும் கொடி துரியோதனனுக்கு உரியதான சர்ப்பக் (நாகம்) கொடியாகும். இரண்டாவது கொடி பாண்டவர்களுக்காக ஏற்றி வைக்கப்படும். இது அனுமான் கொடியாகும். பஞ்ச சூலங்கள் போல் அமைந்த பஞ்ச தலையைக் கொண்ட சூலத்தில் ஐந்து எலுமிச்சம் பழங்கள் ஏற்றி அதற்கு பட்டுத்துணி கட்டி ஏற் றப்படுகின்றது. இக் கொடிக்கம்பத்தில் அனுமானுடைய உருவம் வரையப்பட்ட கொடிச்சீலை பறக்கவிடப்பட்டிருப்பதுடன் கரகம் பாலிக்கின்ற நாட்களில் அனுமன் கொடிச்சீலை ஏற்றப்படுகின்றது. இக் கொடியேற்றிய நாளில் இருந்தே மகாபாரதக் கதை படிக்கப்படும். இதனை வெளிக்கொடி என அழைப்பர்.
சுயம்வரக் கொண்டாட்டம்-
மகாபாரதக் கதையில் ஸ்ரீ திரெளபதா தேவியின் சுயம்பரத்தை நினைவு கூடும் வகையில் வெகு விமரிசையாக அது 12ம் நாள் உற்சவமாகக் கொண் டாடப்படுகின்றது. 11ம் நாள் கரக உற்சவத்தைத் தொடர்ந்து இரவு விக்னேஸ்வர மூர்த்தி ஊர்வலம் வருவார் 13ம் நாள் விக்னேஸ்வர மூர்த்தியுடன், ஸ்ரீ பார்த்த சாரதிப் பெருமாள் ஸ்ரீ ருக்மணி சத்தியபாலா சமேதரராக எழுந்தருளி மெய்யடியார்க்கு காட்சி நல்க வீதியுலா வருவதுடன் பாரதக் கதையை தொடர்ந்து சுயம்வரக் கொண்டாட்டத்துடன் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
வனவாசக் காட்சி
துரியோதனதும் அவன் மாமன் சகுனியினதும் வஞ்கச் சூழ்ச்சியினால் பாண்டவர்கள் நாடு நகர் இழந்து வனவாசம் மேற்கொள்ளும் காட்சியை சித்தரிக்கும் வகையில் அது இடம்பெறு கின்றது. 15ம் நாள் உற்சவமாக இது இடம்பெறும் இவ் வனம் புகம் காட்சி உடப்பு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானத்திலிருந்து ஆரம்பமாகும். பஞ்சபாண்டவர்கள் ஐவரும் தெளமிய முனிவரும் அன்னை ஸ்ரீ திரெளபதா தேவி கிருஷ்ணர் சகிதம் வனம் புகும் காட்சி இடம்பெறும்.
அருச்சனன் தவநிலை
அருச்சுனன் பாசுபதாஸ்திரம் பெறு வதற்கும் கெளரவர்களை அழிப்பதற்கும் சிவனை நினைத்து தவம் செய்து வேண்டி நிற்கும் நிலையையே இந்த தவநிலைக் காட்சியாகக் கொண்டாடப் படுகின்றது. இது 16ம் நாள் திரு விழாவாகக் கொண்டாடப்படுகின்றது.
தேத்தரசன் கோட்டை பிடித்தல்
சயந்தவன் (தேத்தரசன்) என்ற அரசன் ஈசனை வேண்டி சகல வல்லமையுடனும் நிரம்பிய ஆயுதங்கள் வரங்களைப் பெற்று தனது கோட்டையை காவல் தெய்வங்கள் மூலம் பலப்படுத்தி இருந்தார்.
இக்கோட்டையை நகுலன், சகாதேவர்கள் விஷ்ணுவின் உதவியுடன் பிடித்து தேத்தரசனை தேர்க்காலில் கட்டி இழுத்து தர்மருடைய பாதத்தில் மண்டியிடச் செய்யும் கதையைச் சித் தரிக்கும் வகையில் 17ம் நாள் உற்சவமாக இது நடைபெறுகிறது. நான்கு பேர் குதிரையில் ஆடிவரும் காட்சி இதுவாகும். தீக்கிடங்கின் வடக்கே பத்திரகாளியாகவும் கிழக்கே ஐயனாராகவும் தெற்கே வைரவராகவும், மேற்கே வீரபத்திரராகவும் உருவேற்றி பலி கொடுக்கின்ற பாவனையாக இடம்பெறும் காட்சி காண்போர் உள்ளங்களை மெய்மறக்கச் செய்யும் உற்சவமாக அமைந்து விடும்.
தீமிதிப்பு
மகாபாரதத்தின் திரெளபதா தேவியின் சபதம் முற்றுப் பெறுவதை முன்னிட்டு இவ்வுற்சவம் கொண்டாடப் படுகின்றது. 18ம் நாள் உற்சவமாக நிகழ்வுறும் இது அதிமுக்கிய வைபவமா கும். இனமத பேதமின்றி இவ்வுற்சவத்தைக் கண்டு களிக்க நாட்டின் பல பகுதி களிலிருந்தும் மெய்யடியா ர்கள் கூடுவர். அவ்வாலயத் தில் கொடியேறிய முதல் நாளிலிருந்து அம்மன் திரெளபதா தேவிக்கு முன்ன தாக ஒளிர்ந்து கொண்டி ருக்கும் தூண்டாமணி விளக்கிலிருந்து அத் தீமிதிப் புக்கான தீ எடுக்கப்படுகிறது.
அத் தீயைக் கொண்டு ஹோம அக்கினியை கோயில் குருக்கள் வளர்ப்பார். கோவிலின் மூலஸ்தானத்தில் இருந்து திரெளபதையம் மனாக உருக்கொண்ட பூசகர் ஹோமம் வளர்க்கப்பட்ட அக்கினிக் குண்டலத்தை அண்மித்ததும் இவ்வூரைச் சேர்ந்த வயதில் முதிர்ந்த பெரியோர் வந்து ‘தாயே இவ்வூரை வழமை போல் காப்பாற்றுவேன் என அருள் தாருமம்மா என வேண்ட அவ்வூரைக் காப்பாற்றுவேன் என அருள் வாக்கு கொடுத்துவிட்டு அங்கே ஜெகஜோதிமயமாக வளர்க்கப்பட்ட அக்கினியை இரு கரத்தாலும் அள்ளி எடுத்து அக்கினிச் சட்டியில் வைக்கும் காட்சி பத்தர்களின் பக்தியை பறை சாற்றுகின்றது.
சுடர்விட்டு எரியும் அக்கினிச் சட்டியை பூசகர் இரு கரத்தாலும் சுமந்து கொண்டு பக்தர்கள் புடைசூழ ” கோவிந்தா கோவிந்தா” என்ற நாமம் பக்தியினை பறைசாற்ற ஆலயம் வலம் வந்து தாமரைப் புஷ்பங்களால் அலங்கரி க்கப்பட்டு தீக்கிடங்கிற்குள் வைப்பார். பூஜை நைவேத்தியங்களுடன் பெருமளவு புளியங்கட்டைகள் அடுக்கப்பட்டு தீமிதிப்புக்கு வேண்டிய அனல் வளர்க்கப்படும்.
அன்றே பகல் முழுவதும் ஆலயப் பந்தலில் மகா பாரதத்தின் 18ம் நாள் போர்ச்சுருக்கம் படிக்கப்பட்டு பொருளுரைக்கப்படும். அத்துடன் துரியோதனனின் மார்பை பிளந்து திரெளபதை அம்மன் சபதம் நிறைவேற்றும் வைபவம் இடம்பெறும். அன்று மாலை அக்கினிக் கரக ஆரம்பித் துடன், மேளதாளத்தோடு பக்தர்கள் புடைசூழ சுவாமி முத்தையா பரந்தாமன். ஆண்டிமுனையில் அமைந்திருக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தை சென்றடைவார். திரெளபதை அம்மன் ஆலயத்தில் தீமிதிப்புக்கான அனல் தயார் செய்யப்பட்டு சமிக்ஞை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்துக்கு அறிவிக்கப்படும்.
அத்துடன் சுவாமி அக்கினி கரகத்துடன் திரெளப தையம்மன் ஆலயத்தை வந்தடைவார். அதனைத் தொடர்ந்து பக்த கோடிகள் பின் தொடர்ந்து வருவர். ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் ஆலயத்தை அக்கினிக் கரகம் ஏந்திய சுவாமி அண்மித்து, தீக்கிடங்கில் தனது முதற்பாதத்தை வைத்து இறங்கியதும் பக்கதர்கள் ஒருவர் பின் ஒருவராக தீமிதிப்பார்கள். இந்த நிகழ்வு சுமார் 50 நிமிடங்கள் வரை நடைபெறும். அதில் சுமார் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவார்கள். இவை மகாபாரதப் போரை நினைவு கூருவதுடன் குலதெய்வத்தின் மீதான தீராத பக்தியை வெளிக்காட்டுகின்றது.

The Story of Udappuwa: The Maravar Suitor

http://udappu.org/1.htm

நன்றி:
திரு.முனிராஜ் வாணாதிராயர் அவர்கள் 
தினகரன்  பத்திரிகை 
தமிழ் வின் வலைத்தளம் 

Share
This entry was posted in தேவர், மறவர். Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *